திருநெல்வேலி நீண்ட சரித்திரப் பாதையைக் கொண்டுள்ளது. அகத்தியரின் காலத்திலிருந்து தொடங்கும் இதன் வரலாறு பாண்டியர்கள், பல்லவர்கள், சாளுக்கியர்கள், முகலாயர்கள், நாயக்க வம்சத்தினர், பாளையக்காரர்கள், பின்னர் ஆங்கிலேயர்கள் எனப் பலரது ஆட்சியின் கீழ் இருந்துவந்துள்ளது. ராணி மீனாட்சியம்மாள், திருமலை நாயக்கர், சந்தா சாகிப், மாவஸ்கான், நவாப் முகமது ஆலி, கட்டபொம்மு, பூலித்தேவர், மருதநாயகம் எனும் யூசுப்கான், எட்டயபுர மன்னர் எனப் பலரது வரலாற்றை திருநெல்வேலி சரித்திரம் தன்னுள்ளே கொண்டுள்ளது.
திருநெல்வேலி ஜில்லாவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அதனாலேயே சுதந்திரப் போராட்டத்தின் எழுச்சியும் அதிகமாக இருந்தது. ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது பிரெஞ்சுப் படையினரும் டச்சுப் படையினரும் திருநெல்வேலி ஜில்லாவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
ஆங்கிலேயர்களுக்கு முந்தைய காலத்திலிருந்து அவர்களது இறுதிக்காலம் வரையிலான திருநெல்வேலியின் முழுமையான சரித்திரத்தை குருகுஹதாஸப் பிள்ளை ஆதாரங்களுடன் பதிவுசெய்துள்ளார். 1931ல் எழுதப்பட்ட ‘திருநெல்வேலிச் சீமைச் சரித்திரம்’ எனும் இந்தப் புத்தகம், தற்போது எளிமையான நடையில், இன்றைய தலைமுறையினர் படிக்கும் வகையில் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.