திருப்பூர் மண்ணின் மைந்தரான நூலாசிரியர் இந்திய, சர்வதேச திரைப்படங்கள் குறித்து எழுதியுள்ள 78 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. கதை கூறல், திரைக்கதையம்சம், கதாபாத்திரம், காட்சியமைப்பு விவரித்தல் கடந்து திரைப்படங்கள் குறித்த பன்முக விவாதம் இந்த நூலின் அடிநாதமாக இழையோடுவது தனிச்சிறப்பு.
‘அப்பாக்கள் பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள். கணவன்மார்கள் ஏன் பெண்ணியவாதிகளாக இருப்பதில்லை?’ என்ற கேள்வியை ஒரு நண்பர் எழுப்ப, அதற்கான விடையை ‘திருப்பூர் திரைப்பட விழா’வில் இடம்பெறும் படங்களிலேயே தேடுவதாகக் கூறி, ஆசிரியர் விளக்கமளிப்பது நாவலின் சுவாரசியத்தை இந்த நூலுக்கு அளிக்கிறது. புணேவில் பழைய திரைப்படங்களை சேகரித்து ஆவணக் காப்பகம் உருவாக்கியதில் முக்கிய இடம் வகித்த பி.கே.நாயர் பற்றி ஏறத்தாழ மூன்று மணி நேரம் ஓடும் ‘செல்லுலாய்டு மேன்’ என்ற படம் “ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்த உ.வே.சா.வின் பயணம் போன்றது’ என்று நூலாசிரியர் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.