பூலித்தேவனா?
புலித்தேவனா? – பேரா. ந. சஞ்சீவி
உண்மை வெளிவர வேண்டும் :
தமிழ்நாட்டிலே, இன்று எங்கு பார்த்தாலும் ஒரு விநோதமான வருத்தம் தரக்கூடிய கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. ‘கட்டபொம்மன் தமிழ் மானங்காத்த மாவீரன்’ என்று ஒரு சிலரும், ‘இல்லை இல்லை! அவன் ஒரு கொள்ளைக்காரன், என்று ஒரு சிலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். இரு சாரார் கருத்துக்களும் மக்கள் மத்தியிலே நாடோறும் ஒருவித வெறியுடன் விதைக்கப்பட்யிள் வருகின்றன. இருசாராரும் தத்தம் கருத்துக்களுக்கு ஏற்பப் பழைய சரித்திர சம்பந்தமான ஆதரவுகளுக்கு விளக்கமும் வியாக்யானமும் தருகின்றனர்.
“இறந்துபோன வீரர்களைப் பற்றி இப்படிக் கிளர்ச்சியும் விவாதமும் தேவையில்லாதவை’ என்பதும், ‘அவர்களைப் பற்றிய விவாதம் கூடாது என்பதும், பொதுவான, அனைவரும் கொண்டிருக்கிற நியாயமான கருத்தாகும். ஆனால், ‘இதுவரை எந்தக் கட்டபொம்மனை ‘மாவீரன்’ என்று பேசியும் எழுதியும் புகழ்பாடியும் வந்தோமோ, சவனையே இன்று குறை கூறவும் சிலர் முன் வந்துவிட்டார்களே? இது சரித்திரம் சம்பந்தப்பட்டவரை எப்படியிருந்தாலும், நம் பேச்சில் கவர்ச்சியுடையவர்களாகிக் கட்டபொம்மனைப் போற்றிய மக்கள், இந்த எதிர்க்கருத்து வளருமானால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ? நம் மதிப்பும் கெளரவமும் என்னவாகுமோ? எனவே, இதனை எப்படியும் எதிர்க்க வேண்டும்; அதற்குக் கட்டபொம்மன் வீரன்தான் என்ற ஆதாரங்களைத் தேடித் தருவதைவிட, எதிர்ப்பவர்களைத் தனிப்பட்ட முறையிலே தாக்கிப் பேச விடாது செய்துவிட வேண்டும்’ என்று கட்டபொம்மன் ஆதரவாளர்கள் பலரும் தவறான கருத்தோடு பலவாறாக முயல்கின்றனர்.
கட்டபொம்மனோ தெலுங்கன்;கம்பளத்தான்; பாஞ்சைப் பதியின் தலக்காவலுக்குச் சென்ற அவனுடைய மூதாதை அந்நாட்டை வஞ்சகமாகக் கைப்பற்றிக் கொண்டவன். பரம்பரை பரம்பரையாகத்தமிழ்நாட்டில் நல்வாழ்வுக்கு ஊறு செய்தவர்கள்தாம் அவன் முன்னோர். இவனோ, போராடாது, போரிலே வீரமரணமும் பெறாது, ஓடி ஒளிந்து கடைசியில் புதுக்கோட்டைக் காட்டில் பிடிபட்டவன். இவனைப் போய் வீரன் என்று போற்றுவதால் தமிழ்ப் பண்புக்கே அவமானம் என்று குமுறுகின்றனர் கட்டபொம்மனை எதிர்த்து எழுந்திருப்பவர்கள்
இவர்கள் எதிர்ப்புக்கு உதவியாக நான்காவது கட்டபொம்மனுக்கு முந்திய காலத்திலேயே வெகு தீரமுடன் போராடிய நெற்கட்டாஞ் செவ்வல் பூலித்தேவரின் போராட்டங்களும், பராக்கிரமச் செயல்களும் இவர்கள் கவனத்தை இழுத்தன. பூலித்தேவர்தான் மாவீரர் என்பதற்குரிய சான்றுகளை இந்தக் கூட்டத்தினர் திரட்டிச்சேகரித்தனர். தென்னகத்திலே பதினெட்டாம் நூற்றாண்டில் புரட்சிக்கொடியேந்திப் போரிட்ட தமிழ்வீரன் பூலித்தேவன்தான் என்று தெரிந்தது. பூலித்தேவன் புகழைப் பேசவும் எழுதவும் இவர்கள் தொடங்கினர்.
இப்படியாக, இருவேறுபட்ட கருத்து வேறுபாடுகளும் சரித்திர ஆராய்ச்சி செய்பவர்களிடையே மட்டும் இருந்தால் அது பற்றி அதிகமாகக் கவலைப்படவேண்டிய அவசியமே கிடையாது. ஆனால், இரண்டு சாராருக்கும் இரண்டு தனிப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் வேறு இருக்கின்றன.
ஆகவே, சரித்திர சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாடு என்ற நிலைமை மாறி அரசியல் பிரச்சாரத்திற்குரிய விஷயமாகக் கட்டபொம்மன் பூலித்தேவன் பிரச்சினை இப்போது உருவாகிவிட்டது.
தமிழகம் சம்பந்தப்பட்ட மட்டில் தமிழகத்தில் பரம்பரையாக வாழ்ந்து வந்தவனும், தமிழகத்து வீர மறவனும், தன்னிகரற்ற ஆற்றலுடன் வெள்ளைப் படைகளையும், கும்பினிப் படைகளையும், துரோகிகளின் படைகளையும் எதிர்த்துநின்று உரிமைக்குரல் எழுப்பிய தமிழர் தலைவனுமான பூலித்தேவனுக்குத்தான் முதலிடம் தரப்படவேண்டும். இதில் மாறுபட்ட அபிப்பிராயம் எதுவும் எவருக்கும் இருப்பதற்கு இடமே கிடையாது.
கட்டபொம்மனைவிடக் காலத்தால் பூலித்தேவன் போராட்டம் முந்தியது. போராட்டத்தின் அளவும் கடுமையும் அதிகமானவை. அவன் நடத்திய போர்ச்செயல்களும், அவனை வீழ்த்த மாற்றார் மேற்கொள்ள வேண்டியிருந்த ஏற்பாடுகளும் இழப்புகளும் பயங்கரமானவை. அவன் நண்பர்கள் மாபெரும் தகுதியுடையவர்கள்.அவன் திட்டம் அப்பழுக்கில்லாத உரிமை முழக்கம். டச்சுக்காரரோடோ அல்லது வேறெந்த ஐரோப்பியரோடோ அவன் உறவு கொள்ளவில்லை. எல்லோரையும் பகைவராகக் கருதித் தமிழ் மண்ணின் சுதந்திரத்தைக் தாக்க மேலைப்படாகைப் பாளையங்களையெல்லாம் ஒன்றுதிரட்ட முற்பட்டவன். இவன் முயற்சியினை ஐகவீர கட்டபொம்மன் கூட்டமும் ஆதரித்திருந்தால் தமிழ்நாட்டுச் சரித்திரம் வேறு விதமாக உருவாகியிருக்கும். இதைக் கட்டபொம்மனை ஆதரிப்பவர்கள் கூட ஏற்றுக்கொள்கின்றனர்.
இந்த நிலையில் கட்டபொம்மன் பற்றிய விவாதத்தை விட்டு விட்டு இருசாராரும் ஒப்புக்கொள்ளும் பூலித்தேவனைப் போற்றி வந்தால் தமிழ் மக்கள் உள்ளம் களிப்படையும். ஆனால், இந்த நல்ல மனப்பான்மை நாட்டிலே வேர்கொள்ளவில்லை
கட்டபொம்மன் ஆதரவாளர்கள் பூலித்தேவனைப் பற்றி எவராவது பேசினாலே அவரைத் தம் பகைவராகக் கருதத் தொடங்குகின்றனர். பூலித்தேவர் புகழ்பாட முன் வந்தவர்களோ கட்டபொம்மன் புகழ் பாடுவோர் தமிழ்வீரனைப் போற்ற மறுப்பவர்கள் என்றே கருதுகின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், பிரசாரமும் விவாதங்களும் போகிற வேகத்தில் எப்பொழுதோ, எவராலோ ‘பூலித்தேவன்’ என்ற பெயர் ‘புலித்தேவன்’ என்று பிழையாக எழுதப்பட்டுவிடவே, அதனையே பூலித்தேவர் புகழ் பாடுவோரிற் பலர் பின்பற்றித் தமிழ்மக்களிடையே மீண்டும் மீண்டும் வற்புறுத்திப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
இந்த இரு சாராரின் சிந்தனைகளுக்கும் பொதுவான சில செய்திகளைச் சொல்லி, வரலாற்றில் உண்மை எது என்று அறிவதற்கும் அறிந்தவற்றைப் பரப்புவதற்கும் பாடுபட வேண்டுமே தவிரப் பிழையாக ஒன்றை முதலில் கொண்டுவிட்டதால் பின்னர் அதனை மாற்றாது அப்படியே சாதிக்க வேண்டும் என்று பிடிவாதம் கொள்வது தவறு என்று விளக்கி உரைக்க எழுந்ததே இச்சிறு நூல்.
இதன்கண் காணப்படுவன என் கைக்குக் கிடைத்த ஆதாரங்கள், செய்திகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றில் மாறுதல்கள் இருக்குமானால் அதனை ஆதாரப்பூர்வமாக மறுப்பதும் விளக்குவதும் வரவேற்கப்பட வேண்டியவை. அவற்றை மனப்பூர்வமாக ஏற்கவும் என்னளவில் தயங்கமாட்டேன். பிழையைத் திருத்திக் கொள்ள உதவியதற்கு நன்றியும் உடையவனாயிருப்பேன்.
