பெள்ளாதி – கோட்டை

பெள்ளாதி – கோட்டை

பெள்ளாதி கோவை மாவட்டத்தில் காரமடை வட்டத்தில் உள்ள ஓர் ஊர். காரமடைக்கு அருகில் அமைந்துள்ளது. பலருக்கும் தெரிந்திராத ஊர். இச் சிறிய ஊர் வரலாற்றுத்தடயங்களைப் பெற்றிருப்பது நமக்குச் சற்றே வியப்பை அளிக்கிறது. தமிழகத் தொல்லியல் துறையினர் 2007-ஆம் ஆண்டில் வெளியிட்ட கோவை மாவட்டக் கல்வெட்டுகள்-தொகுதி 2″ என்னும் நூலில் இந்த ஊர் இடம் பெறுகிறது. இரு கல்வெட்டுகள் இவ்வூர் சிவன் கோவிலில் காணக்கிடைப்பதாக மேற்படி நூலில் குறிப்பிடப்படுகிறது. எனவே, கல்வெட்டுகளைத் தேடிப்படிக்க நான் மேற்கொள்ளும் பயணங்களில் ஒன்றாக பெள்ளாதிப் பயணத்தையும் இணைத்துக்கொண்டேன். இப்பயணத்தில் உறவினர் இரு இளைஞரும் உடன்வந்தனர். காரமடையிலிருந்து பெள்ளாதியை அடைந்தோம். சிவன் கோவிலைக்கேட்டறிந்து கோவில் அருகே சென்றபோது அங்கு தோட்டத்துடன் இணைந்த ஒரு வீட்டில் சிவசாமி என்னும் பெரியவரிடம் பேசியதில் பல புதிய செய்திகள் தெரியவந்தன.

திப்புசுல்தான் பெள்ளாதிப்பகுதியில் கோட்டை ஒன்றை அமைத்திருந்ததாகவும் கோட்டையில் பீரங்கிமேடு அமைத்து அதில் பீரங்கியை நிறுத்திவைத்திருந்ததாகவும் இன்னும் அந்த பீரங்கிமேடு அங்கே கோவிலுக்கு அருகே இருப்பதாகவும் சொன்னார். தொல்லியல் துறையினர் பீரங்கிமேட்டுப்பகுதியில்முப்பத்திரண்டு கல் குண்டுகளைக் கண்டெடுத்ததாகவும் சொன்னார். பீரங்கிமேடு பற்றியும் கல்குண்டுகள் தொடர்பான தொல்லியல் துறையின் கண்டுபிடிப்பு பற்றியும் செய்திகள் வெளிவந்துள்ளனவா எனத்தெரியவில்லை.

சிவன் கோவிலையும் கல்வெட்டையும் பார்த்த பின்னர் பீரங்கிமேட்டைப் பார்க்க எண்ணி, முதலில் கோயிலுக்குச் சென்றோம். அன்னூரில் பள்ளியொன்றில் முதல்வராயிருக்கும் மகேஷ்குமார் (மேற்படி அவர்களின் சிவசாமி மகன்) எங்களைக் கோயில் இருக்குமிடத்த்துக்கு அழைத்துச்சென்றார். கோவில் பூட்டியிருந்தது. எனவே கோயில் வளாகத்தை மட்டும் சுற்றிப்பார்த்தோம். இறைவன், இறைவி இருவருக்கும் தனித்தனியே திருமுன்கள் (சன்னதிகள்). இரண்டுமே கற்றளிகள். கருவறை, இடைநாழி, அர்த்தமண்டபம் என்னும் அமைப்போடு கட்டுமானம் விளங்குகிறது. அதிட்டானப்பகுதி ஜகதி, முப்பட்டைக்குமுதம், கண்டம், பட்டிகை என்று கோவிலின் முதன்மையான உறுப்புகளோடு அமைந்திருந்தது. ஜகதி என்னும் உறுப்பு நிலத்தின் கீழே புதைந்துள்ளது. கல்வெட்டு, அர்த்தமண்டபத்தின் பட்டிகைப்பகுதியில் மூன்று நீண்ட வரிசைகளில் வெட்டப்பட்டிருந்தது. கல்வெட்டின் பாடம் கீழ்வருமாறு

கல்வெட்டின் பாடம்

வரி1. சுபமஸ்து ஸ்வஸ்த்திஸ்ரீமன் ஸ்ரீவீரகிஷ்ணராயற்கு கலியுக சகார்த்தம் 1439க்கு மேல் செல்லாநின்ற ஈசுர வருஷம் அற்பசி மத 2 வடபரிசார நாட்டில் வெள்ளாதியில் ஆளுடைய தம்பிரானார் வீரசங்காதீசுரமுடையாற்கு

வரி 2: வெள்ளாதியில் திருமாடல கோத்திரத்துக் கணக்கு மல்லயனேன் நான் இன்னயினார் கோயில் திருநந்தா விளக்குக்கு குடுத்த (பணம் குறியீட்டில்) 40 இப்பணம் நாற்பதுக்கும் சந்திராதித்தர்வரைக்கு குடங்கொ

வரி 3: ண்டு கோயில் புகும் பிராமணன் நந்தாவிளக்கு ஒன்றும் தினந்தோறுந் தப்பாமல் குறைவற நடத்திவரக் கடவாராகவும் இதுக்கு அகிதம் பேசி விலகினார் ஏழெச்சமறுவான் இது பன்மாயேசுர ரக்ஷை.

கல்வெட்டு, விஜயநகரப்பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்தது. கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலம் கி.பி. 1509 முதல் கி.பி. 1529 வரை. கல்வெட்டில் கலியுக சகார்த்தம் 1439 எனத் தரப்பட்டிருப்பினும் 1439 என்பது சக ஆண்டைக்குறிக்கும் சக ஆண்டு 1439, கி.பி. 1517-ஆம் ஆண்டாகும். எனவே, இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1517. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது.

தொல்லியல் துறையின் நூலில் இன்னுமொரு கல்வெட்டு கொங்குப்பாண்டியன் சுந்தரபாண்டியன் காலத்தது என்று தரப்பட்டுள்ளது. அக்கல்வெட்டின் அடிப்படையில் கோயில் கி.பி.1312-ஆம் ஆண்டுக்கு முன்பே கட்டப்பட்டிருப்பது உறுதி ஆகிறது. எனவே கோயில் எழுநூறு ஆண்டுப்பழமை வாய்ந்தது என அறியலாம். கல்வெட்டில் ஊர்ப்பெயர் வெள்ளாதி எனக் குறிக்கப்படுகிறது.

கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவர் பெயர் வீரசங்காதிசுரமுடையார் எனக் கல்வெட்டு கூறுகிறது. தற்போது வழங்கும் பெயர் தெரியவில்லை. வீரசங்காதீசுவரர் என்னும் பெயர், சைவ சமயத்தோடு தொடர்புடைய பெயராகத்தெரியவில்லை. மேலே குறிப்பிட்ட கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் இது சிவன் கோயிலாக இருப்பினும், வீரசங்காதம் என்னும் பெயர், கோயிலானது கி.பி. 14-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் சமணத்தொடர்புடையதாக இருந்திருக்கக்கூடும் எனக் கருத இடமளிக்கிறது. ஏனெனில், விழுப்புரம் மாவட்டம் திருநறுங்கொண்டை என்னும் ஊரில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலகட்டத்தில் வீரசங்கம் என்ற சமணச்சங்கம் செயல்பட்டதையும் அச்சங்கத்தினர் ஆங்காங்கே விரசங்காதப்பள்ளிகளை நிறுவினர் என்பதையும் வரலாற்றுக்குறிப்புகள் உணர்த்துகின்றன. சேவூர் அருகில் இருக்கும் ஆலத்தூர் சமணக்கோயில் வீரசங்காதப்பெரும்பள்ளி என அழைக்கப்பட்டதை அக்கோயிலின் கல்வெட்டுகள் சுட்டுவதைக் காணலாம். எனினும், கோயிலின் சமணத்தொடர்பு அறுதியன்று. ஆய்வுக்குரியது.

கொங்குமண்டலத்தில் கோவையைச்சுற்றியுள்ள பகுதிகள் வடபரிசார நாடு என்னும் நாட்டுப்பிரிவில் அடங்கும். மேற்படி கல்வெட்டு, பெள்ளாதி ஊர் வடபரிசார நாட்டைச்சேர்ந்தது எனக்குறிப்பிடுகிறது. தமிழக அரசர்களின் கல்வெட்டுகள் எல்லாம் “ஸ்வஸ்திஸ்ரீ எனத்தொடங்கும். விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகளிலோ “சுபமஸ்து” என்னும் தொடக்கச்சொல் காணப்படும். மேலும் “ஸ்ரீமது”, ஸ்ரீமன்” ஆகிய சொற்களும் பயிலும். இக்கல்வெட்டிலும் அவ்வாறே சொற்கள் வருவதைக் காண்கிறோம். கல்வெட்டில் “1439”, “40” ஆகிய எண்கள், தமிழ் மொழியில் வழங்கும் எண்களின் குறியீட்டில் அமைந்துள்ளன. பணம் என்னும் சொல்லும் குறியீட்டில் எழுதப்பட்டுள்ளது. தற்காலத்தே,வங்கிக் காசோலையில் பணத்தின் மதிப்பு எண்ணாலும் எழுத்தாலும் குறிக்கப்பட்டு ஐயத்திற்கிடமின்றி ஆவணப்படுத்தும் வழக்கம் இருப்பதுபோல், அக்காலத்தே கல்வெட்டுகளில் ஆவணப்படுத்துதல் வழக்கத்தில் இருந்துள்ளது. இக்கல்வெட்டிலும் 40 பணம் எண் குறியீட்டாலும் எழுத்துகளாலும் சுட்டப்பெறுகிறது. மல்லயன் என்னும் பிராமணன் கோயிலில் நந்தா விளக்கு எரிப்பதற்காக நாற்பது பணம் கொடையாக அளித்தான் என்பது செய்தி. பிராமணர்க்குரிய கோத்திரப்பெயரும் குறிக்கப்படுகிறது. மாடல கோத்திரம். (“மாடல மறையவன்” என்னும் சிலப்பதிகாரத் தொடர் இங்கே நினைவுக்கு வருகிறது.)

கல்வெட்டுகளில் சுட்டப்பெறும் அறச்செயல்கள் தடையின்றித் தொடர்ந்து நடைபெறவேண்டும் என விரும்பிய மக்கள், அவை நிலவும் கதிரும் உள்ளவரை நடத்தப்பெறவேண்டும் என எழுதி வைத்தனர். “சந்திராதித்தர்வரை” என இக்கல்வெட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த அறத்தைச் செய்யாமல் விலகுவோர் தம் ஏழு பிறவிகளிலும் மக்கட்பேறின்றி அல்லலுறுவர் என்பதையும் கல்வெட்டிலே பொறித்தார்கள். “ஏழெச்சம் அறுவான்” என்னும் தொடர் இதனை விளக்கும்.

கோயிலில், கருவறை அர்த்தமண்டபம் ஆகிய கட்டுமானங்களைத் தவிர்த்துச் சுற்றுமதிலோ, பிற பரிவாரத்தெய்வங்களின் திருமுன்களோ (சன்னதி) காணப்படவில்லை. நந்திச் சிற்பத்தோடு கூடிய ஒரு நந்தி மண்டபம் உள்ளது. நந்திச் சிற்பமும் பழமையான தோற்றத்தைக் கொண்டுள்ளது. கோயில் வளாகம் பாவு கல்லால் பாவப்படவில்லை. மண் தரை, சிறு சிறு கற்களும் முள்ளும் பரவி நடக்க எளிதாயில்லை.

அடுத்து நாங்கள் அருகே ஒரு தோட்டத்தில் அமைந்துள்ள நடுகல் சிற்பத்தைக்காணச்சென்றோம். இந்த நடுகல் சிற்பம் புலிகுத்திக்கல் என அழைக்கப்படுகிறது. கல்வெட்டுடன் கூடிய இந்நடுகல் பற்றி மேற்சுட்டிய தொல்லியல் துறைக்கல்வெட்டுநூலில் (தொடர் எண்: 936/2003) குறிப்பிடப்பெறுகிறது. மறவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கும், முல்லை நிலப்பகுதியில் ஆதிரை கவர்தலிலும், மீட்டலிலும் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கும் நடுகல் நட்டு மக்கள் வணங்கினர். (ஆநிரையில் ஆடுகளும் அடங்கும் எனலாம்) கோவைப்பகுதி பழங்காலத்தே பெருமளவில் முல்லை நிலப்பகுதியாக விளங்கியமையால் பட்டிகளில் ஆநிரை காத்த வீரர்கள் ஆடுமாடுகளைத் தின்னவரும் புலிகளுடன் போரிட்டு மடிவதுண்டு. (புலியைக்கொன்ற பின்னரே வீரன்மடிகிறான்) அத்தகைய வீரர்களுக்கு நடுகல் எடுத்து வணங்கினர். கோவைப்பகுதியில் இவ்வகை நடுகற்கள் புலிகுத்திக்கல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறன. இக்கற்களில் வீரன் புலியைக் குத்திக்கொல்லும் காட்சி புடைப்புச்சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். இந்நடுகற்கள் பெரும்பாலும் எழுத்துகள் பொறிக்கப்படாமல் இருக்கும். அரிதாகச் சில நடுகற்கள் எழுத்துப் பொறிப்பைக்கொண்டிருக்கும். நாங்கள் பார்த்தது எழுத்துடைய நடுகல்.

