கழுகுமலையின் வடக்குப்பக்கத்தில் சற்று உயரமான இடத்தில் இயற்கையான இரண்டு பெரிய குகைத் தளங்களோடு சில சிறிய குகைத்தளங்களும் நிறைந்த பகுதி உள்ளது. இதன் மையப்பகுதி பிற்காலத்தில் அய்யனார் கோயிலாக மாற்றப்பட்டு இப்பகுதியின் கிராம மக்களால் வழிபாடு நடத்தி வரப்படுகின்றது. அய்யனார் கோயில் பகுதியின் முன்புறத்தில் கருங்கற்கள் கொண்டு செவ்வக வடிவத்தில் பெரியமேடை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கிராம தெய்வங்களுக்குச் சிற்றாலயங்கள் எடுக்கப்பட்டுள்ளன. செவ்வக வடிவில் உள்ள மேடைக்கு மேலே குகைத்தளத்தின் முற்பகுதியில் கற்சுவரும் வாயிலும் அமைக்கப்பட்டு உட்புறம் அய்யனார் திருவுருவம் உள்ள கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோ யிலின் முன்புறம் பெரிய சுதையாலான காவல்பூதமும் அய்யனாரின் வாகனமான கல்லாலான சிறிய குதிரைகளும் காணப்படுகின்றன. தற்போது அய்யனார்கோயில் உள்ளபகுதியும் அதன் கீழ்ப் புறமும் மேல்புறமும் உள்ள பாறைச்சரிவும் இயற்கையான குகைத்தளங்களுமே விசயநகரவேந்தர் நாயக்கர்காலம் வரை தமிழ்நாட்டில் மிகச்சிறந்த புகழ்பெற்ற சமணப்பள்ளியாக விளங்கியிருக்கிறது. இதனையே பிற்காலத்தில் சமணசமயம் இப்பகுதியில் செல்வாக்கு இழந்த நிலையில் இங்கிருந்த சமணர்கள் இப்பள்ளியைவிட்டுச் சென்றபின்பு காலத்தின் கோலத்தால் கைவிடப்பட்டு பாழ்பட்டுக் கிடந்த இச்சமணப் பள்ளி கிராமத்தெய்வங்கள் உள்ள அய்யனார் கோயிலாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டிலும் குறிப்பாகத் தென்தமிழ்நாட்டிலும் இருந்த ஊர்ப்பள்ளிகளும் மலைப்பள்ளிகளும் சமணர்களால் ‘பிரம்மசாஸ்தா’ ‘பிரம்மயட்சன்’ என்று வழிபடப்பட்ட கிராம தெய்வமான அய்யனார் வழிபாட்டோடு இணைக்கப்பட்டு அய்யனார் கோயிலாக மாறியுள்ளன. சுயத்தாற்றின் அருகிலுள்ள இளவேலங்கால் ஊர்ப்பள்ளியும் பாண்டியநாட்டின் வடக்கு எல்லையிலுள்ள திருச்சிமாவட்டத்து மொட்டைமலை அய்யனார் கோயிலும் இதற்குச் சிறந்த சான்றுகளாக உள்ளன. இன்றும் இக்கோயில்களில் பழைமையான தீர்த்தங்கரர்த் திருவுருவங்கள் வழிபாட்டில் கிராமதெய்வமாக வழிபடப்படுகின்றன. தமிழ்நாட்டு வைதீகச் சமயம் செல்வாக்குடன் விளங்கிய சமண, பெளத்த சமயங்களை அழிப்பதற்கு எடுத்துக்கொண்ட உத்திகளில் ஒன்றாகச் சமணசமயத்தில் இருந்த பிரம்ம சாஸ்தா பிரம்ம யட்சன்’ என்ற வழிபாட்டைத் தமிழ்நாட்டுக் கிராம தெய்வமான அய்யனார் வழிபாட்டோடு இணைத்துக் கொண்டது என்று மயிலை.சீனி.வேங்கடசாமி கருதுகின்றார். இம்முறையில் கழுகுமலைச் சமணப்பள்ளிப் பகுதியும் காலப்போக்கில் அய்யனார் கோயிலாக மாறியிருக்க வேண்டும்.
துறவியர் தங்கும் குகைகள் :
மதுரையைச் சுற்றியுள்ள குன்றங்களிலுள்ள இயற்கையான குகைத்தளங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து சமணத்துறவிகள் வாழ்ந்திருப்பது போன்று கழுகுமலைப்பள்ளியும் அதன் தொடக்ககாலத்தில் சமணத்துறவியர் உறையும் இடமாக இருந்திருக்க வேண்டும் என ஐயம் தோன்றுகிறது. கழுகுமலையில் வடக்குப்பக்கம் தரைமட்டத்திலிருந்து நூற்றைம்பது அடி உயரத்தில் வடக்கு நோக்கிய நிலையில் சிறிதும் பெரியதுமாக நான்கு இயற்கையான குகைத்தளங்கள் உள்ளன. இவற்றில் கி.பி.எட்டாம் நூற்றாண்டிற்கு முன்பு துறவியர் தங்கி வாழ்ந்தார்களா என்பதனை அறிய வெளிப்படையான போதுமான சான்றுகள் இல்லை. பிற்காலத்தில் சுதையால் பூசப்பட்டும் சுவர் எழுப்பப்பட்டும் இவற்றின் தொடக்ககால வரலாற்றை அறியமுடியாமல் செய்துவிட்டனர்.
கழுகுமலையில் ஏராளமான திருவுருவங்கள் சமணத் பாறையில் புடைப்புச் சிற்பங்களாக கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்து செய்விக்கப்பட்டு அது சமண வழிபாட்டுத் தலமாக மாறியுள்ளது. இதன் கீழ்ப்பக்கம் உள்ள முதல்சிற்பத்தொகுதியை இரண்டாவது பாகுபலி, சிற்பத்தொகுதியை வடக்குநோக்கி அடுத்துள்ள பார்சுவநாதர், முக்குடைநாதர், அடுத்து முதலாவது குகைத்தளம் உள்ளது. சுமார் 30 அடி நீளமும் 15 அடி அகலமும் 10 அடி உயரம் கொண்டதாக உள்ள இக்குகைத்தளம் முழுமையையும் பிற்காலத்தில் சுண்ணாம்பால் பூசியுள்ளனர். இதன் முன்புறம் சுவர்யெழுப்பி சிறிய வாயில் அமைத்துள்ளனர். இக்குகைத்தளத்தின் உட்புறம் அமர்வதற்குரிய திண்ணையும் இருக்கையும் அமைக்கப்பட்டு இக்குகைத்தளத்தை அண்மைக்காலத்தில் முற்றிலுமாக உருவமாற்றம் செய்துள்ளனர். இங்கு கற்படுக்கைகள் இருந்ததா. பழைமையான கல்வெட்டுகள் இருந்தனவா என்பதை அறியமுடியவில்லை. அண்மைக்காலத்தில் சமணத்துறவியர் இங்கு வந்து தங்கியபோது செய்விக்கப்பட்ட சுதையாலான தீர்த்தங்கரர் உருவம் ஒன்று சுவர்ப் பகுதியில் உள்ளது.
முதலாவது குகைத்தளத்தினை அடுத்து மேற்குப் பக்கம் உள்ள இரண்டாவது குகைத்தளம் முன்பு சுவர்கள், மேடை எழுப்பித் திருவானைக்கா அய்யனார் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இது சுமார் கிழக்குமேற்காக பதினைந்தடி நீளமும் தென்வடலாக பத்தடி கொண்டதாக உள்ளது. இதன் உட்புறம் பாறையில் முக்குடையின் கீழே அமர்ந்த தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புருவமாக செய்விக்கப்பட்டுள்ளன. அவற்றின் அருகில் பழைமையான வட்டெழுத்துக் கல்வெட்டுப் பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. குகைத்தளத்தின் உட்புறம் அய்யனார் கருவறைக்கு முன்புறமுள்ள மண்டபத்தில் தனித்தநிலையில் உள்ள முக்குடைக்கீழ் அமர்ந்த தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று வழிபாட்டில் உள்ளது. இக்குகைத்தளத்தின் முகப்பின் மேலே வரிசையாக பாறையில் தீர்த்தங்கரர்ச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
அய்யனார்கோயிலுக்கு அடுத்துள்ள சமணத்தீர்த்தங்கரர் பாறைச் சிற்பங்களுக்கு மேற்கே மூன்றாவது, நான்காவது குகைத்தளங்கள் வடக்குநோக்கி அமைந்துள்ளன. மூன்றாவது குகைத்தளம் 6 x 5 அடி அளவு கொண்டதாக உள்ளது. இதில் கற்படுக்கைகள் இல்லை. இதன் முன்புறம் மருந்து இடிப்பதற்குரிய உரல்கள் பாறையில் வெட்டிச் செய்விக்கப்பட்டுள்ளன. மூன்றாவது குகைத்தளத்தினை அடுத்து (15×10அடி) அளவுள்ள நான்காவது குகைத்தளம் உள்ளது. இங்கும் கற்படுக்கைகள் இல்லை. இக்குகைத்தளத் திலிருந்து மேற்காகச் சென்று தெற்குநோக்கிச் சென்றால் சிறிது தூரத்தில் எக்காலத்திலும் வற்றாத நீர்ச்சுனை ஒன்று உள்ளது. இதுவே கழுகுமலைப்பள்ளியில் உறைந்தவருக்கும்பள்ளிக்கு எல்லாக் வருகின்றவர்களும் காலங்களிலும் குடிதண்ணீரைத் தரும் நல்ல நீருற்றாக இருந்திருக்க வேண்டும். கழுகுமலை அடிவாரத்திலும் மழைபெய்யும் காலங்களில் நீர்தேங்கும் குளங்கள் உள்ளன.
கல்வெட்டுகள் :
கழுகுமலைச் பள்ளியில் மொத்தம் சமணப் 102 பழைமையான கல்வெட்டுகள் உள்ளன. இவை இந்திய அரசின் தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதிகளிலும் ஆண்டறிக்கையிலும் வெளியிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் 99 கல்வெட்டுகள் எந்தக்காலம், எந்த மன்னன் ஆட்சியாண்டு முதலிய காலக்குறிப்புகள் குறிப்பிடாமல் இங்கு பாறையில் செய்விக்கப்பட்டத் தீர்த்தங்கரர் திருவுருவங்களுக்குக் கீழே அவற்றை செய்வித்தோர் பற்றிய விளக்கக் குறிப்புக்களாக உள்ளன. ஏனைய மூன்று கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டு அய்யனார் கோயில் உட்புறம் பாறையில் தனியாகப் பொறிக்கப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு கல்வெட்டுகள் முற்காலப் பாண்டிய மன்னர்களின் (மாறஞ்சடையன்) ஆட்சியாண்டுடன் அய்யனார் கோயிலுக்குக் கிழக்கே பாறையில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே காலத்தினைச் சார்ந்த கல்வெட்டுகள் அல்ல. கி.பி.எட்டாம் நூற்றாண்டிற்கும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட பல நூற்றாண்டுகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகளில் கி.பி.11-12ஆம் நூற்றாண்டைச் சார்ந்த் இரண்டு கல்வெட்டுகள் மட்டும் தமிழ்எழுத்துக்களில் உள்ளன. ஏனைய கல்வெட்டுகள் பாண்டியநாட்டில் பெருவழக்காய் இருந்த வட்டெழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை முற்காலப்பாண்டியர் காலத்திலும் பாண்டிய நாட்டில் சோழர் ஆட்சி இருந்த காலத்திலும் பொறிக்கப்பட்டிருப்பதை இவ்வெழுத்துக்களின் வடிவமைப்பைக் கொண்டு கூறலாம்.
(நூலிலிருந்து)
கழுகுமலை சமணப்பள்ளி – முனைவர் வெ. வேதாசலம்
விலை: 700/-
Buy this book online: https://www.heritager.in/product/kazhugumalai-samana-palli/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers