புகழ்பெற்ற எழுத்தாளர்களின் இலக்கியத் தடங்களுக்காக முன்னுரைகளாக எழுதப்பட்டவற்றுடன் இலக்கிய இதழ்களிலும் வெளியான 14 கட்டுரைகளின் தொகுப்பு.
தமிழ் நாவலின் விரியும் எல்லைகள் என்ற தொடக்கக் கட்டுரையில் சிலிர்ப்பு, தவிப்பு, வெறுமை என்ற மூன்று சட்டகங்களில் ஒட்டுமொத்த தமிழ் நாவல் வரலாற்றை அடக்கிவிட முடியும் என்கிற நூலாசிரியர், அவற்றுக்கான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்.
புதுமைப்பித்தனின் வாழ்க்கையோடும் படைப்புகளோடும் தொடர்புடையவர்கள் என அவர் சார்ந்திருந்த சமூகத்தினர், கல்விப் புலத்தினர், தூய அழகியல்வாதிகளைக் குறிப்பிட்டு இவர்களுடைய அணுகுமுறைகளையும் விவரிக்கிறார்.
மெளனி இலக்கியத் தடத்தை விளக்க பிரமிளைத் துணைகொள்ளும் ஆசிரியர், க.நா.சு. இலக்கியத் தடத்தில் அவருடைய ‘பொய்த்தேவு’ நாவலைப் பல தளங்களில் செயல்பட்ட முதல் நாவல் எனக் குறிப்பிடுகிறார்.
ஜெயகாந்தனின் இலக்கியத் தடத்தில் இலக்கியத்தைக் கொண்டு மட்டுமில்லாமல் கலை, அரசியல், பத்திரிகை எனப் பல துறைகள் சார்ந்தும் மதிப்பிட வேண்டும் என்கிறார்.
‘அம்மா வந்தாள்’ பற்றிய கட்டுரையில், நாவலை விரிவாகப் பேசும் ஆசிரியர், ஜானகிராமனுக்குப் பிறகு வேறு ‘அம்மா’க்களோ அம்மாவைப் போன்ற ‘பிறரோ’ வந்ததைத் தமிழ்ப் புனைகதை உலகில் யாரும் சொல்லவில்லை என்கிறார்.
அசோகமித்திரனின் மானுடப் பக்கத்தில், அவர் தனது வாழ்க்கையை இலக்கியமாக்கியவர், இலக்கியத்தை வாழ்க்கையாக்கியவர் என்று சிலாகிக்கிறார்.
நகுலனின் தடுமாற்றமும் பெண்ணியம் பேசாத அம்பையும் குறிப்பிடக்கூடிய பிற கட்டுரைகள்.