நல்ல வெண்மையான நிறத்துடன் ஏறத்தாழ நான்கு அல்லது நாலரை அடி உயரத்தில் உள்ள இக்கல்லில் வீரன் புலியுடன் போரிட்டுக் கொல்லும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் கீழே ஆறுவரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனின் தலையில் தலைப்பாகை; காதுகளில் காதணிகள்; கழுத்திலும் அணிகள். கைகளில் தோள்வளை காணப்படுகிறது. வீரனின் இடைப்பகுதியில் இடைக்கச்சு. கால்களில் கழல்கள். வீரன் தன் வலக்கையால் நீண்ட வாளைப் புலியின் நடுமார்பில் பாய்ச்சிய நிலையில் வாள் புலியின் உடலைக் குத்தி உடலின் மறுபுறம் வெளிவந்த தோற்றம். இடக்கை புலியின் முகத்தருகே நெருங்கிய நிலையில் கைவிரல்கள் தோன்றாதவாறு காணப்படுவதால் இடக்கையில் இருந்த குறுவாள் புலியின் வாய்ப்பகுதியில் நுழைந்துவிட்டது புலனாகிறது. இடைக்கச்சில் குறுவாள் காணப்படாதது இதை உறுதிப்படுத்துகிறது. (வீரர்களின் சிற்பங்களில் இடையில் குறுவாள் தப்பாது இடம் பெறுகிறது.) புலி நின்றநிலையில்ஒருகாலைவீரனின் தொடைப்பகுதியில்தாக்குகிறது. புலியின் நிமிர்ந்து நிற்கும் வால் புலியின் சினவெறியைக்காட்டும் எனக் கல்வெட்டு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

கல்வெட்டில், வடபரிசார நாட்டுப் பெள்ளாதியில் இருக்கும் வேந்தர் குல வெள்ளாளன் நயினார் மாலை ஆண்டான் என்பவன்பெயர் காணப்படுகிறது. விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் பெயரும் தமிழ் ஆண்டு வட்டத்தில் தாது வருடமும் குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலம் கி.பி. 1509-1529 என்பதாலும் தாது வருடம் கி.பி. 1516-ஆம் ஆண்டில் பிறப்பதாலும் இந்நடுகல்லின் காலம் கி.பி. 1516 ஆகும்.

கல்வெட்டுப்பாடம்

வரி 1 ஸ்வஸ்தி ஸ்ரீமந் மஹாமண்டலேஸ்வர
வரி 2ன் வீரகிருஷ்ணராயற்குச் செல்லாநின்ற
வரி 3தாது வருஷம் ஆவணியில் வடபரிசார நா
வரி 4ட்டில் வெள்ளாதியில் வெள்ளாழன் வே
வரி 5ந்தர்களில் நயினார் மாலை ஆண்டா
வர் 6னேன்

