வேந்தரும் குறுநிலத் தலைவரும் :
சங்க இலக்கியங்கள் ஏறத்தாழ அறுபத்தொரு வேந்தர் களையும், பல குடிகளைச் சார்ந்த ஏறத்தாழ நூற்றிருபத் தெட்டுக் குறுநிலத் தலைவர்களையும் பற்றிக் கூறுகின்றன! வேந்தர் குடியினரை விடக் குறுநில மன்னர் குடியினர் எண்ணிக் கையில் மிகுந்துள்ளமை காணத்தக்கதாகும்.
குன்றுகளாலும், காடுகளாலும், ஆறுகளாலும் ஊடறுக்கப்பட்ட தமிழகம் பல துண்டுகளாகப் பிரிந்திருந்தது. ஒவ்வொரு துண்டிலும் ஒவ்வோரரசு உருவாக இந்நிலை உதவிற்று. ஒரு குன்றும் அது சார்ந்த சில ஊர்களும் ஒரு நாடாக அமைய அன்று இடமிருந்தது. இங்ஙனமே, ஒரு காடும் அது சார்ந்த புல்வெளியும் ஒரு சிறிய நாடாக அமைய இடமிருந்தது.’ கொங்கர், பூழியர், சுங்கர், கட்டியர், ஓவியர், ஆவியர், அதியர், மழவர் முதலான பல குடியினர் வாழ்ந்தனர்.
ஒவ்வொரு குடியினரும் தத்தம் குடித் தலைவரின் கீழ்த் தனித்தனியே வாழும் நிலைமை இருந்தது. இதனால், குறவர் அரசு, பொதுவர் அரசு, வேட்டுவர் அரசு எனக் குடிவகையால் அரசுகள் அமைய இடமேற்பட்டது. இந்நிலைமை இருந்தமையாற்றான் என்.சுப்பிரமணியன் சங்க காலத்தமிழ்ச் சமுதாயத்தை அடிப்படையில் இனக்குழுத் தன்மை வாய்ந்த சமுதாயம் என்றார்.’ குறுநிலத்தலைவர் மிகுதியாக இருந்த மைக்கு நில வியற்கையும் அதனையொட்டியமைந்த இனக்குழுக் களின் பெருக்கமும் அடிப்படைகளாகக் கொள்ளத்தக்கனவாகும்.
குறிக்கோள் நிலை :
வேந்தர்க்கும் குறுநிலத் தலைவர்க்கும் இடையே அமைந்த உறவின் தன்மைகள் குறிக்கோள் நிலையிலும் அப்போது நிலவிய வரலாற்று நிலையிலும் புலவர்களால் விளக்கப்பட்டுள்ளன. முல்லைத்திணை சார்ந்த அகத்திணைச் செய்யுட்கள், புறநானூற்றி லுள்ள வல்லாண் முல்லை, மகட்பாற் காஞ்சி முதலிய துறைகள்சார்ந்த செய்யுட்கள் ஆகியவை மன்னரின் பெயரின்றிக் குறிக் கோள் நிலையில் இவ்வரசியல் உறவுகளை விளக்குகின்றன. இச்செய்யுட்களிற் காட்டப்படும் உறவுகள் அக்கால நடைமுறையை மனத்திலெண்ணிக் கூறப்பட்டனவென்றே கருத வேண்டியுள்ளது.
அன்று வாழ்ந்த நாலை கிழவன் நாகன், பழையன், பிட்டன், ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் முதலான தலைவரின் வரலாறுகள் அக்காலத்து நடைமுறையில் காணப்பட்ட வேந்தர் குறுநில மன்னர் உறவினை உணர உதவுகின்றன.
புறநானூற்றில் 313 முதல் 335 முடிய அமையும் செய்யுட்கள் வல்லாண் முல்லை என்னும் துறையில் அமைந்தனவாகும். வேந்தரொடு நட்புறவு கொண்டு அவர் பொருட்டுப் போரிட்டு அவர் கொடுக்கும் பொருள் கொண்டு வண்மை செய்யும் வல்லாளர்களாக இச்செய்யுட்களின் தலைவர்கள் காணப்படு கின்றனர்.
தம் வேந்தன் விழுமமுறும் நிலைவரின், நிறையழிந்து ஓடும் அவன் படைக்கு அரணாக நின்று காப்பவன் ஒரு சீறூர் மன்னன் என ஐயூர் முடவனார் பாராட்டுகின்றார்.’ வேந்தன் ஏவிய பணியை வெற்றியுடன் முடித்து அவன் கொடுக்கும் பொருள் கொண்டு பாணர்க்கும் பாடினிக்கும் சிறப்புச் செய்யும் தலைவனை ஆலங்குடி வங்கனார் காட்டியுள்ளார். வேந்தனுக்குக் கேடு வந்தபோது தானும் கெடும் அளவிற்கு உண்மையான நேயம் பூண்ட நெஞ்சறிந்த துணைவனாக ஒருவன் புகழப்படுகின்றான்.”
பகைவனுடைய தோல்வியும் தம் வேந்தனுடைய வெற்றியுமே சீறூர்த் தலைவர் நாட்டின் பசியைப் போக்கும் நிலைமை விளக்கப்படுகின்றது. பகைவேந்தன் விழுமமுற்றால் சீறூத் தலைவன் ஊர்க் குருவிகளும் வயலில் விளைந்த நெல்லரிசியை உண்ணும் வளமுடையதாகும். என்கிறார் ஒரு புலவர்’ இதனால் தன் வேந்தன் அவனுக்குப் பகைப்புலத்தே கவர்ந்துகொண்டு
வந்து நெல்லைப் பரிசாகக் கொடுப்பான் என்பது விளங்கும். வல்லாண் முல்லைப் பாடல்களில் சீறூர்த் தலைவர் நாடுகள் வளம் சிறிதுமற்ற வன்னிலப் பகுதிகளாகக் காட்டப்படு கின்றன. வன்புலம் புன்புலம் என அவை சுட்டப்படுகின்றன. இங்கு வாழும் மக்கள் பெரிதும் வேட்டை வாழ்வினராகவும், வரகு, தினை ஆகியவற்றை விதைத்து உண்ணக் கூடியோரா கவும்,களிறு நீறாடிய விடுநிலத்தில் குழியில் தேங்கிய மழைநீரை மாடுகளோடு பகுத்துண்ணும் நிலையினராகவும் காணப் படுகின்றனர்.”
நாட்டின் இயல்பிற்கேற்ப இந்நாட்டில் தலைவனும் மிகவும் எளிய நிலையினனாகக் காணப்படுகின்றான். கைப்பொருள் யாதொன்றும் அற்றவன் என்றும்,” குறியெதிர்ப்பையை எதிர் பார்த்து நிற்பவன் என்றும்,” பழைய வாளை அடமானம் வைக்கும் நிலையினன் என்றும்,” வறுமை காரணமாக வீட்டி லுள்ள விதைத் தினையையும் அட்டு விருந்து பேணும் நிலை யினன் என்றும் ” பலர் கூறப்பட்டுள்ளனர். பாயோ தோலோ இன்றித் தரையிற் படுத்துறங்குவோனாக ஒருவன் காட்டப்படு கிறான்.”
வயல் வெளிகட்கு அப்பால் வன்புலங்களை ஆண்டு வந்த இவர்கள் இயல்பாகவே வில்லாண்மையிற் சிறந்திருந்தனர் என்றும், வேந்தர் இவர்களை அழித்துவிடாது இவர்கட்கு வேண்டுவன செய்து தமக்குப் படைத்துணையாய் அமையுமாறு செய்து கொண்டனரென்றும் தெரிகின்றது. இவர்களுடைய எளிய பொருளாதாரம், வேந்தரைச் சார்ந்து ஒழுகுதற்குரிய ஒரு தூண்டுதலாக அமைந்தது என்று கொள்ளலாம்.
நடைமுறை நிலை :
வல்லாண் முல்லைத்துறைச் செய்யுட்களிற் காணும் இதே குறிக்கோள் நிலையினை உண்மை வரலாற்று நிலையினும் காணமுடிகின்றது.
