அமெரிகோ வெஸ்புகி :
அமெரிக்காவை நிஜமாகவே கண்டுபிடித்தவர்
‘ஒரு வேலையை ஒழுங்காகச் செய்யத் தெரியாதா உனக்கு?’ அமெரிகோ வெஸ்புகியை அறிந்தவர்கள் அனைவரும் இந்தக் கேள்வியை அவரிடம் ஒருமுறையாவது எழுப்பியிருப்பார்கள். ஒரு வேலையில் அப்போதுதான் சேர்ந்திருப்பார். அடுத்தமுறை பார்க்கும்போது, அதை விட்டுவிட்டு இன்னொரு வேலையில் இருப்பார். நகைக்கடையில் சேர்ந்திருக்கிறேன் என்பார். இல்லை அது சரியில்லை இப்போது சொந்தத் தொழில் செய்கிறேன் என்பார். அப்படியா என்ன தொழில் என்று கேட்பதற்குள் அவர் மனம் மாறிவிடும். இப்படி அங்கே இங்கே, அது இது என்று சுற்றித் திரிந்துவிட்டு இறுதியாக 45-வது வயதில் கடல் பயணத்தில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார்.
இனி கடல்தான் என் வாழ்க்கை என்று அவர் அறிவித்தபோது, வழக்கம்போல் நண்பர்கள் அவரை
நம்பவில்லை. இன்னும் சில மாதங்களில் கப்பலைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறொரு வேலையில் சேர்ந்து கொள்வார் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள். ஆனால் முதல்முறையாக அமெரிகோ தன் நண்பர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கினார். கடல் மீதான அவர் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. அது மட்டுமின்றி, வெகு விரைவிலேயே முக்கியமான ஒரு கடல் பயணியாக அவரை மக்கள் அங்கீகரிக்கவும் தொடங்கிவிட்டனர்.
கரீபியின் தீவுகள் அமெரிகோவைக் கவர்ந்தன. வெறுமனே சுற்றிப் பார்க்கவேண்டும் என்று தொடங்கிய ஆர்வம் நாள்பட நாள்பட அதிகரிக்கத் தொடங்கியது. கிழக்கிந்திய தீவுகள் குறித்தும் இந்தியா குறித்தும் இதுவரை ஒருவரும் கண்டுபிடிக்காத புதிய பகுதிகள் குறித்தும் அவர் கனவு காண ஆரம்பித்தார். அமெரிகோ கடலை நேசிக்க ஆரம்பித்த ஆண்டு 1499. அதாவது, கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகச் சொன்ன 1492-ம் ஆண்டுக்குப் பிறகு. நாம் முன்பே பார்த்ததுபோல், கொலம்பஸ் கண்டுபிடித்தது அமெரிக்காவை அல்ல, பஹாமாஸ் தீவுகளைத்தான். ஆனால் அதையே அவர் அமெரிக்கா என்று நினைத்திருந்தார்.
கொலம்பஸின் தவறைச் சுட்டிக்காட்டியவர்களில் முதன்மையானவர் அமெரிகோ. 1501-ம் ஆண்டு தற்போதைய தென் அமெரிக்காவில் உள்ள பேடகோனியா என்னும் பகுதிக்கு வந்துசேர்ந்தார் அமெரிகோ. ரியோ டி ஜெனிரோ பகுதியையும் அவர் பார்த்தார். இதை யெல்லாம் பார்க்க பார்க்க அவருக்கு வியப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதிகள் எல்லாம் ஆசியாவில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்ததை அவர் கண்டார். இந்தப் பகுதிகள் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இதுவரை அறிமுக மாகாதவை என்பதையும் அவர் தெரிந்துகொண்டார்.
இப்போது நாம் அமெரிக்கா என்று அழைக்கும் கண்டம் இதுவே. கொலம்பஸ் கண்டடைந்தது இந்த அமெரிக்காவை அல்ல. தன் கண்டுபிடிப்பை அமெரிகோ பகிர்ந்துகொண்டபோது உலகம் திகைத்துப்போனது. இப்போதுதான் கப்பலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஊர், பேர் தெரியாத ஒரு மாலுமி கொலம்பஸையே தவறு என்று சொல்கிறாரே? இவரை நம்பலாமா? கொலம்பஸைக் காட்டிலும் திறமை யானவரா இவர்? அவரையே மறுத்துப் பேசும் அளவுக்கு இவர் அதற்குள் வளர்ந்துவிட்டாரா?
ஆனால் அமெரிகோ உறுதியாக இருந்தார்.என்னை நம்புங்கள், கொலம்பஸ் புதிதாக எதையும் கண்டு பிடிக்கவேயில்லை. அவர் கிழக்கிந்திய தீவுகளுக்கு மட்டுமல்ல, ஆசியாவுக்கே சென்றதில்லை என்று சாதித்தார். அமெரிக்கா என்று இன்று அழைக்கப்படும் பிரதேசம் தனி கண்டமல்ல; அது இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது என்று அறிவித்தார் அமெரிகோ. வட அமெரிக்கா என்பது தனியொரு பிரதேசம். தென் அமெரிக்கா தனி. இது கொலம்பஸுக்குத் தெரிய வில்லை. அவருக்கு மட்டுமல்ல, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என்று எந்த நாட்டில் இருப்பவர்களுக்கும் தெரியவில்லை என்பதை அமெரிகோ புரியவைத்தார்.
அமெரிகோ இத்தாலியில் பிறந்தவர். ஆனால் அவருடைய கடல் பயணங்களை ஆதரித்தவர் ஸ்பெயின்அரசரான ஃபெர்டினாண்ட். கொலம்பஸுக்கே சவால் விடும் அமெரிகோவால் நிச்சயம் சாதனைகளைப் படைக்கமுடியும் என்று அரசர் நம்பினார். கப்பலைச் செலுத்த கற்றுத் தரும் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கி அமெரிகோவை அதற்குப் பொறுப் பாக்கினார். அமெரிகோவின் ஆர்வம் பலமடங்கு அதிகரித்தது. தன்னுடைய கடல் பயணங்கள் மூலம் தொடர்ச்சியாகப் புதிய விஷயங்களை அவர் கற்றுக் கொண்டே வந்தார். அனைத்தையும் அவர் மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அமெரிகோவை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்பவும் மதிக்கவும் தொடங்கினர்.ஒரு கட்டத்தில் அமெரிகோவை விட்டால் இந்த உலகைப் புரிந்து கொள்ள வேறு வழியே இல்லை என்னும் அளவுக்கு அவருக்கு உயர்வான இடத்தை அளித்து மரியாதை செலுத்தவும் தொடங்கினார்கள். அமெரிகோவும் புதிது புதிதாகப் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டே இருந்தார். வரைபடங்களைத் திருத்தினார். புதிய வரைப்படங்களை உருவாக்கினார். கடல் பயணத்தை மேலும் துல்லியமாக, அறிவியல்பூர்வமாக மாற்ற முடியுமா என்று ஆராய்ந்தார்.
பயணம் மேற்கொள்ளும்போதே தன்னுடைய ஐரோப்பிய நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதினார் அமெரிகோ. தான் கண்ட புதிய பிரதேசங்களை அதில் அவர் விவரித்திருந்தார். பழங்குடி மக்களின் நடை, உடை, உணவு வழக்கங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்களுடைய கடவுள் யார், அந்தக் கடவுளை எப்படி வழிபடுகிறார்கள் என்பதையும் அவர் அறிந்துகொள்ள விரும்பினார். அமெரிகோ எழுதிய கடிதங்களும் கட்டுரைகளும் திரட்டப்பட்டு புத்தகங் களாக வெளிவரத் தொடங்கின. அமெரிகோவின் புகழ் மேலும் பரவியது.
25 ஏப்ரல் 1507 அன்று வெளிவந்த வரைபடத்தில்தான் முதல் முறையாக அமெரிக்கா என்னும் பெயர் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பெயர் எப்படி வந்ததுதெரியுமா? அமெரிகோவிடம் இருந்துதான். ஆம், கொலம்பஸ் அல்ல அமெரிகோவே புதிய கண்டத்தைக் கண்டு பிடித்தார் என்பதால் அவர் பெயரை அந்தக் கண்டத்துக்குச் சூட்டுவதுதான் சரியானது என்று இந்த வரைபடத்தை உருவாக்கிய ஜெர்மானியர் ஒருவர் நினைத்தார். அதுவரை அந்தப் பிரதேசங்களுக்கு புதிய உலகம் என்னும் பெயர்தான் இருந்தது. மேலும் சிலர் வேறு பெயர்களை வைத்திருந்தார்கள்.
இதுவரை அறியப்படாத புதிய உலகத்தை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் விவரித்த முதல் கடல் பயணி அமெரிகோ வெஸ்புகி என்பதை உலகம் ஏற்றுக் கொண்டது. அமெரிக்கா என்பது ஒரு கண்டமல்ல, இரண்டு கண்டங்கள் என்பதைக் கண்டுபிடித்தவர் அவரே என்பதால் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று இரு பெயர்களில் அந்தப் புதிய உலகம் பிரிக்கப்பட்டது. இரண்டிலும் அமெரிகோவின் பெயர் நிலைத்துநின்றது.
கொலம்பஸின் தவறைக் கண்டறிந்தவர் என்னும் பெயரோடு அந்தத் தவறைச் சரிசெய்தவர் என்னும் பெயரும் அமெரிகோவுக்கு வந்து சேர்ந்தது. அதற்குப் பிறகும் அமெரிகோ தொடர்ந்து பல பயணங்களை மேற்கொண்டார் என்றாலும் அவை பற்றிய செய்திகள் நமக்கு அதிகம் கிடைக்கவில்லை.
ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.ஒரு வேலையை ஒழுங்காகச் செய்யத் தெரியாதா உனக்கு?” என்று அதற்குப் பிறகு ஒருவரும் அமெரிகோவைப் பார்த்து கேட்டிருக்க மாட்டார்கள் என்று நம்பலாம். இன்றுவரை அவர் பெயரை நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இதைவிட வேறு பெரிய சாதனை என்ன இருக்கமுடியும்?
கடல் பயணங்கள் – மருதன்
விலை : 175/-
Buy this book online: https://www.heritager.in/product/kadal-payanangal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Website: www.heritager.in
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/