தொண்டை நாடு பெயர் காரணம் :
தொண்டை நாடு தமிழகத்தின் பழமையான நாடுகளில் ஒன்றாகும். இப்பகுதி மூவேந்தரின் ஆட்சியில் நேரிடை தொடர்பு இல்லாது இருப்பினும் சேர சோழ பாண்டிய நாடுகளை விடப் பழமையான நாட்டுப் பிரிவுகளையும் மனித நடவடிக்கைகளையும் கொண்ட பகுதியாக விளங்கியது. சோழ மன்னனுக்கும் பீலிவளை என்ற நாக இளவரசிக்கும் பிறந்த குழந்தை கிழக்குக் கடற்கரையில் ஒதுங்கிப் பின்னர் இப்பகுதியை ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இக்குழந்தை கடல் திரையில் தொண்டைக்கொடியைச் சுற்றி மிதந்து கரை ஒதுங்கியமையால் தொண்டைமான் இளந்திரையன் என அழைக்கப்பட்டு இப்பகுதியை ஆட்சி செய்யத் தொடங்கியமையால் தொண்டை நாடு எனப் பெயர் பெற்றதாக கூறுவர்.
தமிழகத்தின் நுழைவாயிலாக இப்பகுதி தொண்டை போல இருப்பதாலும் இப்பெயர் வழக்கில் வந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. குறும்பர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். காடுகளைத் திருத்தி நாடாக்கி தொண்டை நாட்டை வளம் மிக்க பகுதியாக மாற்றியவர்கள் இப்பகுதியின் குடிகளான வேளாளர்கள். கரிகாலச்சோழனும் தொண்டைமான் இளந்திரையனும் வேளாண் தொழிலுக்குச் சிறப்பிடம் கொடுத்து வேளாளர்களை ஆதரித்தனர்.
பெரும்பாணாற்றுப்படையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் தொண்டைமான் இளந்திறையனைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். சோழ மன்னன் கரிகால்வளவன் இப்பகுதியைத் தனது ஆட்சியின் கீழ் ஆட்சிபுரிந்ததாக இப்புலவர் கூறுவார். ஆதொண்டைச் சக்கரவர்த்தியும் இப்பகுதியில் ஆட்சி புரிந்துள்ளார். இவர்கள் வேளீர் வழி வந்தவர்கள் என சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். இவரைப்பற்றி ஒளவையாரும்பாடியுள்ளார். கரிகாலனின் பெயரனே தொண்டைமான் இளந்திரையன் என பி.டி. சீனிவாச அய்யங்கார் குறிப்பிடுவார். தொண்டை நாட்டில் அருவா நாடு, அருவாவடதலை என்ற இருபகுதிகள் இருந்தன. கிரேக்கப் புவியியல் அறிஞர் தாலமி என்பார் இப்பகுதியை அருவானொய் எனக் குறிப்பிடுகின்றார். இரண்டு பெண்ணையாறுகளுக்கு இடையில் இப்பகுதி இருந்தாக இவர் குறிப்பிடுகின்றார்.
