தொல்காப்பியர் “பண்ணத்தி’ என்று குறிப்பிடுவது நாட்டுப்புறப் பாடல்களைத்தான். சங்கப்பாடல்களில் உள்ள குன்றப் பாடல், குரவைப்பாடல், வேலன் பாடல், வள்ளைப் பாடல் போன்றவையும் நாட்டுப்புற பாடல்கள்தாம்.
அம்மானை, உலக்கைப் பாட்டு, உழத்திபாட்டு, ஏலப்பாட்டு, ஒயில் கும்மி, ஏற்றப்பாட்டு, தாலாட்டு என அனைத்தும் நாட்டுப்புறப் பாடல்கள்தாம். தமிழகத்தில் 1943 இல்தான் நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பு வெளிவந்துள்ளது.
மு.அருணாசலம், கி.வா.ஜகந்நாதன், தமிழண்ணல், நா.வானமாமலை உள்ளிட்ட பலர் நாட்டுப்
புறப் பாடல்களைத் தொகுத்து வழங்கியுள்ளனர்.
விக்கிரமாதித்தன் கதைகள் 1871 இல் அச்சாகியுள்ளது. 1873 இல் வந்த கதா சிந்தாமணி, அதற்குப் பின் வெளிவந்த கதா மஞ்சரி, விநோதரச மஞ்சரி போன்ற நாட்டுப்புறக் கதைகள் தொகுக்கப்பட்டு வெளிவந்தன.
ஈசாப் கதைகள், டெக்கமரான் கதைகள் போன்ற அயல்நாட்டு நாட்டுப்புறக் கதைகளும் தமிழில் வெளியிடப்பட்டன. கட்டபொம்மன் கதை, நீலிக் கதை, முத்துப்பட்டன் கதை, அண்ணன்மார் சுவாமி கதை உள்ளிட்ட கதைப்பாடல் தொகுதிகளும் வெளியிடப்பட்டன. பழமொழி, விடுகதைகள் என மக்கள் வாழ்க்கையின் அங்கமாக உள்ள இலக்கியங்களைப் பற்றிய அருமையான பல தகவல்கள் அடங்கிய சிறந்த நூல்.