மதுரையில் வாணாதிராயர்கள் வரலாறு
“பெரும்பாணப்பாடி, வாணகோப்பாடி என்ற சிறு நிலப்பரப்பு தொண்டை மண்டலத்தில் இருந்தது. இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தின் சில பகுதிகளையும் ஆந்திரத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு பெரும்பாணப்பாடி ஆகும். இதனை ஆட்சி செய்தவர்கள் வாணர் (அ) பாணர் என்று அழைக்கப்படுகின்றனர். படைவீடு என்னும் ஊர் இவர்களது முக்கிய நகரமாக இருந்தது. சங்கப்பாடல்களில் பேசப்படும் பாணர் என்பாரிடமிருந்து இவர்கள் வேறுபட்டவர்கள். பாணர், கூத்தர் என்பார் ஆடிப்பாடி வாழும் கலைஞர் குழுவினர். ஆனால் நாம் காணும் வாணர்கள் அரசமரபினர்.
இவ்வரசமரபினர் தங்களை மகாபலிச் சக்கரவர்த்தியின் வழி வந்தவர்கள் எனக் கூறிக் கொள்வர். இவர்கள் தீவிரமான வைணவப் பற்றாளர்கள். மகாபலி வாணாதிராயர் என்றே தங்களை அடையாளப் படுத்திக் கொள்கின்றனர். அகநானூறு 325ஆம் பாடலில் பாணர் நாட்டுக்குச் செல்லும் வழியை மாமூலனார் குறிப்பிடுகிறார். அகம் 113ஆம் பாடலில் பாணர் நாட்டில் நடைபெற்ற ஒரு விழா விவரிக்கப் படுகிறது. அகம் 117, 204 மற்றும் நற்றிணை 340 ஆகிய பாடல்களில் பாணன் சிறுகுடியின் வளம் சிறப்பிக்கப்படுகிறது.
சிறுகுடி என்பதைக் கொண்டே இம்மரபினர் நேரடி அரசுரிமை பெறாதவர்கள் என்றும், மன்னர்களின் பட்டத்தரசி அல்லாத பிறமனைவியர்க்குப் பிறந்தவர்கள் என்றும் கருதவும் இடமுண்டு. வரலாற்றுத் தொடக்ககாலம் முதல் வாணர்கள் குறுநிலத் தலைவர் களாக அடையாளங்காணப்படுகின்றனர். கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் இவர்கள் சாதவாகனரின் கீழ் அடங்கிய சிற்றரசர்களாக அரசியலில் அறிமுகம் பெறுகின்றனர். பின்னர் தென்னகத்தில் கதம்பர், சாளுக்கியர், ராட்டிரகூடர், பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகரர் என அனைத்து அரசமரபினருடனும் நம்பிக்கையான அதிகாரிகளாகவும், ஆளுநர்களாகவும், படைத்தலைவர்களாகவும் செயல்பட்டுள்ளனர். பாண்டியப் பேரரசு மரபுக்கு இணையாக நீண்ட, நெடிய வரலாற்றுக்கு உரியவர்களாக வாணர்மரபும் நிகழ்கிறது.
தருமபுரிப்பகுதியில் கிடைக்கும் 7, 8ஆம் நூற்றாண்டு நடுகற் கல்வெட்டுகளில் பெரும்பாண இளவரைசர், பெரும்பாண மூத்தரைசர் என்ற பெயர்களில் இவர்கள் இடம்பெற்றுள்ளனர். கங்கர், நுளம்பர் போன்று வாணர்களும் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஆட்சிக்காலங்களில் கங்கர்களுக்கும், வாணர்களுக்கும் இடையில் பல நிகழ்ந்துள்ளன. பல்லவர்கள், சோழர்கள் வாணர்கள் தமிழகத்தின் தென்பகுதிக்கும் பரவலாயினர். சேலத்திற்கு அருகிலுள்ள ஆறுகளுரைத் தலைநகராகக் கொண்டு வாணர்களின் ஒரு பிரிவினர் செயல்பட்டனர். அப்பகுதி மகதை மண்டலம் எனப்பட்டது. இது தென்னார்க்காடு, சேலம், திருச்சி மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
சோழர்கள் வலிகுன்றியவுடன் அவர்களின் கீழிருந்த வாணாதி ராயர்கள் பாண்டியர்கள் பால் விசுவாசம் காட்டினர், மதுரை, திருச்சி பகுதிகளில் பல பொறுப்புகளில் பாண்டியர்க்கு அடங்கிச் செயல் பட்டனர் ஆனால் பாண்டிய நாட்டுப் பகுதிகளில் கிடைக்கும் கல்வெட்டுகள் சில கி.பி.11ஆம் நூற்றாண்டு முதலே வாணாதிராயர்கள் இப்பகுதிகளில் பரவியிருந்தமையை வெளிப்படுத்துகின்றன. அழகர் கோயிலில் காணப்படும் கி.பி. 11ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் பாணாதிராஜன் என்ற பெயர் குறிப்பு மட்டும் கிடைத்துள்ளது. கி.பி 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தென்கரைக் கல்வெட்டு ஒன்றில் வாணாதிராசன் என்னும் அரசியல் அதிகாரி ஒருவன் கையொப்ப மிட்டுள்ளான். இக்காலத்தில் சோழர்களிடத்திலும் பாண்டியர்களிடத் திலும் மாறி மாறி பணியாற்றிய பல் வாணாதிராயர்களைக் காணலாம்.
குடுமியான்மலையிலுள்ள பாடல் கல்வெட்டு ஒன்று வாணாதி ராயன் ஒருவன் பாண்டியர்களை வெற்றி கண்டு நாட்டுக்குத் தெற்கே துரத்தினான் எனக் கூறுகிறது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் பாண்டியன் சோழ நாட்டை வென்று அப்பகுதியைப் பாணர்க்கு கொடுத்தான் என்று மற்றொரு பாடல் கல்வெட்டு கூறுகிறது.
“செம்பியனைச் சினமிரியப் பொருது சுரம்புக ஓட்டி பைம் பொன் முடிபறித்து பாணனுக்குக் கொடுத்தருளி”
என்று வரும் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி இதனை உறுதிப்படுத்தும். முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் சுந்தர பாண்டிய வாணாதிராயன் எனும் ஒருவன் ஒரு அதிகாரியாகச் செயல்பட்டுள்ளான். மாறவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று சீவல்லவன் மதுரைப் பெருமாள் ஆன வாணகோவரையன் என்று ஒருவனைக் குறிப்பிடுகிறது. விக்கிர பாண்டியன் கல்வெட்டு ஒன்றில் மகாபலி வாணாதிராயன் ஒருவன் அரசனின் முதலி எனச் சுட்டப்படுகிறான். முதலாம் மாறவர்மன் குலசேகரன் காலத்தில் பிள்ளை மகாபலி வாணாதிராயர் கோநாட்டின் ஆளுநராகக் குறிப்பிடப்படுகிறான்.
சில பாண்டிய அரசர்கள் தங்களது வாணர் தலைவர்களைப் பிள்ளை, நம் மக்கள் என்று குறிப்பிடுகின்றனர். இது வெறும் பாசவார்த்தை அல்ல. ஏதோ ஒருவகை உறவு இருக்கலாம் என்றே தோன்றுகிறது. பல வாணர் தலைவர்கள் பாண்டிய அரசர்களின் பெயரையே கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக சுந்தர பாண்டிய வாணாதிராயன், பராக்கிரம பாண்டிய மகாபலி வாணாதிராயன் ஆகிய பெயர்களைச் சுட்டலாம். இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் இரண்டு கல்வெட்டுகள் தச்சனூர் அருளாளன் சேவகத்தேவன் என்ற வாணாதிராயனைப் பாண்டியனின் அம்மான் என்று குறிப்பிடுகின்றன. இவன் மதுரைக்கோயிலில் பல திருப்பணி களைச் செய்துள்ளான். இவன் மதுரை சுந்தரேஸ்வரர் கோயிலில் சந்தி ஒன்று ஏற்படுத்தி அதற்காக ஒரு கிராமத்தைக் கொடை அளித்துள்ளான். தன் பெயரால் ஏற்படுத்தின வாணாதிராயன் வாசலில் இறைவன் வரும்போது பரதேசி, கோவணவரைக் கொண்டு சடாரிப் பண்ணில் திருவெம்பாவை பாட ஏற்பாடு செய்துள்ளான்.
விஜய நகர ஆட்சிக் காலத்திலும் வாணாதிராயர்கள் மதுரைப் பகுதியில் செல்வாக்கு மிக்க அதிகாரிகளாகத் திகழ்ந்தனர். லக்கண்ண தண்ட நாயகர் காளையார் கோயில் பகுதியிலிருந்து சில வாணாதி ராயர்களை மதுரையில் பணி அமர்த்தியுள்ளார். திருமாலிருஞ்சோலை நின்றான் ஆன மாவலி வாணாதிராயன் ஒருவன் விசயநகரர் காலத்தில் (சகம் 1350) தன்னை மதுராபுரி மகாநாயகன் என்று கூறிக் கொள்ளு கிறான். உறங்காவில்லி தாசன் மாவலி வாணாதிராயன் என்பவர் கி.பி. 1453இல் மதுரையின் ஆட்சியை நடத்தியுள்ளான். திருமாலிருஞ் சோலை நின்றான். உறங்காவில்லிதாசன் ஆன மாவலி வாணாதிராயன் என்றும் அவன் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறான். விசயநகர வேந்தர்கள் வலிமை குன்றிய போது வாணாதிராயர்கள் தங்கள் தனி ஆணையையும் வழங்கி உள்ளார்கள். புவனேகவீரன், சமர கோலாகலன் என்ற பட்டப்பெயர்களையும் இவர்கள் கொண்டுள்ளனர். இவர்கள் தீவிர வைணவ பக்தர்கள். கருடக் கொடியைக் கொண்டவர்கள். தாங்கள் வெளியிட்ட காசுகளில் ஒருபுறம் புவனேகவீரன் (அ) சமரகோலாகலன் என்ற பெயரும் மறுபுறம் மண்டியிட்ட கருடன் உருவமும் பொறித் துள்ளனர். கருட கேதனன், வேதியர் காவலன், வீரகஞ்சுகன், பூபால கோபாலன் என்று மேலும் சில சிறப்புப் பெயர்களும் இவர்கள் பெற்றுள்ளனர்.
அழகர்கோயில் பகுதியே இவர்களின் அரசியல் தலைநகரமாக விளங்கியது. இக்கோயிலைச் சுற்றி வலிமையான கோட்டையைக் கட்டியவர்கள் இவர்களே அழகர்கோயிலிலும், திருவில்லிபுத்தூர் கோவிலிலும் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர். தங்கள் கல்வெட்டு களின் தொடக்கத்தில் அழகர் திருஉள்ளம் என்று குறிப்பிடுவது இவர்கள் வழக்கம் மதுரை நாயக்கர் காலத் தொடக்கம் வரை இவர்கள் செல்வாக்குடன் திகழ்ந்தனர். திருமாலிருஞ்சோலை நின்றான். சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயன், இறந்த காலமெடுத்த மாவலி வாணாதிராயர் என அடுத்தடுத்து பல தலைவர்கள் இப்பகுதியை நிருவகித்தனர்.
மாவலி வாணாதிராயர்கள் தீவிரமான வைணவ பக்தர்களாக இருப்பினும் சிவன் கோயில்களுக்கும் நல்ல ஆதரவு காட்டியுள்ளனர் இவர்களால் திருவில்லிபுத்தூர், காளையார் கோயில், அழகர்கோயில், மீனாட்சி அம்மன் ஆலயம் ஆகிய பல கோயில்கள் திருப்பணி கண்டுள்ளன. அழகர்கோயிலின் இறைவனுக்குப் பச்சை கற்பூரம். குங்குமப்பூ. சந்தனம் முதலியவற்றை அரைத்துச் சாத்துவதற்கு அழகிய அம்மி ஒன்றை உறங்காவில்லி தாசன் வாணாதிராயன் கொடுத்துள்ளான். அதில், திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன் உறங்கா வில்லிதாசன் ஆன சமரகோலாகலன் என்ற கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இன்று சோமசந்த விமானம் என்று பெயர் பெற்றுள்ள அழகர் கோயில் விமானம் உறங்காவில்லிதாசனால் கி.பி. 1464இல் கட்டுவிக்கப்பட்டது. இத்திருப்பணியைச் செய்ய திருவளவன் சோமயாஜி என்பவனுக்கு குலமங்கலம் என்ற ஊர், வரி நீங்கிய தானமாக அளிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் வாணாதி ராயர்களால் பல திருப்பணிகள் செய்யப்பட்டன என்பதை மதுரை திருவாலவாயுடையார் கோவில் திருப்பணிமாலை தெரிவிக்கிறது. குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டுச் சிதைந்து போன மண்டபம் ஒன்றைச் சீரமைத்துள்ளனர் வாணாதிராயர்கள். சொக்கநாதர் சன்னதி மகாமண்டபத்தின் முன்புறமுள்ள ஆறுகால் பீடம் வாணாதிராயர்களால் கட்டப் பட்டுள்ளது. அங்கயற்கண்ணி சன்னதியில் உள்ள முதலாம் திருச்சுற்று மண்டபத்தையும் சன்னதிக்கு முன்புறமுள்ள மகாமண்டபத்தையும் அதிலுள்ள பள்ளியறையையும், கட்டியவன் திருமாலிருஞ்சோலை மாவலி வாணாதிராயனே என்று திருப்பணி மாலை கூறுகிறது. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சில திருப்பணிகள் மாவலி வாணாதிராயர்களால் செய்யப்பட்டுள்ளன.
இன்று இக்கோயிலில் உள்ள திருமால், ஸ்ரீதேவி ஆகிய உற்சவத் திருமேனிகள் வாணாதிராயர்களின் கொடையாகும். மதுரைக் கூடலழகர் பெருமாள் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், மதுரையிலிருந்த எழுகடல் தெப்பக்குளம் ஆகியவை வாணாதிராயர்களின் கலைப்படைப்பாகும்.
அழகர்கோயில், வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கூடலழகர் கோயில் ஆகியவற்றில் வாணாதிராயர் காலச் செப்புத் திருமேனிகள் பல உள்ளன. இவ்வகையில் ஒரு சிற்றரசு மரபினராக இருந்த போதிலும் மதுரைப்பகுதி வரலாற்றில் வாணாதி ராயர்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளனர் எனலாம்.” – நூலிலிருந்து
மாமதுரை – பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம்
Buy: https://www.heritager.in/product/maamadurai/
Related Books