ஆனால், அதேபோல இதனைக் கண்ணுறும் பிறரும், இதன் கண் கூறப்படும் கருத்துக்களைச் சீர்தூக்கி ஆராய்ந்து தாங்கள் இதற்குமுன் கொண்டிருந்த கருத்துக்கள் மாற்றப்பட வேண்டியவை என்று பட்டால் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.
மேலும், பொதுவாக, நம் நாடு இன்று விடுதலை பெற்றிருக்கின்ற வேளையில், நம்மவரான மந்திரிகளே நம் ராஜ்யத்தை நிர்வகித்து வரும் காலத்தில், நம் வரலாற்றுச் செய்திகளைப் பற்றி, நம் நாட்டிலேயே கட்சிச் சண்டைகள் உருவாவதையும் பிறவற்றையும் பார்த்து வாளாவிருப்பது நன்றன்று. வரலாறு ஒருவரின். ஒரு சாராரின் உரிமைச் சொத்துமல்ல. ஒரு சாராரின் மனப்போக்கிற்கு ஏற்ற வகையில் உருவாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அல்ல. அவை கடந்த கால நிகழ்ச்சிகள். அவற்றை இனி எவரும் மாற்றவோ மறைக்கவோ முடியாது. அதனால், நம் மதிப்புக்குரிய சென்னை அரசாங்கமே இந்த இரண்டு வகையான தகராறுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலே தலையிட்டு, முறையான சரித்திரம் ஒன்றை உருவாக்கி வெளியிடத் தகுதிவாய்ந்த ஒரு குழுவினரை அமைத்தால் எவ்வளவோ சிறப்பாயிருக்கும்.
ஆராய்ச்சியில் ஈடுபடும் எழுத்தாளர் பலருக்குக் கிடைக்க வாய்ப்பற்றிருக்கும் பல புத்தகங்களும், கடிதப் போக்குவரத்துக் களும், குறிப்புக்களும் அரசாங்கம் நினைத்தால் மிகவும் எளிதாகக் கிடைக்கும். அவற்றை ஆராய்வதற்கு வேண்டிய ஒத்துழைப்புக்களும் பலவாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதனால், மதிப்புக்குரிய நம் சென்னை மாநில அரசு தென்னகத்துப் பாளையங்களின் போராட்டம் என்ற முறையிலே ஆதாரபூர்வமான நூலொன்றை வெளியிட முன் வரவேண்டும் என்று மீண்டும் வேண்டுகின்றேன். அல்லது. அப்படி முன்வரும் சிலருக்காவது வேண்டிய வசதிகள், செய்திகள் சேகரிப்பதற்குச் செய்து உதவுமாறும் வேண்டுகின்றேன்.
தமிழர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிற்கூடத் தற்புகழ்ச்சியை விரும்பாத தங்கள் பழைய பண்பிலிருந்து எள்ளளவும் மாறிவிடவில்லை. இதன் காரணமாக, வரலாறு முறையாக எழுதும் வாய்ப்பற்ற நிலையிலேயே காணப்படுகிறது. அங்கங்கே, கிடைக்கும் குறிப்புக்களையும், செய்திகளையும் கொண்டே வரலாற்றைப் பின்ன வேண்டியதிருக்கிறது. இப்படிச் செய்யும் போது, அப்படிப் பின்னுவோரின் சொந்த மனோதர்மங்களும் வரலாற்றில் கலந்துதுடுகின்றன. இருவேறு கருத்துடையோர் எழுதும் ஒரே சரித்திரம் இருவேறு போக்கிலேயே அமைந்தும் விடுகிறது.
இவர்களின், ஆதாரங்களில் பலவும் அந்தக் காலத்திலே கும்பினியில் பணியாற்றிய பலரின் கருத்துக்களையும் கடிதப் போக்குவரத்துக்களையும் ஆதாரமாகக் கெண்டவை. பாளையக்காரரை அடக்கி ஒடுக்கவென்றே சென்றவர் இவர்கள். இவர்கள் முடிவுப்படி பயங்கர எதிரிகள் என்பவர், மிகத் தீவிரமாக இவர்களை எதிர்த்து தின்ற வீரமறவர்கள்தாம் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.
எனவே, பாரபட்சமற்றுச் செய்திகளை ஆராய்ந்து முடிவு கூறும் ஒரு தக்க குழுவினர் இப்பணியிலே ஈடுபடுமாறு அரசாங்கம் செய்ய வேண்டும் என மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்.
முதல் விடுதலை வீரர் பூலித்தேவர் -பேரா. சு. சண்முகசுந்தரம்
விலை: 280
Buy this book online: https://www.heritager.in/product/muthal-viduthalai-veerar-pooliththevar/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Website: www.heritager.in
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/