மிகத் தொன்மையான நுண் கலைகளில் ஒன்றான மண் உருவக் கலை சுமார் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிறப்பு வாய்ந்த கருவிகள் ஏதொன்றும் இல்லாமல் உருவங்களை கலைஞர்கள் வடித்துள்ளனர். பழந் தமிழகத்து ஊர்களில் மேற்கொண்ட அகழாய்வுகள் பலவற்றிலும் சுடுமண் உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்களின் இயல்புகள், தொழில் நுணுக்கம், பிற பகுதிக் கலைகளின் தாக்கம் போன்ற பண்புகள் கால முறைப்படி ஆராயப்பட்டுள்ளன. மண் உருவங்களைப் பயன்படுத்திய மக்களின் சமூக நிலைகளும் உருவாக்கிய கலைஞர்கள் பற்றிய ஆய்வும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. மண் உருவங்களின் இருநூறு படங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.
களி மண்ணால் உருவங்களைச் செய்யும் கலை மிகத் தொன்மையானது. புதிய கற்காலம் முதல் தற்காலம் வரை மண்ணால் உருவங்கள் பலவற்றைச் செய்துள்ளனர். ஆரம்பத்தில் பச்சை மண்ணால் உருவங்களைச் செய்து உலர்த்தி பயன்படுத்தினர். காலப்போக்கில் சூளையில் சுட்டுக் கடினமாக்கியுள்ளனர். இக் கலை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள் பாமர மக்களே என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சுடு மண் உருவங்களின் தொன்மையான கலை வரலாறு இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. புதிய கற்காலம் முதல் தற்காலம் வரையிலான கலைப் படைப்புகள் கால முறைப்படி விவரிக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் நிலவிய இக்கலை வடிவங்களைப் பற்றிய திறனாய்வு இந்நூலில் உள்ளது. உலக அளவில் நிலவிய சுடு மண் கலையின் முக்கிய பரிணாமங்கள் முன்னோட்டமாகத் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ் நாட்டு மண் உருவங்களின் இயல்பு மற்றும் வளர்ச்சி நிலைகளை ஒப்பிட்டு அறியலாம்.
கண்டெடுக்கப்பட்ட சுடு மண் உருவங்களின் தெளிவான புகைப்படங்களை அகழாய்வு நிறுவனங்கள் ஆய்வாளர்களிடையே பகிர்ந்துகொள்வதில் தேவையற்ற கட்டுப்பாட்டையும் சுணக்கத்தையும் காட்டிவருகின்றன.
நூல்: தமிழகத்தில் மண் உருவங்கள்
ஆசிரியர்: ப.சண்முகம்
வெளியீடு: MB Books