சங்க இலக்கியத்துக்கும் முற்பட்டதாக தொல்காப்பியம் இருக்க முடியாது எனவும், சங்க காலத்துக்கு அடுத்து வந்த களப்பிரர் காலத்தில் தான் தொல்காப்பியம் பிறந்திருக்க வேண்டும் என்ற கருத்தை நூலாசிரியர் முன்வைக்கிறார்.
தொல்காப்பியச் சிந்தனைகள் சில திருக்குறளிலும் இருப்பதால், இரண்டு நூல்களும் சமகாலத்தைச் சேர்ந்தவை என்று கூறும் நூலாசிரியர், இரண்டும் களப்பிரர் காலத்தில் பிறந்தவை எனவும், அதனாலேயே அக்காலத்திய சிந்தனைகள் இரண்டு நூல்களிலும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
தொல்காப்பியர் காலத்திலேயே வேத சமயம் இங்கே காலூன்றிவிட்டதால், வருணன் நெய்தல் நில தெய்வமாகி இருக்க வேண்டும் என்றும், இதிலிருந்தும் தொல்காப்பியம் சங்க இலக்கியத்திற்குப் பிந்தியது என்பதை உணரலாம் என்று நூலாசிரியர் தெளிவுபடுத்துகிறார்.
ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையையும், ஒவ்வொரு நிலத்தின் தனித்த கூறுகளையும், நிலம் சார்ந்த மக்களின் வாழ்வாதாரங்களையும் நூலாசிரியர் இதில் சுட்டிக்காட்டி உள்ளார்.
சிரிப்புக்கும், அழுகைக்கும் இடையேயான வாழ்க்கை நிலையை இளம்பூரணர் உரையுடன் எடுத்துக் கூறி இருப்பது மிகவும் சிறப்பு.
தொல்காப்பியர் ஒரு சமணராக இருப்பதற்கான பல சான்றுகள் இருப்பதை நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார். இலக்கண நூலான தொல்காப்பியத்தின் மூலம் அன்றைய மக்களின் வாழ்நிலையைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.