நாட்டுப் பிரிவுகள் :
தொண்டை நாடு 24 கோட்டங்களாக அக்காலத்தில் பிரிக்கப் பட்டிருந்தது. காடு திருத்தி நாடான பின் இப்பகுதிகள் பிரிக்கப்பட்டு வேளாண்மைக்கு உட்படுத்தப்பட்டன. 24 கோட்டங்களில் பல நாடுகள் இருந்தன. குறும்பர்கள் இக்கோட்டங்களில் மண்கோட்டைகளைக் கட்டி வாழ்ந்தனர். அண்மைக்காலம் வரை பல மண்கோட்டைகள் இப்பகுதியில் இருந்ததாகக் கூறுவர் கோட்டை என்பதே கோட்டம் என வழங்கப்பட்டது எனக் கனகசபைப்பிள்ளை கூறுவார். தமிழ்நாட்டில் நாட்டுப்பிரிவுகளின் முன்னோடியாக இக்கோட்டங்கள் விளங்கின. இக்கோட்டங்களின் அடிப்படையில் தான் பிற்காலத்தில் சோழ மன்னன் முதலாம் இராஜராஜன் சோழ நாட்டில் வள நாடுகளை உருவாக்கினார். தொண்டை மண்டல சதகத்திலும் சேக்கிழார்சுவாமிகள் புராணத்திலும் கோட்டங்கள் குறிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் கிடைத்த 1514 ஆம் ஆண்டைச் சார்ந்த செப்புப் பட்டயத்தில் தொண்டை நாட்டின் கோட்டங்களும் அவற்றில் இருந்த 79 நாடுகளும் குறிக்கப்பட்டுள்ளன. தொண்டை மண்டலத்தில் கோட்டங்களும் நாடுகளும் முதன் முதலாக உருவாகியதற்குக் காரணம் இப்பகுதியில் வேளாளர்களின் பரவலே. ஊர்களை உருவாக்கி வேளாண்மையை பெருக்கி நாடுகளை வகைப்படுத்தி ஆட்சி அமைப்பை அரசுகளை உருவாக்கியமையால் இப்பிரிவுகள் தமிழகத்தில் முதன் முதலாக இப்பகுதியில் தோன்றின. இந்நாடுகளின் வருவாய் நிருவாகத்தை வேளாளர்கள் அடங்கிய நாட்டார் என்னும் வேளாளர் குழுஅமைப்பே செய்து வந்தனர்.
நாட்டார் என்பது நிருவாக அமைப்பே தவிர இது ஒரு சாதியின் பெயராகவோ வகுப்பின் பெயராகவோ விளங்கவில்லை. ஊர்களின் நிருவாகத்தை ஊரார் எனப்படும் வேளாளர் அமைப்பு கவனித்து வந்தது. நகரங்களில் நகரத்தார் என்னும் வணிக அமைப்பு நிருவாகத்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியே நாடு சுதந்திரம் பெற்ற பின்பும் பல்வேறு ஊர்களின் மணியம் என்னும் கிராம நிருவாகத்தை வேளாளர்களே தொன்று தொட்டு கவனித்து வந்தனர் என்பது இங்கு ஈண்டு நோக்கத்தக்கது.
பிற்கால சங்க இலக்கியமான மலைபடுகடாம் என்னும் நூலில் கோட்டம் பற்றிய குறிப்புகள் உள்ளன. பொது ஆண்டு 6 ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்ற பல்லவர் கால செப்புப்பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் 14 கோட்டங்களின் பெயர்கள் மட்டுமே கிடைத்துள்ளன. காலத்தால் முற்பட்டதாக விளங்கும் பல்லவ மன்னன் சிம்மவர்மனின் (பொ.ஆ.525-575) செப்பேட்டில் கோட்டம் குறிக்கப்பட்டுள்ளது. சோழர்க் கால கல்வெட்டுகளில் மேலும் 7 கோட்டங்களின் பெயர்கள் புதியதாக கிடைத்துள்ளன. ஆக 11 ஆம் நூற்றாண்டு முடிய 21 கோட்டங்களின் பெயர்களே கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. பொது ஆண்டு 1102 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்றில் புதியதாக பாவித்ரி கோட்டம் என்ற கோட்டத்தின் பெயர்குறிக்கப்பட்டுள்ளது. கோட்டங்கள் பலநாடுகளை உள்ளடக்கியது. சில கோட்டங்கள் ஒரே நாட்டைக் கொண்டிருந்தன. சில கோட்டங்கள் பத்து நாடுகளை உள்ளடக்கியதாக இருந்தன. வெண்குன்றக் கோட்டம் மட்டும் 15 நாடுகளைத் தன்னில் கொண்டு விளங்கியது.
