சங்க இலக்கியங்கள், திருமுறை, புராணம், கம்பராமாயணம், அருணகிரியார் தொடங்கி பாரதி, கவிமணி வரையிலான தனது சிந்தனைச் சிதறல்களை 27 தலைப்புகளிலான கட்டுரைகளில் படைத்துள்ளார் நூலாசிரியர்.
நற்றிணை நவிலும் மகளிர் பண்பாடும் தாய்ப்பாசமும், திருமுறையில் மகளிர், பெரிய புராணத்தில் பெண்மணிகள் ஆகிய கட்டுரைகள் மகளிரைப் பெருமைப்படுத்துவதாக உள்ளன.
திருமுறைப் பாடல்களும் கருத்துகளும் கம்பரால் எவ்வாறு ஆளப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது ‘கம்பனில் திருமுறை ஆட்சி’ கட்டுரை. ‘சிலம்பால் அறியலாகும் பரதன் வரலாறு’, ‘கம்பன் கண்ட கதிரவன் தோற்றம்’ ஆகியவை புதிய வாசிப்பனுபவத்தைத் தருகின்றன.
‘தனிப்பாடல் புனலில் ராமாயண துளிகள்’ கட்டுரை, தனிப்பாடல்கள் பலவற்றில் ராமாயண கருத்துகள் ஏற்கெனவே பரவியிருந்ததை எடுத்துரைக்கிறது.
இனியது இனியது உலகம் கட்டுரையும், முதுமையின் பெருமை, வாசிப்பின் மேன்மை ஆகியவற்றை உணர்த்தும் இரு கட்டுரைகளும் பொதுவாக உள்ளன. என்றாலும் படிப்பதற்கு சுவையானவை. வெண்பூதியார் என்ற சங்ககாலப் புலவரின் பெயர்ச் சிறப்பை ஆராய்ந்து, அவரது புலமைத் திறத்தை எடுத்துரைக்கும் கட்டுரை சிறப்பான ஒன்று.
பரிபாடல்-நூற்சிறப்பும் பா நயமும், ஐங்குறுநூறு வழி அறியலாகும் அருஞ்செய்திகள், நீதிநெறி விளக்கம் நவிலும் கற்றோர் பெருமை, கவிமணியின் தமிழ்ப்பற்று, பல்கோணக் கவி பாரதி -ஒரு பார்வை உள்ளிட்ட கட்டுரைகளும் இலக்கியச் செறிவுடன் உள்ளன.
அடையைப் பிழிந்து தேனைத் தருவதுபோல எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைத் தொகுப்பை, அனைத்து வயதினரும் வாசித்து மகிழலாம்.