“கணு” என்கிற நாவல் மூலம் படைப்பாளியாகியிருக்கும் சாந்தா கோவிந்தன் நவீன இலக்கியப் பரிச்சயம் உள்ளவர். நாவலின் தலைப்பே பல்லர்த்தம் கொண்ட இலக்கிய நயமிக்க வார்த்தை “கணு.” மரங்களில் முடிச்சு மாதிரி உருண்டையாக துருத்திக் கொண்டிருக்கும் பகுதிகளை நாம் பார்த்திருக்கலாம். அதுவே கணு.
இந்தக் கணு எப்படி உருவாகிறதென்றால், மரங்களில் ஏதாவது உரசல் ஏற்பட்டால் அந்த இடத்தில் மரம் அந்த உரசலில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தற்காப்புக்காகக் கணுவை உருவாக்கிக் கொள்ளும். உதாரணமாக, ஒரு மரத்தில் ஒரு ஆணியை அடித்தால் அந்த வேதனையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அந்த ஆணியைச் சுற்றி மரம் கணுவை உருவாக்கிக் கொள்ளும். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் அந்தக் கணுதான் மரத்தில் ரேகைகளாக மாறி மரம் பலகைகளாக அறுபடும்போது அழகைக் கொடுக்கும்.
இந்த நாவலில் ஒரு பெண் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு
வாழ்கிற வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. அந்தத் துன்பத்தை –
சித்திரவதையைத் தாங்கிக்கொள்ள அவள் எவ்விதமான கணுக்களை
உருவாக்கிக் கொள்கிறாள் என்பதே நாவல்.