பிட்டன் என்பவன் வன்புலப் பகுதியொன்றின் தலைவனாக விளங்கினான்.’வன்புல நாடன் வயமான் பிட்டன்” என்று அவன் பாராட்டப்பட்டான். இவன் சேரமன்னன் ஒருவனுக்கு உற்ற துணைவனாக விளங்கியுள்ளான்.!* நாலை கிழவன் நாகன் என்பவன் பாண்டியன் மறவன் எனப் பாராட்டப்பட்டவன்.” இவன் தன் வேந்தனுக்குப் படை வேண்டும் பொழுது வாள் உதவினான். மேலும் அறிவு வேண்டும் பொழுது அமைச்சர் போலிருந்து அதனையும் உதவினான்.° ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன், தன் வேந்தன் பொருட்டுப் பல விழுப்புண்களைப் பெற்றுச் சிறந்தான். அவனுடைய உடம்பிற்கு மருந்துகொள் மரம் உவமை கூறப்பட்டிருத்தல் காணலாம்.”
சோணாட்டின் கண் போர் என்னும் பகுதியைக் காவல் செய்தவன் பழையன் என்னும் தலைவன். இவன் சோழர் மறவன்எனப் பாராட்டப்பட்டுள்ளான்.22 நன்னன், ஏற்றை, அத்தி முதலான குறுநில மன்னர் ஒன்று சேர்ந்து சோணாட்டின் எல்லையிற் புக்கபோது பழையன் எதிர்த்து நின்று உயிர் விட்டான். சோழ மன்னன் தன் மறவன் இறப்புக்குக் காரணமாக விருந்தோரை விரைவிற் பழிவாங்கினான்.” சோணாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடையே இருந்த பகுதி போர் என்னும் இடம் ஆதலின் அப்பகுதியின் தலைவனைச் சோழன் தன் எல்லைப் படைத் தலைவனாகக் கொண்டதன் நுட்பம் விளங்குகின்றது.
இங்ஙனமே சோழன், தன்னாட்டின் கிழக்குப் பகுதியில் இருந்த பரதவத்தலைவன் மத்தி என்பவனை உற்ற துணைவ னாகக் கொண்டான். தனக்கு அடங்காத எழினி என்பவனை அடக்க மத்தியை அனுப்பினான் சோழன். அவனும் எழினியைக் கொன்று, அவன் பல்லைப் பறித்து வெண்மணி வாயிலில் பதித்து வைத்தான்
தம் நாட்டுக் குறுநிலத் தலைவர் பால் நற்பண்புகள் காணப்பட்டபோது தம்முடைய பெருந்தகுதிப் பாட்டையும் மறந்து அவரை மனமாரப் பாராட்டும் இயல்பு வேந்தருக்கு இருந்தது. சிறுகுடி கிழான் பண்ணன் பெருங்கொடையாளி யாகப் புகழ்பெற்று விளங்கக் கண்ட சோழப்பேரரசன் அவனைப் ‘பசிப்பிணி மருத்துவன்’25 என்று பாராட்டியதோடு, ‘யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய’ எனவும் வாழ்த்தினான்.”
தத்தம் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் இருந்த தலைவர் களை வேந்தர்கள் தம் உற்ற துணைவராகக் கொண்டனர் என்பதையும், அவர்களும் தம் வேந்தர் பொருட்டு எத்தகு இன்னலையும் ஏற்றுக் கொண்டனர் என்பதையும் மேற்கண்ட வரலாறுகள் தெரிவிக்கின்றன.
மலையமானின் தனித்தன்மை :
ஒரு வேந்தனிடம் மட்டுமே உறவுகொண்டு இறுதிவரை அவனுக்காகவே உழைப்போர் தவிர, அவ்வப்போதுள்ள சூழலுக்கு ஏற்பத் தம் விருப்படிப் போர்த்துணையாகும் இயல்பினரும் இருந்தனர் என்பதற்குக் கோவலூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரி தக்க எடுத்துக்காட்டாவான். இவனை மூன்று வேந்தரும் படைத்துணையாகுமாறு வேண்டுவர் என்றும் அதற்கெனப் பொருளை வழங்குவர் என்றும் அறிய முடிகின்றது.மூவருள் ஒருவன் துப்பாசியரென ஏத்தினர் தரூஉம் கூழே” என்னும் புலவர் வாக்கால் இந்நிலையை உணரலாம். மலையர் மரபினனான திருக்கண்ணன் சோழிய ஏனாதியாகப் பணியாற்றி னான். இவன் சோழ மன்னனொருவன் அரசிழந்து வருந்திய போது அவன் மீண்டும் அரசுபெறக் காரணமாக விருந்தான். ஆனால், அதே மரபில் வந்த திருமுடிக்காரி, சோழ மன்னனுடைய சீற்றத்துக்காளானான்.” மலையன் என்னும் பெயர் கொண்டவன் வல்வில் ஓரியைக்கொன்று கொல்லி மலையைச் சேரமன்னனுக்குக் கொடுத்தான்.இதனால், சில மரபினர் தம் நட்பை அவ்வப் போது மாற்றிக் கொண்டனர் என உணரமுடிகின்றது.
மூவேந்தரிடையே இடைவிடாத போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இப்போராட்டச் சூழ்நிலை குறுநிலத் தலைவரின் நிலைபேற்றிற்கு ஓரளவு உதவிற்று என்று கொள்ளலாம். பேரரசர் தம்முடன் நட்புக்கொண்ட குறுநிலத் தலைவரையும் தம்முடன் சேர்த்துக் கொண்டு போரிடுவது அன்றைய மரபாக விருந்தது.”
பாரிவேள் முதலானோர் நிலை :
குறுநிலத் தலைவர் யாரேனும் ஒரு வேந்தனுக்கு அடங்கிய வராய் இருந்த நிலைமையே அன்று பெருவழக்காக இருந்திருக்க வேண்டும். அவ்வாறே யாருக்கும் அடங்காது தன்னுரிமை யுடன் ஆண்ட மன்னரும் இருந்தனர் எனத் தெரிகின்றது. அவர்கள் இன்னின்னார் என அறுதியிட்டுக் கூறுவது எளிதன்று. எனினும் அத்தகையோரும் பண்டு இருந்தனர் என்பதற்குப் பறம்பின் கோமான் பாரி சிறந்த எடுத்துக் காட்டாகவுள்ளான். அவன் யாருடனும் சாராது நின்ற தன்மை அவனுக்கு ஊறாக அமைந்தது என்பது அவன் வரலாற்றால் உணரப்படுகிறது.” ஓரளவு விரிந்த நிலப்பகுதியைக் கொண்டவர்களும், எளிதிற் பகைவராற் கைப்பற்ற முடியாத மலைப்பகுதிகளை ஆண்டோரும் இங்ஙனம் தன்னுரிமையோடு ஆண்டிருக்க இடமுண்டு. தொண்டைமான் இளந்திரையன், ஓய்மான் நல்லியக்கோடன், நன்னன்சேய் நன்னன் போன்றோர் மூவேந்தரின் ஆட்சிக்குட் பட்டோராகக் காணப்படவில்லை.
இங்ஙனம் சிலர்பற்றிய நிலையைக் கூற முடிந்தாலும்,
பெரும்பான்மையான தலைவர்கள் யாரிடம் எத்தகைய உறவுகொண்டிருந்தனர் என்று உறுதிப்படுத்திக் கூறத்தக்க சான்றுகிடைக்கவில்லை.
உரிமையை இழக்கவில்லை :
குறுநில மன்னருக்கும் வேந்தருக்குமிடையே அமைந்த உறவின் ஒரு குறிப்பிடத்தக்க நிலைமையாவது, ஒரு வேந்தனுக்கு அடங்கியவர் தம் நாட்டாட்சியுரிமையை இழந்து விடாமை யாகும். மத்தி சோழனுக்கு அடங்கியவனெனினும் கழார் முன்னுறை அவனுக்குரியதாகவே கூறப்படுகிறது. ‘பல்வேல் மத்தி கழார்’ எனச் சுட்டுவது காணலாம். நாலை கிழவன் நாகன்,* சிறுகுடிகிழான் பண்ணன்” என்னும் பெயர்களே அவர்கள் தம் உரிமையை இழக்காமலேயே பேரரசரைச் சார்ந்து நின்றனர் என்பதனை உணர்த்தவல்லனவாகும்.
வேந்தரை மதியா மறம் உடைமை :
தம்பால் மகட்கொடை வேண்டிய வேந்தர் குடியினரை மதியாது அவர் வேண்டுகோளைப் புறக்கணித்து, அவர் பகை மையைப் பெற்று, இறுதியில் போரிட்டு அழிய ஆயத்தமாகும் குறுநிலமன்னரின் மறமாண்பு மகட்பாற் காஞ்சி என்னும் துறையிலமைந்த புறப்பாடல்களின் பொருளாக அமைகிறது.
இத்துறைச் செய்யுட்களில் இடம்பெறும் குறுநிலமன்னர் தொல்குடியினர் என அறிய முடிகிறது. * மேலும், இம்மன்னர் வளமான நிலப்பகுதிகளை யாண்டோராகவே காணப்படு கின்றனர். இம்மன்னரின் வளம் பல செய்யுட்களிற் பாராட்டப் பட்டுள்ளது.’ இவர் நாடுகளின் தலை நகர்கள் மதிலும் அகழியும் கொண்டனவாகவும் அறியப்படுகின்றன.36
வேந்தர், மருதநிலச் சிற்றூர் மன்னர் தம்மினும் செல்வம் செல்வாக்கு ஆகியவற்றிற் குறைந்தவரெனினும் அவர்பால் மகட்கொடை வேண்டினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். குறுநிலத் தலைவர்தம் பெண்களின் பேரழகில் ஈடுபாடு கொண்டமையே இதற்குரிய காரணமாகத் தெரிகின்றது.
ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி
முறஞ்செவி யானை வேந்தர்
மறங்கெழு நெஞ்சம் கொண்டொளித்தோளே
என ஒரு மகள் பாராட்டப்படுகிறாள்.
ஊர்களின் இழப்பவும் வருவது கொல்லோ
சுணங்கணிந் தெழிலிய வணந்தேந் திளமுலை வீங்கிறைப் பணைத்தோள் மடந்தை
மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே
என்னும் அச்சத்திற்குப் பெண்ணின் அழகே காரணம்
என்பதனை அறியமுடிகின்றது.
இத்தகைய அழகிய பெண்களை மணப்பதற்கு வேந்தர் பெரும் பொருளையும், வளமான மருதநிலத்தூர்களையும் கொடுக்கவும் பின்னடையவில்லை.
வேந்தரை நோக்கத் தாம் செல்வத்திலும் வெல்வாக்கிலும் குறைந்தோரெனும் அவர்தரும் பெருஞ் செல்வத்தினை ஏற்றுப் பெண் கொடுக்க மறுக்கின்றனர் தொல்குடித்தலைவர்கள்.
இம்மறுப்புக்கு அவர்தம் குடிமானவுணர்வுமிகுதியே அடிப்படையாகத் தெரிகின்றது. வேந்தர் குடியினும் தம் குடியை உயர்வுடையதாக மதிப்போராக இம்மன்னர் விளங்குகின்றனர்.
செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்லென ”
புரைய ரல்லோர் வரையலர் இவளெனத்
தந்தையும் கொடா அன்”
இரும்பனை யன்ன பெருங்கை யானை
கரந்தையஞ் செறுவிற் பெயர்க்கும்
பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே“
என்னும் இலக்கியப் பகுதிகள், வேந்தர்க்குப் பெண் கொடுப்ப தில்லை என்னும் குறுநில மன்னரின் உறுதிப்பாட்டைக் காட்டு கின்றன.
குறுநில மன்னரிடம் மறுப்புணர்வு மேம்பட்டு நிற்பது போலவே வேந்தரிடமும் பெண்ணைக் கவர்ந்து செல்லும் ஆர்வம் மேலோங்கி நிற்கின்றது. பெண்ணை மணப்பது அல்லது செந்தொழிவது என்னும் நிலைக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்கின்றனர். ஒருவன் கொண்ட இத்தகு உறுதிப்பாட்டை
விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியல் கணங்கணி வனமுலை யவளொடு நாளை
மணம்புகு வைகல் ஆதல் ஒன்றோ
ஆரமர் உழக்கிய மறங்கிளர் முன்பின்
நீளிலை யெஃகம் அறுத்த வுடம்பொடு
வாரா வுலகம் புகுதல் ஒன்றெனப்
படைதொட் டனனே குரிசில்
என்னும் செய்யுட்பகுதி காட்டுகின்றது.
சங்க இலக்கியத்துள் மகட்கொடை காரணமாகத் தம்முள் முரண்பட்டுப் போராடியவரைக் குறிக்கோள் நிலையிலன்றி இயற்பெயர் சுட்டிய நிலையிற் காண முடியவில்லை. பாரியைப் புகழ்ந்து கபிலர் பாடிய புறப்பாட்டொன்றிற்கு ‘மகள் மறுத்தல்’ என்னும் துறை குறிக்கப்பட்டுள்ளது. 46 எனினும் பாரிக்கும் மூவேந்தர்க்கும் இடையே நடந்த போருக்கு மகட்கொடை மறுப்பினைக் காரணமாகக் கொள்ளச் சான்றேதும் இல்லை.
மாறாக, வேள்பாரியின் மறைவுக்குப் பின்னர், பெரும் கவிஞரான கபிலர், தம் நண்பரின் செல்வியரை விசசிக்கோன் என்பானிடமும், இருங்கோவள் என்பானிடமும் அழைத்துச் சென்று, அவர்களை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். என்றும், அவர்கள் மறுக்கவே, மனம் நொந்து திரும்பினார் என்றும் புறநானூற்றிற் காணும் மூன்று செய்யுட்கள் (199,200, 201) வழி அறியமுடிகின்றது.
பதிற்றுப்பத்தின் பதிகங்கள் சிலவற்றில், சேரவேந்தர் வேளிர் குடியினர்பால் பெண் கொண்டமைபற்றிப் பேசுகின்றன.7 எனினும், நூலின் கண் இதற்கான சான்றில்லை. பிற இருகுடி யினரும் வேளிர் குலத்திற் பெண் கொண்டைமைக்கும் சங்க இலக்கியங்களிற் சான்றில்லை. இடைக்காலத்து உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பியவுரையில் சோழன் இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடமும் அவன் மகன் கரிகாலன் நாங்கூர் வேளிடமும் பெண்கொண்டனர் என்று குறித்தார். மேலும், முடியுடைவேந்தர்க்கு மகட்கொடைக்குரிய ரெனச் சில வேளாண் மாந்தரைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுள் ளார்.
மகட்பாற் காஞ்சிச் செய்யுட்களில் இடம்பெறும் குறுநிலத் தலைவர் வேளிர் குடியினரே என்று நிலைநாட்டச் சான்றில்லை. எனினும், அடிப்படையில் பிடவூர், அழுந்தூர், நாங்கூர் ஆகிய பகுதிகளிலிருந்த வேளிர் குடியினரின் முன்னோராக இவர் களைக் கொண்டால், ஒரு காலத்தில் வேந்தர் குடியொடு மணவுறவாற்கலக்க முன்வாராதிருந்தவருள் ஒரு பிரிவினர் பின்னர் மனம் மாறி அவருடன் மணவுறவு கொண்டனரென்றும் மகட்பாற் காஞ்சிச் செய்யுட்கள் முன்னைய நிலையைக் குறிக் கின்றன என்றும் கொள்ள இடமுண்டு. எனினும் துணிந்து கூற இயலவில்லை.
மகட்பாற் காஞ்சிச் செய்யுட்களில் இடம்பெறும் குறுநிலமன்னர் யாவராயினும், அவர்கள் தம் குடியை மேலானகுடியென்று கருதுவோராகவும் வேந்தர்களைத் தம்மினும்தாழ்ந்தோராக மதிப்போராகவும், செல்வத்தைவிடக் குடிமானத்தையும் அதனால் எழுந்த மறமாண்பையும் பெரிதாக மதிப்
போராகவும், தம் உயிரும் உடைமையும் சுற்றமும் ஊரும்அழிந்தொழியிலும் தம் பெண்களைத் தம்மொடு நிகராதவேந்தர்க்குக் கொடுத்தலில்லை என்று உறுதி பூண்டு உயிரைக்கொடுக்க முந்துவோராகவும் படைக்கப்பட்டுள்ளனர். இத்தகையமுதுகுடிப்பண்பே பிற்காலக் கலம்பகங்களின் ‘மறம்’ என்னும்உறுப்பிலும் வெளியிடப்படுகின்றது.”
மகட்பாற் காஞ்சித் துறைச் செய்யுட்கள் வேந்தர் புகழ்பாடு வனவல்ல. மாறாக அவை குறுநிலத் தலைவரின் மறமாண்பினைப் பாராட்டுவனவாகவே தோன்றுகின்றன.
சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்-அ. தட்சிணாமூர்த்தி
விலை: 275/-
Buy this book online: https://www.heritager.in/product/sanga-ilakkiyangal-unarththum-manitha-uravugal/
WhatsApp to Order: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Website: www.heritager.in
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/