அடுத்து நாங்கள் சென்ற இடம் திப்பு சுல்தானின் பீரங்கிமேடு. கோட்டை கரியமாரியம்மன் கோயிலும் அதை ஒட்டி அருகில் பீரங்கிமேடும் இருந்தன. பீரங்கிமேடு, சதுர வடிவங்களால் ஆன ஏழு அடுக்குகள் பிரமிடு அமைப்பில் கீழே பெரிய பரப்பாய்த் தொடங்கி மேலே சிறிய பரப்பாய் முடிகிறது. முதல் அடுக்கான தரைப்பகுதியில் அமைந்த மேடை ஏறத்தாழ அறுபது அடியைப் பக்க அளவாகக்கொண்ட சதுரம். ஏழாவது அடுக்கில் பீரங்கியை நிறுத்திக் கண்காணிக்குமளவு நிலப்பரப்பு. இதுபோன்ற கட்டிட அமைப்பைக் கோவைப்பகுதியில் நாம் கண்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது. நீண்ட காலம் கோட்டை என்னும் சொல் இங்கே வழங்கிவரவில்லை எனில் இங்கு அமைக்கப்படும் கோயிலுக்கு கோட்டைமாரியம்மன் என்னும் பெயர் வர வாய்ப்பில்லை. எனவே இங்கு ஒரு கோட்டை (அளவில் சிறியதாகக் கூட இருந்திருக்கலாம்) இருந்துள்ளது திண்டுக்கல்லில் என்பது மலைக்கோட்டையின் புலனாகிறது. அடிவாரத்தில் அமைந்துள்ள கோயில் கோட்டை மாரியம்மன் கோயில் என இன்றும் வழங்கிவருவதைக் காண்க. கோட்டை இருந்ததற்கான சுவடுகள் வேறெவையும் காணப்படவில்லை. முப்பத்திரண்டு கல்குண்டுகள் இங்கே கிடைத்தன என்பதால் பீரங்கிமேடு நம்பகத்தன்மை பெறுகிறது. சத்தியமங்கலம், கோவைப்பகுதிகள் திப்புசுல்தானின் வரலாற்றோடு தொடர்புடையவை எனத்தோன்றுகிறது. வரலாற்றுச் செய்திகளைத்தேடவேண்டும். அரசர்கள், தம் நாட்டின் எல்லைப்புறங்களில் பாதுகாப்புக்காக ஆங்காங்கே நிலைப்படைகளை நிறுத்திவைப்பது வரலாறு வாயிலாகத் தெரியவருகிறது. உடுமலை அருகே கடத்தூர் மருதீசர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு “கடற்றூர் நிலை நின்றஆயிரவர்” என்னும் ஒரு நிலைப்படையைப்பற்றிக் குறிப்பிடுகிறது. (கோவை மாவட்டக்கல்வெட்டுகள் தொகுதி-1, சு.வெ. தொடர் எண்: 15/2004) எனவே அது போன்ற ஒரு நிலைப்படையைத் திப்பு சுல்தான் பெள்ளாதிப்பகுதியில் நிறுத்திவைத்திருக்கக்கூடும். பீரங்கியையும் நிறுத்தியிருக்கக்கூடும். போதிய கிடைத்தால் சான்றுகள் இவை உறுதியாகும்.

பீரங்கிமேட்டின் தரைப்பகுதியில் புதியதாக ஒரு நடுகல்லையும் கண்டோம். தோட்டத்து நடுகல் சிற்பத்தைவிடச் சற்றே எளிமையான தோற்றம். ஆனால் அதில் உள்ளது போலவே வீரன் புலியின் மார்பில் வாளைப்பாய்ச்சும் உருவம். புலியின் உருவம் உள்ள பகுதி உடைந்துபோய்விட்டது.

கோட்டை இருந்ததற்கான சான்றுகள் எவையேனும் கிடைக்குமா என ஆராய்ந்ததில் தகுந்த சான்று ஒன்று கிடைத்தது. Francis Buchanan Hamilton என்னும் ஆங்கிலேயர் எழுதிய “A journey from Madras through the Countries of Mysore, Canara and Malabar என்னும் நூலில் காணப்படுகின்ற குறிப்பு பெள்ளாதியில் ஒரு மண் கோட்டை இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

கி.பி.1800-ஆம் ஆண்டு பிரிட்டிஷார் திப்பு சுல்தானைப்போரில் வென்றதால் மைசூர் இராச்சியம் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் இணைந்தது. அப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு, மருத்துவரும் தாவர இயல் அறிஞருமாகிய பிரான்சிஸ் புக்கானன் ஹாமில்டன் என்பவரை நியமனம் செய்து மைசூர் இராச்சியம் முழுதும் நில ஆய்வு (Survey) செய்யப்பணித்தார். புக்கானன் தம் பயணக்குறிப்பில், 1800-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆந்தேதியன்று புறப்பட்டுப் பவானி ஆற்றின் கரையோரமாக அவர் சிறுமுகை என்னும் ஊர் நோக்கிப் பயணம் மேற்கொள்வதைக் குறிப்பிடுகிறார். அடுத்த நாள் அக்டோபர் 27-ஆந்தேதியன்று பெள்ளாதி ஊரைக் கடந்து சென்றதாகவும் அப்போது ஒரு மண் கோட்டையைக் கண்டதாகவும் பதிவு செய்கிறார்.

இதுகாறும் பார்த்த செய்திகளால், பெள்ளாதிப்பகுதி 16- ஆம் நூற்றாண்டின் பழங்கால வரலாற்றுத் தடயங்களையும் 18-ஆம் நூற்றாண்டின் வரலாற்றுத் தடயங்களையும் கொண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஓர் இடமாகத் திகழ்வதைக் காண்கிறோம். இப்பகுதியின் சிறப்பு இன்னும் பல அரிய செய்திகளோடு வெளிப்பட தமிழகத் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.(நூலிலிருந்து)

கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள் – துரை,சுந்தரம்
விலை: 140/-
வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை
Buy this book online: https://www.heritager.in/product/kongu-naattu-tholliyal-sinnangal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers