குமரன் குடவரை :
உயர்ந்த மலையின் தென்மேற்குச் சரிவில் தடைமட்டத்திலிருந்து சுமார் பதினைந்தடி அடி உயரத்தில், சுமார் 20 அடி நீளம், 20 அடி அகலம், 8 அடி உயரம் (20′ x 20′ × 8′) கொண்ட, இத்தலத்திலேயே பெரிய குடவரையாக பண்டைநாளில் சமணக் குடவரையாகத் திகழ்ந்துள்ளது. பண்டைநாளில் இக்குடவரை, பெரிய சமணக்குடவரையாக அதற்குரிய அனைத்து அம்சங்களும் பெற்றுத் திகழ்ந்திருக்க வேண்டும். இதுவும் சமணப்பள்ளியாக இருந்திருக்க வேண்டும். வடபுறச் சரிவில் உள்ள சிறிய குடவரை போல இங்கும் சமண தீர்த்தங்கரர் சிற்பங்களும் கற்படுக்கைகளும் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் சில மாற்றங்கள் செய்து புதுப்பிக்கப்பட்டு சைவக் குடவரையாக குமரன் குடவரையாக மாற்றம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.இந்நாளில் இக்குடவரை அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் கருவறையாகத் திகழ்கிறது.
குமரன் குடவரை
பண்டையச் குடவரையின் சமணக் உட்பகுதி, ஆங்காங்கே செதுக்கப்பட்டு சீர்செய்யப்பட்டுள்ளது. பெரிய அளவிலான ஒரே அறையாக இருந்த பண்டைய சமணக்குடவரையை, பின்னாளில் மூன்று அறைகளாகப் பிரித்து இடையே சுவர்கள் எழுப்பி நுழைவாயில்களும் அமைத்து, கருவறை, அர்த்தமண்டபம். முகமண்டபம் எனப் பாகுபாடு செய்து குடவரைக்கோயிலாக மாற்றியுள்ளனர். கருவறையிலும், அர்த்தமண்டபத்திலும் குமரன், வள்ளி, தெய்வயானை சிற்பங்களைத் தவிர வேறு எவ்விதச் சிற்பங்களோ கட்டடக் கலை வேலைப்பாடுகளோ இடம் பெறவில்லை. முகமண்டபத்தில் அறுபட்டை வடிவிலான இரு தூண்கள் அமைக்கப்பட்டு தூண்களைச் சுற்றிலும் செம்புத்தகடு கொண்டு வேயப்பட்டுள்ளது.
குடவரையின் முகப்புப்பாறை சமமாக வெட்டப்பட்டு, பாறையையொட்டி கட்டடக் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. எனவே அருள்மிகு கழுகாசலமூர்த்தியின் கருவறையாகத் திகழும் குடவரை, பண்டைநாளில் சமணக் குடவரையாக இருந்தது என்பதும், பின்னர் புதுப்பிக்கப்பட்டு சீர்செய்யப்பட்டு சைவக் குடவரையாக மாற்றியமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்கள் அனைத்தும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க இடமுண்டு.
கழுகுமலைத் தலத்தில், கி.பி.12ஆம் நூற்றாண்டில் தான் சிவனுக்கென்று கட்டடக் கோயில் ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. (ஹசுநு 349,1965-66). குடவரைக் குமரன் கோயில் இருக்கும் கோயில் வளாகத்தில் தான் இச்சிவன் கோயிலும் அமைந்துள்ளது. ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் இச்சிவன் கோயிலை. என் அழைக்கின்றனர். சம்புலிங்கேஸ்வரர் கோயில் தோற்றுவிக்கப்பட்ட கி.பி.12ஆம் நூற்றாண்டில்,குடவரைக் குமரன் கோயில் இருந்ததாகக் கூறுவதற்கான சான்றுகள் எதுவும் நமக்குக் கிட்டவில்லைஏனெனில், தற்போதுள்ள அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயிலின் கட்டக்கலை அமைப்புகளும், சிற்பக்கலை வடிவங்களும் கி.பி.13ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தியவை எனலாம்.
கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் கழுகுமலையில் சமண சமயத்தின் செல்வாக்குக் குறையத் தொடங்கி இருக்கிறது. எனவே கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்கு முன்பு வரையிலும் இக்குடவரை சமணக் குடவரையாகத்தான் திகழ்ந்திருக்க வேண்டும். இக்குடவரையில் இடம்பெற்றிருந்த தீர்த்தங்கரர் திருவுருவங்களும், துறவியர் உறைந்த கற்படுக்கைகளும் அகற்றப்பட்டு சிதைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்க வேண்டும். இக்குடவரை, குமரன் கருவறையாக மாற்றம் பெற்றது. சமயக் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் நிகழ்ந்ததாகக் கூறமுடியாது. ஏனெனில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வெட்டுவான்கோயில் எனும் சிவன் கோயில் தோற்றுவிக்கப்பட்டாலும், கி.பி.பதினோராம் நூற்றாண்டிலிருந்து தான் இத்தலத்தில் இந்து சமயம் வளர்ச்சிபெறத் தொடங்கியிருக்கிறது.
தொடக்கத்தில், சமணக்குடவரைக் கருகில், சம்புலிங்கேஸ்வரர் எனப்படும் சிவன்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதன்பின்னரே, பராமரிப்பின்றிப் பாழடைந்து கிடந்த சமணக் குடவரை செம்மைப்படுத்தப்பட்டு, சீர்செய்யப்பட்டு, சைவக்குடவரையாக, குடவரைக் குமரன் கருவறையாக, அருள்மிகு கழுகாசலமூர்த்தி மகிழ்ந்துறையும் கருவறையாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய மாற்றம், விசயநகர மன்னர் ஆட்சிக்காலமான கி.பி. 13ஆம் நூற்றாண்டிலோ அதன்பின்னரோ தான் நிகழ்ந்திருக்க வேண்டும். இதேபோன்று தான், உயர்ந்த மலையின் வடபுறச்சரிவில் உள்ள இரண்டாவது குகைப்பள்ளியும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ அதற்குப்பின்னரோ திருவானைக்கா அய்யனார் கோயில் கருவறையாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். எனவே இந்தச் சமணக் குடவரையும் குகைப்பள்ளியும் இந்துசமயக் கோயில் கருவறைகளாக மாற்றம் பெற்றது சமயக்காழ்ப்புணர்ச்சியால் அல்ல என்பது தெரியவருகிறது.
கழுகுமலையும் சமணமும் – செ.மா.கணபதி
விலை: 135/-