Description
தமிழ் உரைநடையில் கத்தோலிக்க மதப்பரப்புநர்களால் எழுதப்பட்ட புனிதர்களின் வாழ்க்கை-வரலாறு இலக்கியத்தை அச்சகத்தில் அச்சிட்டுப் பொதுமக்களுக்குப் பரவலாக வழங்கப்பட்டதை இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. தமிழ் உரைநடையில் இயற்றப்பட்ட வீரமாமுனிவர் சரித்திரம், ஔவையார், காளமேகப்புலவர், பச்சையப்ப முதலியார் மற்றும் ஆறுமுக நாவலர் ஆகியோரின் வாழ்க்கை-வரலாறு பற்றி எடுத்துரைக்கிறது. லுத்தரன் மதப்பரப்புநர்கள் ஜெர்மன் மொழியில் எழுதிய தரங்கம்பாடியின் தமிழ் குருவான ஆரோன் அவர்களின் வாழ்க்கை-வரலாற்றை வெளிப்படுத்துகிறது. கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் மதப்பரப்புநர்களுக்கு இடையே ஏற்பட்ட மதக் கருத்து வேறுபாடுகளால் தமிழ் உரைநடையில் இயற்றப்பட்ட தருக்க இலக்கியத்தின் வளர்ச்சியின் சிறப்பைத் தேடிக் கண்டறிகிறது. சைவர்கள் மற்றும் கிறித்தவ மதம் மாறியவர்களிடையே ஏற்பட்ட மதக் கருத்து வேறுபாடுகளைக் கூர்ந்து ஆராய்ந்து, சென்னை மற்றும் புதுச்சேரியில் அச்சடித்தல் மூலம் உரைநடைத் தமிழ் வளர்ந்ததைக் கோடிட்டுக் காட்டுகிறது. தமிழில் கேட்ட கதைகள், பழம்பெரும் கட்டுக்கதைகள், அறநெறிக் கதைகள், மேற்கொள்ளப்பட்ட கதை மொழிபெயர்ப்புகள், மேலும் காலனியத் தாக்கத்தின் மூலம் கதைகள் எவ்வாறு அச்சிடப்பட்டன என்பதை விளக்கித், தமிழ் உரைநடைப் படைப்புகளில் கதைகள் மற்றும் சிறுகதை வளர்ச்சியின் வரலாற்றுப் பங்களிப்பினைப் பதிவு செய்கிறது. அதைத் தொடர்ந்து தமிழ்ப் புதினத்தின் பிறப்பை விரிவாகக் கூறுகிறது. தரங்கம்பாடி ஆரோன், திருவேற்காடு முத்தையா முதலியார், சென்னை சோமசுந்தரச் செட்டி, பாளையங்கோட்டை ஹென்றி ஆல்பர்ட் கிருஷ்ணப் பிள்ளை ஆகியோர் எழுதிய தன்-வரலாறுகளையும் எழுத்தாளர்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துகிறது. தமிழ் மொழியும் உரைநடை இலக்கியமும் நவீனகாலத்தில் படிப்படியாக முன்னேற்றம் கண்டது பற்றி விரிவாக இந்நூல் அலசி ஆராய்கிறது.
முன் அட்டைப்படம்: அப்பாவு முத்துச்சாமிப் பிள்ளையின் வீரமாமுனிவர் சரித்திரத்தின்
பனையோலைக் கையெழுத்துப்படி; வாமன் சரித்திரம் பனையோலைக் கையெழுத்துப்படி




