கோட்டங்களைப் பல்லவர் காலத்தில் நாட்டார் எனும் வேளாண் குழுவே ஆட்சி புரிந்தன. பல்லவர்காலத்தில் அரசு நிருவாகத்தில் வேளாளர்கள் மிகுந்த அளவில் இடம்பெற்றனர். தொண்டை மண்டலத்தில் இருந்த நிலங்களை அளந்து அதன் எல்லைகளை குறிக்கும் பணியை நாட்டார் எனப்படும் வேளாளர் அமைப்பு செய்ததாகப் பல்லவர்களின் செப்பேடுகள் குறிப்பிடும். அவ்வகையில் வெண்குன்றக்கோட்டத்தின் நாட்டார் என வழங்கப்பட்ட வேளாளர்நிருவாக அமைப்பு கொடை அளிக்கப்பட்ட நிலத்தை படாகை நடத்து எல்லைகளை நிர்ணயம் செய்து கல்லும் கள்ளியும் நாட்டி அறையோவை அறிவிப்பு செய்தனர்.
தொண்டை மண்டலத்தின் கோட்டங்களாக 1. ஆமூர் கோட்டம். 2. செங்காடு கோட்டம். 3. செம்பூர் கோட்டம், 4. எயில் கோட்டம். 5. ஈக்காடு கோட்டம், 6. ஈந்தூர் கோட்டம். 7. களத்தூர் கோட்டம், 8. காளையர் கோட்டம், 9. குன்றவர்த்தன கோட்டம், 10. மனையில் கோட்டம், 11. மேலூர் கோட்டம். 12. படுவூர் கோட்டம், 13. பையூர் கோட்டம், 14 பையூர் இளம் கோட்டம், 15. பல்குன்றக் கோட்டம், 16 பௌத்திர கோட்டம், 17. புழல் கோட்டம், 18. புலியூர் கோட்டம், 19. தாமர் 20. திருவேங்கடம் கோட்டம். 21. ஊத்துக்காட்டுக் கோட்டம் 22. வெண்குன்றக் கோட்டம் போன்றவையும் விளங்கின. கோட்டத்திற்கு இணையான நாடுகளாகப் பங்கள் நாடு, பெரும்பாணப்பாடி நாடு, ஒய்மா நாடு, மேலடையறு நாடு, கீழடையறு நாடு போன்றவை பல்லவர்களின் விளிம்பு எல்லைகளில் இருந்தன.
வேளாண்மை மிகுந்து உபரி உற்பத்தி நிலை தோன்றிய பின் நாடு என்னும் பிரிவு விரிவு படுத்தப்பட்டது. அவற்றின் நிருவாகப் பொறுப்பை வேளாளர் சமூகம் ஏற்று அரசருக்கு ஆட்சியில் உதவி புரிந்தது. எனவே தொடக்க நிலையில் இனக்குழுவாக இருந்த சமூகத்தில் வேளாண் சமூகம் பெருகிய நிலையில் நாடு உருவாகி அரசன் உருவாக்கப்பட்டான். இது வரலாற்றுக் காலத்தின் தொடக்கம் எனலாம். அவ்வகையில் தமிழகத்தில் முதன்முதலில் வேளாண் சமூகத்தின் பரவலால் பல கோட்டங்களும் நாடுகளும் தொண்டை மண்டலத்தில் தோன்றின. இதனைப் பின்பற்றியே பாண்டிய நாட்டிலும் சோழநாட்டிலும் பிற்காலத்தில் வளநாடுகள் தோன்றின என்பார் பேராசிரியர் சுப்பராயலு. சோழர்காலத்தில் தொண்டை மண்டலம் அவர்களது ஆட்சிக்குட்பட்டு இருந்தபோதிலும் சோழ நாடு போன்று வளநாடுகளை முதலாம் இராஜராஜன் உருவாக்கவில்லை. காரணம் தொண்டைமண்டலத்தில் ஏற்கனவே வேளாளர்களின் வேளாண்மைஉற்பத்தியால் வருவாய்க்கான நாட்டுப் பிரிவுகளும் கோட்டப் பிரிவுகளும் வேளாளர்களால் நாட்டார் என்னும் அமைப்பின் வழியாக செயல்படுத்தப்பட்டு அரசின் நிருவாகத்திற்கு உதவிகள் புரிந்தன. (நூலிலிருந்து)
சித்தரமேழி பெரியநாட்டார் (ஒருங்கிணைந்த வேளாளர் வரலாறு) – பேராசிரியர் சு.இராசவேலு
விலை:300 /-
வெளியீடு: பண்பாட்டு பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/chitramezhi-periyanaattaar/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers