வீரம் விளைந்த வேலூர் கோட்டை

தமிழகத் தாயின் வேலூர் என்னும் மணிமுடியில் மாணிக்கமாக பெருமை சேர்ப்பது மிகச் சிறந்த கச்சிதமான இராணுவக் கட்டட திர்மாணக்கலை நயம் மிக்க வேலூர்க் கோட்டைதான் என்றால் அது மிகையாகாது. கோட்டை இன்னும் அழியாமல் அகழியோடு உள்ளது என்றாலும், வரலாற்று வீரதீர செயல்களை நடத்திய போர்கள் ஏராளம் எனலாம். 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகரப் பேரரசு ஐரோப்பிய வடிவமைப்பில் முதலைகள் நிறைந்த அகழியுடன் கட்டிய கோட்டை வேலூர் கோட்டையாகும். வேலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் இருபது கோட்டைகள் உள்ளன. இவைகளில் மலைக் கோட்டைகளில் சிறந்தது செஞ்சிக்கோட்டையும், தரைக்கோட்டை களில் சிறந்தது வேலூர் கோட்டையும் ஆகும். வேலூர் கோட்டை தரையில் கட்டப்பட்ட கோட்டைகளிலேயே மிகவும் சிறப்பாகவும் ராணுவ நுணுக்கங்கள் உடையதாகவும் போர் முறையில் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில் மிகச் சிறப்பாக முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட கோட்டை என வரலாற்று ஆய்வாளர் திரு. தமிழ் புகழேந்தி அவர்கள் கூறியுள்ளார்கள். போஜராஜனின் “யுக்தி கல்பதாரு” என்னும் நூலில் இருவகை கோட்டைகளான “அக்ரிதரம்” (இயற்கையான கோட்டை) ”கிரித்ரம்” (செயற்கையான கோட்டை) ஆகியவைகளைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இவைகளில் வேலூர் கோட்டை வேல மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே கட்டப்பட்டதால் (கோட்டை கட்டப்படும்போது கோட்டை அமைந்த இடம் வேலமரங்கள் அடர்ந்த காடாக இருந்தது என்பர்). இக்கோட்டை வனதுர்க்கம் என்றும், கிழக்கு முகமாக ஒரே வாயில் கொண்டுள்ளதால் ஏகமுக துர்க்கம் எனவும், கோட்டையின் அமைப்பு ஆமையின் வடிவினைப்போன்று காணப்படுவதால் கூர்மதுர்க்கம் எனவும் அழைக்கப்படுகிறது.

வேலூர் கோட்டை சம்புவராய மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்களின் கலைத்திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது எனலாம். பல போர்களில் எதிரிப்படைகளின் தாக்குதல்களை சந்தித்து தன்மெருகு குலையாமல் கர்நாடகப் போர்களிலும் முக்கியப் பங்கு வகித்தது வேலூர் கோட்டை எனலாம்.வேலூர் கோட்டை 136 ஏக்கர் நிலப்பரப்பில் கம்பீரமாக சுற்றிலும் ஒழுங்காக வெட்டப்பட்ட சதுர மற்றும் செவ்வக கருங்கற்களைக் கொண்டு பூச்சுக்கலவையின்றி 2533 அடி நீளமும், 1516 அடி அகலமும் 53 அடி உயரமும் உடைய மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுள்ள சுற்றுச்சுவர் அமைந்துள்ளதைக் காணும் போது நமக்கு ஆச்சரியமாகவும் நம் முன்னோர்களின் கட்டடத் திறமை குறித்து வியப்புக்குரியதாகவும் உள்ளது.

கோட்டையைச் சுற்றி 191 அடி அகலமும் இருபத்து ஒன்பது அடிக்கு மேல் ஆழமும் உடைய அகழியும், அகழியின் வெளிச் சுவர் ஐந்து மீட்டர் உயரமுடையதாகவும் கோட்டைக்கு அரணாக அமைந்துள்ளது. எதிரிகள் வருவதை மறைந்திருந்து கண்காணிக்கவும், மறைந்திருந்து தாக்கவும் சிறிய இடைவெளி விட்டு ஐந்து அடிகள் அளவுள்ள அரைவட்டங்களாக பெரிய கற்களால் செதுக்கப்பட்ட மதிற்சுவர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலூருக்கு அருகில் உள்ள பாலமதி மலைத் தொடரில் இருந்து மழைநீரும் ஓடைநீரும் எப்போதும் அகழியில் வந்து சேரும் வண்ணம் வாய்க்கால்கள் அமைக்கப் பட்டுள்ளன. அகழியில் நிரம்பிய நீர் மதகு வழியாக பாலாற்றுக்குத் திருப்பிவிடும் விதமாகக் கட்டப்பட்டுள்ளது. போர்க் காலங்களில் முற்றுகை அதிக காலத்திற்கு நீடித்தாலும் உள்ளே இருந்து உணவுப் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாகக் கோட்டையின் உள்ளேயே தோட்டமும் விவசாயப் பகுதியும் அமைந்த விசாலமான நிலப்பகுதியுடன் கட்டப்பட்டுள்ளது. அக்காலத்தில் இந்த அகழியில் முதலைகள் வளர்க்கப்பட்டதாகவும் மரண தண்டனைக் கைதிகள் முதலைகளுக்கு விருந்தாக அகழியில் எறியப்பட்டதாகவும் செவிவழிச் செய்திகள் உண்டு. கோட்டைக்கு உள்ளே செல்ல தொங்குபாலம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த தொங்குபாலம் கி.பி. 1806 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சிக்குப் பின் நிரந்தரமாகத் தரையோடு தரையாக தரைப்பாலமாக பொருத்தப் பட்டது. கோட்டையின் மதில் சுவர்கள் எட்டு மீட்டர் அகலம் கொண்ட தாகவும் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதாகவும் கட்டப்பட்டுள்ளது. சாந்துக் கலவையின்றி கருங்கற்களால் அடுக்கி அசையாவண்ணம் உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது. நுழைவாயில் தற்போது உயரம் குறைந்து காணப்படுகிறது. கோட்டையை கட்ட மிகப்பெரிய அளவிலான கற்களையே பயன்படுத்தியுள்ளனர். இக்கற்களை அருகில் உள்ள பகவதி மலைத்தொடரிலிருந்து கொண்டு வந்துள்ளனர். இதற்கான அடையாளங்கள் இன்றும் சில இடங்களில் காணப்படுகின்றன. இத்தகைய மிகப்பெரிய கற்களை யானைகள் மூலம் கொண்டு வந்து கட்டியிருக்க முடியும். மேலும், வேலூர் மலைகளில் இருந்தும் மிகப்பெரிய பாறைகள் மேட்டிலிருந்து உருட்டி விடப்பட்டு கொத்தளத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறு உருட்டிவிடப்பட்ட பாதைதான் தற்போது சார்பனாமேடு என அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கோட்டை கட்டப்பட்ட காலத்திற்கும் தற்போதைய காலத்திற்கும் சுமார் நான்கு நூறு ஆண்டுகளில் நுழைவாயிலின் தரைப்பகுதி ஒரு மீட்டருக்கு மேல் உயர்ந்திருக்கலாம். இதன் காரணமாக நுழைவாயில் உயரம் குறைந்து காணப்படுகிறது. மேலும், கோட்டையின் மற்ற சுவர்ப் பகுதிகளில் காணப்படும் வளைவுக் கற்கள் நுழைவாயிலில் காணப்படவில்லை. கி.பி. 1806 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சியின் போது இவ்வாயில் சேதமடைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கோட்டையின் வெளிப்புறச்சுவர் ஒன்பது மீட்டர் உயரமுடையது. இச்சுவர்கள் உட்புற அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ளும் வகையில் கீழிருந்து மேல்புறம் சற்று உள்நோக்கி சாய்ந்தவாறு கட்டப்பட்டுள்ளது.இச்சுவரின் மேல் வட்ட வரிசையில் அரை வட்ட வடிவில் கற்கள் சிறுசிறு இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. அரைவட்ட கற்களின் அடியில் அம்புகள் எறிவதற்கும் துப்பாக்கியால் சுடுவதற்கும் ஏற்றவாறு மூன்று துளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்துளைகளில் நடுவே உள்ளது நேராகவும் பக்கத்துளைகள் பக்கவாட்டை நோக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தாக்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டதாகும். மதில் சுவர்களில் ஆங்காங்கே அரைவட்ட வடிவில் துருத்தியவாறு அமைந்துள்ள கட்டட அமைப்பு காண்போரை களிப்படையச் செய்வதாகும். வெளிச்சுவருக்கும் உட்சுவருக்கும் இடையில் 9.5 மீட்டர் அகலத்தில் கோட்டையைச் சுற்றி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் காவலர் தங்கும் அறைகள் காணப்படுகின்றன. இதனை ஒட்டி உட்புறம் 6 மீட்டர் உயரத்தில் உட்சுவர் வெளிச்சுவரைப் போன்றே காணப்படுகிறது. இச்சுவரின் உட்புறம் 7 மீட்டர் அகலத்தில் மண்பாதை கோட்டையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதை குதிரை வீரர்கள் கோட்டையைச் சுற்றி கண்காணிப்பதற்கும், பீரங்கி வண்டிகளை இழுத்துச் செல்வதற்கும், பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கோட்டையின் நான்கு மூலைகளிலும் வட்ட வடிவமான உயர்ந்த பீரங்கி மேடைகள் காணப்படுகின்றன. கோட்டையின் தென்கிழக்கு மூலையில் வட்ட வடிவமான உயர்ந்த மேடை மீது கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு முஸ்லீம் ஆட்சியின் போது அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மதிலைச் சுற்றி தாழ்வான சுற்றுச் சுவர்களில் போர் வீரர்கள் நின்று போர் புரிவதற்காகவும், எதிரிகளை கோட்டைக்குள் வராமல் கண்காணிக்கவும் ஆங்காங்கே துவாரங்களுடன் கூடிய அறைகள் கட்டப்பட்டுள்ளன. கோட்டையின் தென்புறம் சிறிய திட்டிவாசலும் அதன் அருகில் ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர் கொடி பறந்த இடம் உள்ளது. கோட்டையினுள் உள்ள ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் பலிபீடத்தின் பகுதிகளை பெயர்த்தெடுத்து வந்து இங்கு வைத்து அதில் ஆங்கிலேயர்கள் கொடியேற்றியுள்ளனர்.கோயில் பலிபீடத்தின் இந்த அதிட்டானப் பகுதி நாற்புறமும் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் நாயக்கர் கால கலைப்பாணியில் வடிக்கப்பட்டுள்ளது. இந்த அதிட்டானத்தின் அடிப்பகுதியில் ஒவ்வொரு மூலைகளிலும் இரண்டு எழுத்துக்கள் (எண்கள்) என நான்கு மூலைகளிலும் காணப்படுகிறது. (கி.பி. 1806 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆங்கிலேயர் கொடி இறக்கப்பட்டு திப்புவின் அரண்மனையி லிருந்து கொண்டு வந்த கொடி பத்து நிமிடங்கள் பறந்து தமிழர்களின் வீரத்தை இன்றும் பறைசாற்றும் கொடிக்கம்பம் அமைந்த இடம் இதுதான்.)

கோட்டை நுழைவாயிலின் உட்புறம் இடது பக்கத்தில் தற்போது பொதுப்பணித்துறையின் பொழுதுபோக்கும் இடம் உள்ளது. முன் காலத்தில் இந்த இடம் கோயிலின் சிம்மக்குளமாக விளங்கியிருக்க வேண்டும். கோயிலுக்கு எதிரில் தற்போது காவல் துறை பயிற்சி மைதானம் உள்ளது. இதுவும் முன்காலத்தில் கோயில் குளமாக இருந்து பின் தூர்க்கப்பட்டு தற்போது மைதானமாக மாற்றப் பட்டுள்ளது. கோட்டையின் வெளிச்சுவற்றில் அகழி உள்ள பக்கம் “மீசுரகண்ட கொத்தளம்” என தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சதாசிவ தேவமகாராயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதை அறியலாம். ”மீசுரகண்ட” என்பதற்கு கர்வம் கொண்ட எதிரிகளுக்கு கத்தியைப் போன்றவன் எனப் பொருள் ஆகும். கொத்தளம் என்றால் அகழிப்பகுதி என்று பொருள். மேலும் கோட்டையின் வெளிச்சுவர் மிகவும் நுட்பமான வேலைப்பாடு களுடன் விஜயநகர பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கோட்டையின் உள் சுவர் மிகவும் சாதாரணமாக சம்புவராயர் காலத்தைச் சேர்ந்ததாகக் கட்டப்பட்டுள்ளது. ஆகவே இவ்விரண்டும் தனித்தனியான கட்டடக் கலைகளுடன் காணப்படுவதால் இவை இரண்டு அரசர்களால் இருவேறு காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்வதாக உள்ளது.

கோயிலின் முன் உள்ள இக்குளத்தை தூர்வாரும் பொருட்டுவேலூர் கோட்டையின் பல வரலாற்று எச்சங்கள் நமக்குக் கிடைக்கப் பெற்று கோட்டையின் வரலாறு நமக்கு முழுமையாகக் கிடைக்கும் என்பது திண்ணம். இதற்கான முயற்சிகளை வருங்கால வரலாற்று ஆய்வாளர்களும் ஆட்சியாளர்களும் ஆவன செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியுடன் நம்புவோம். தொல்லியல் துறையின் முதல் முதன்மை பொது இயக்குநராக 1878 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கன்னிங்காம் என்பவர் கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டார். இதற்காக இந்திய நாடாளுமன்றத்தின்மூலம் “பழம்பொருள் பாதுகாப்புச் சட்டம் கி.பி. 1904” என்ற சட்டம் இயற்றப்பட்டு பின் 1952 மற்றும் 1958 ஆகிய ஆண்டுகளில் மாற்றம் செய்யப்பட்டது. இச்சட்டங்களின் மூலம் வேலூர் கோட்டையும் ஜலகண்டேஸ்வரர் கோயிலும் 1921-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் நாள் முதல் மத்திய அரசு ஆணை எண் 449 இதன்படி இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பராமரிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. தற்போது மதிப்பிற்குரிய திரு. பி. சந்திரசேகரன் அவர்கள் வேலூர் சரகத்தின் உதவி பராமரிப்பு அலுவலராகப் பணியேற்று, வேலூர் கோட்டையை தன்னுடைய அயராத உழைப்பால் சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றும் வகையில் மத்திய அரசு மேல் அதிகாரிகளின் அனுமதி பெற்று பல பராமரிப்புப் பணிகளை செவ்வனே செய்து வருகின்றார் .(நூலிலிருந்து)

வீரம் விளைந்த வேலூர் கோட்டை
விலை: 100 /-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/veeram-vilaindha-vellore-kottai/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers