சமணசமயம் (ஜைன சமயம்)

சமணசமயம் (ஜைன சமயம்] :

இந்தியாவில் தோன்றிய தொன்மையான சமயங்களில் சமணசமயமும் ஒன்றாகும். வேதசமயத்திற்கு எதிராக சமணம், பௌத்தம், ஆசீவகம் முதலிய பல சமயங்கள் தோன்றின. வைதீகச் சமயப் புரோகிதர்களின் ஆதிக்கம், உயிர்க்கொலையுடன் கூடிய வேத வேள்விகள், நால்வருணப் பாகுபாடு, சமூக ஏற்றத்தாழ்வுக் கொடுமைகள் ஆகியவற்றுக்கு எதிராகவும் இவை தோன்றின. இவற்றில் சமணசமயமும் பௌத்த சமயமும் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றன. பௌத்தம் கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் படிப்படியாக இந்தியாவில் செல்வாக்கு இழந்து இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகளில் பெரும் செல்வாக்குப் பெற்று இன்றும் அந்நாடுகளில் மக்களால் பின்பற்றப்படும் சமயமாக இருந்து வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் மீண்டும் இது இந்தியாவில் மறுமலர்ச்சி பெற்றுப் பரவி வருகிறது. ஆனால் சமணசமயம் அது தோன்றிய காலங்களிலிருந்து இன்றும் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க சிறுபான்மை மக்களால் பின்பற்றப்படும் சமயமாக இருந்து வருகிறது. ஆனால் பௌத்த சமயத்தைப் போன்று சமண சமயம் வெளிநாடுகளுக்குப் பரவிச் செல்வாக்குப் பெறவில்லை.

ஆதிநாதர் தொடங்கி மகாவீரர் ஈறாக இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள் என்ற அறவழி காட்டும் அறநெறியாளர்கள் தோன்றி சமணசமயத்தை வளர்த்தனர் என்று சமண சமயத்தவர்களிடையே ஆழ்ந்த நம்பிக்கை இருந்து வருகிறது. சில ஆய்வாளர்கள் இச்சமயம் சிந்துசமவெளி நாகரிகக் காலத்திலிருந்து (கி.மு.2500-1800) தோன்றி வளர்ந்தது என்று கருதுகின்றனர்.’ ஆனால் தொல்லியல் மற்றும் வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் நோக்குவோமானால் இதற்கு வழுவான சான்றுகள் இல்லை. வரலாற்றாய் வாளர்கள் இருபத்துமூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவநாதர் (கி.மு.877–777.) அவரைத் தொடர்ந்து வந்த மகாவீரர் (கி.மு.599–527) ஆகியோர் காலங்களிலிருந்து இச்சமயம் தோன்றி வளர்ந்தது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன எனக் கருதுகின்றனர். சமண சமயம் தொடர்பான கருத்துக்கள் பார்சுவநாதர் காலத்திற்கு முன்பாக இருந்திருக்க வேண்டும். இச்சமயம் நிறுவனப்படுத்தப்பட்ட சமயமாக பார்சுவநாதர், மகாவீரர் காலங்களில் மாறியிருக்க வேண்டும். பார்சுவநாதர் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாரணாசி அரசக் குடும்பத்தில் பிறந்து அரசவாழ்வைத் துறந்து துறவு மேற்கொண்டார். அவர் போதித்த அறம் சதுர்தர்மம் (Caujjama Dharma) எனப்பட்டது. கொல்லாமை (அகிம்சை). பொய்யாமை, கள்ளாமை, ஆசை அறுத்தல் முதலிய நான்கும் (Caujjama Dharma) பாசுர்வநாதரின் முக்கிய அறக்கோட்பாடாக இருந்தது. இவற்றோடு பிரம்மச்சரியத்தையும் சேர்ந்து ஐந்துஅறமாக (Panca – Mahavirata) பஞ்சமகா விரதங்களை மகாவீரர் போதித்தார். மகாவீரரின் பெற்றோர்கள் பார்சுவநாதரின் கோட்பாடுகளைப் பின்பற்றினர் என்று சமணபௌத்த நூற்கள் கூறுகின்றன’ குறிப்பாக ஆசாராங்கம் (Acaranga sutra) என்ற சமணநூலும் சாமண்ண பாலசுத்த (Samannaphala-sutta) என்ற பௌத்தநூலும் இது பற்றித் தெரிவிக்கின்றன. எனவே இருபத்துநான்காவதாகத் தோன்றிய மகாவீரருக்கு முன்பாகவே பார்சுவநாதர் சமணக்கோட்பாடுகளைப் பரப்பினார் என்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் மகாவீரரே சமணர் அல்லாதோரிடையே அதிகம் அறியப்பட்ட தீர்த்தங்கரர் ஆவார்.

பீகார் மாநிலத்தின் வடக்குப் பகுதியிலுள்ள வைசாலிப் பகுதியிலுள்ள குந்தக்கிராமத்தில் சித்தார்த்தன் என்ற சிற்றரசனுக்கும் திரிசலா அரசிக்கும் மகனாக சத்திரியகுலத்தில் வர்த்தமானர் என்றழைக்கப்பட்ட மகாவீரர் கி.மு.599-ல் பிறந்தார். முப்பது வயதில் அரசவாழ்வைத் துறந்து துறவறம் மேற்கொண்டார். பல ஆண்டுகள் கடுந்தவத்திற்குப் பின்னர் ஜம்பியகம் (Jambhiyagama) கிராமத்திற்கு அருகில் ரிஜூவலுகா (Ujjuvaliya) ஆற்றங்கரையில் பிண்டிமர நிழலில் அமர்ந்திருந்த போது முழுதுணர்ஞானம் (கேவலஞானம்) பெற்றார். வினைகளை வென்றதன் காரணமாக பெருவெற்றிவீரர் என்ற பொருளில் மகாவீரர் என்றழைக்கப்பட்டார். நாற்பதாண்டு துறவு வாழ்விற்குப் பின்னர் பீகாரில் பாவாபுரி என்ற ஊரில் தமது எழுபத்திரண்டாவது வயதில் மகாவீரர் (பரி) நிர்வாணம்) கி.மு.527-ல் உயிர் துறந்தார்.

மகாவீரர் தமது போதனைகளைப் பீகார், உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட், வங்காளம் முதலிய மாநிலப்பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்துள்ளார்” எனக் கருதுகின்றனர்.

மகாவீரர் தமது சமய சங்கத்தைச் சாதுகள், சாதுவிகள், (துறவறத்திலுள்ள ஆண், பெண்கள்) சிராவகர், சிராகவிகள் (இல்லறத்தில் இருக்கும் ஆண்கள், பெண்கள்) ஆகியோரைக் கொண்டதாக நான்காகப் பகுத்தார். கௌதம இந்திரபூதியும் சந்தனாவும் அவரது முதல் ஆண், பெண் துறவிகளின் தலைவர்களாக இருந்து சமய வளர்ச்சிப்பணிகளில் ஈடுபட்டனர். மகாவீரரின் முக்கிய சீடர்களாகப் பதினோரு கணதரர்கள் இருந்தனர்.

ஜைனசமயம் – சமணசமயம் :

சமணசமயம் பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. நிகண்டசமயம், ஆருகதசமயம், ஜைனசமயம், அநேகாந்தவாதம், ஸியாத்வாதம் என்று பலவாறாக இச்சமயம் அழைக்கப்பட்டது.

‘நிர்க்கந்தர்’ என்றால் கட்டுகளில் விடுபட்டவர், பற்றற்றவர் என்று பொருள். பழைமையான சமண, பௌத்த நூற்களிலும் அசோகர் கல்வெட்டுகளிலும் சமணசமயத்தவரை ‘நிர்க்கந்தர்’ என்றே குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. எனவே சமண சமயத்தவர் பற்றற்றவர், கட்டுகளிலிருந்து விடுபட்டவர் என்று அழைக்கப்பட்டு அவரது சமயமும் நிகண்டசமயம் (நிர்க்கந்தர் சமயம்) என்று அழைக்கப்பட்டது.’

மதிக்கத்தவராக போற்றத்தக்கவராக விளங்கிய பிறவிப்பெருங்கடலைக் கடக்கஅறநெறிவழிகாட்டிய தீர்த்தங்கரரே அருகர் (Arhat) என்று அழைக்கப்பட்டார். இதனால் அருகரைப்போற்றி வழிபடும் சமண சமயத்தவர் சமயம் ஆருகதசமயம் என்று அழைக்கப்பட்டது.”

வினையை வென்ற வெற்றியாளர் ஜீனரைப் (தீர்த்தங்கரர்) பின்பற்றுவர் சமயம் ஜைனசமயம் என்று அழைக்கப்பட்டது.”

ஜைனசமயத்திற்குச் சமணசமயம் என்ற பெயர் தமிழ்நாட்டில் பெருவழக்காக இருந்து வருகிறது. சங்க இலக்கியங்களிலும் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவியங்களிலும் ஜைனர்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கியமான மதுரைக்காஞ்சியில் மதுரையில் வாழ்ந்த ஜைனத்துறவிகள் பற்றியும் அவரை வழிபடச்சென்ற ‘சாவகர்’ எனப்படும் ஜைனசமயத்து இல்லறத்தார் பற்றியும் குறிப்பிடப்படுகிறது.” சிலப்பதிகாத்தில் ஜைனசமயப் பெண்துறவி, ‘கந்தி’ (கவுந்திப்பள்ளி) என்றும் சமணசமய இல்லறத்தார் ‘உலகநோன்பிகள்’ என்றும் குறிப்பிடப்படுகின்றனர். ‘சாவகநோன்பிகள்’ என்று அருகரை (தீர்த்தங்கரர்) பற்றி பல இடங்களில் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.” மணிமேகலை காவியத்திலேயே ஜைனசமயத் தருமத்தைப் பின்பற்றுவோர் ‘நிகண்டவாதி’ என்று குறிப்பிடப்படுகின்றனர்.” மேலும் இச்சமயத்தவரைச் ‘சமணர்’ என்று குறிப்பிடும் வழக்கம் மணிமேகலையில் காணப்படுகிறது.” இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜைனசமயத்தவரைச் சமணர் என்று குறிப்பிடும் பெருவழக்கு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக வடஇந்தியாவில் மகாவீரர் காலத்திற்கு முன்பாகத் தன்னை வருத்தி தவம் செய்யும் எல்லாச்சமயத் துறவிகளையும் ‘சிரமணர்’ என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. இவர்கள் தமது வருத்தத்தைக் கருதாது உலகம் உய்யும்பொருட்டு உண்மையைத் தேடி அலைந்தவர்கள் ஆவர். பிராக்கிருத மொழியில் ‘ஸமண’ என்று வழங்கப்பட்ட சொல்லே ‘சிரமண’ (Sramana) என்று சமஸ்கிருத மொழியில் மாறி வழங்கித் தமிழில் அமணர், சமணர் என்று வழங்கப்படுகிறது. சமண, பௌத்த, ஆசீவகத்துறவிகளைக் குறிக்க வழங்கிய ‘சிரமணர்’ என்ற சொல்லே காலப்போக்கில் ஜைனர்களைக் குறிக்க ‘சமணர்’ என்று தமிழ்நாட்டில் வழங்கப்படுகிறது.” கி.பி.ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் இவர்களை ‘அமணர்’ என்றும் குறிப்பிடுகின்றார்.!5 இச்சொல்லும் ‘சிரமணர்’ என்ற சொல்லின் தமிழ் வடிவமாகும். ‘ஸமண’ என்ற சொல்லின் முதல் எழுத்து அ வாக தமிழில் மாறியுள்ளது. ‘அமணன்’ என்ற சொல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட மேட்டுப்பட்டித் தமிழ்பிராமிக் கல்வெட்டிலும் புகளூர்த் தமிழ்பிராமிக் கல்வெட்டிலும் சமணத் துறவியரைக் குறிக்க வழங்கப்பட்டுள்ளது.

அனேகாந்தவாதம் என்பதும் சியாத்வாதம் என்பதும் ஒரு பொருள் தரும் சொற்களே. எப்பொருளையும் ஒரு நோக்கில் காண்பது முழுமையான உண்மையைத் தராது. பல கோணத்திலிருந்து பார்ப்பதன் மூலமே அப்பொருளின் முழுமையான உண்மையை அறியமுடியும் என்பது சமணர்களின் கொள்கையாகும். இதனாலேயே அவர்களது சமயம் அனேகாந்தவாதம் என்றும் சியாத்வாதம் என்று அழைக்கப்பட்டது.”
(நூலிலிருந்து)

பாண்டியநாட்டில் சமணசமயம் (கி.மு.300 – கி.பி.1800) – முனைவர் வெ. வேதாசலம்
விலை: 1500/-
வெளியீடு: தனலட்சுமி பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/pandiya-naattil-samanasamayam-vethasalam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers