குலமுறை அமைப்பு :
குறுமன்ஸ் பழங்குடி சமுதாயம் குலமுறை சமுதாயம், குலங்களை அடிப்படையாகக் கொண்டது. குலமுறை சமுதாயம் தமிழகத்தில் பல இன மக்களிடையில் காணப்படுகின்றது. ஆனால் இம்முறை மற்ற சமுதாயத்தினரிடம் அதிகம் இல்லை. சில நேரங்களில் மட்டும் தென்படுகின்றது. மாறிவரும் நாகரிக உலகில் குலமுறை என்பது கடைபிடிக்கப்படாததாக உள்ளது. சமுதாயத்தில் மக்களின் தொகை கூடும்போதும், வெளியிலிருந்து புதிய இன மக்கள் வந்து சேரும் போதும் இம்முறை ஒதுக்கப்பட்டதாக காணப்படுகின்றது. ஆனால் குறுமன்ஸ் பழங்குடி மக்களிடையில் இம்முறை இன்றுவரை மதிக்கப்படுகின்றது. குலமுறைப்படி குறுமன்ஸ் சமுதாயங்களின் அமைப்புகள் காணப்படுகின்றன.
குலம் :
குலம் என்பது தொல் பழங்காலத்தில் உருவாக்கப்பட்டது. மிருகங்களிடமிருந்து தங்களை பிரித்துக்காட்டவும், சமுதாய அமைப்பை ஒழுங்குபடுத்தவும் குலமுறைகள் தோன்றியுள்ளன. குலமுறை தோன்றுவதற்கு அடிப்படையானது குடி என்ற அமைப்பு. குடி என்பது சமுதாயத்தின் அடிப்படைக்கூறு. பல குடிகள் ஒன்றாக இணைந்து வாழும் சமுதாயம் இனக்குழு சமுதாயம் என்று பெயரிடப்பட்டது. குடி என்பது இரத்த உறவு முறையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு குடியில் தாய்,தந்தை, மகன், அவனக்கு பிறக்கும் மகன் என்ற உறவு முறையைக் கொண்டது. இக்குடியிலுள்ளவர்கள் அனைவரும்ஒரு ரத்த உறவைக் கொண்டவர்கள். இந்த இரத்த உறவை ஒரு கொடி, ஒரு கொத்து, ஒரு கூம்பு, ஒரு குலம் என்று பல பெயர்களில் பல பகுதிகளில் அழைக்கின்றனர். கொத்து என்பது ஒரு செடியில் பூத்த மலர்களைப் போன்று ஒரு வழியில் வந்தவர்கள் என்றும், ஒரு கொடி என்பது ஒரு கொடியில் பல காய்கள் உருவாவதைப் போன்று ஒரு வகையைச் சார்ந்தவர்கள் என்றும், ஒரு கூம்பு என்பது ஒருவரை அடிப்படையாகக் கொண்டு வந்தவர்கள் என்றும் ஒரு குலம் என்பது ஒரு வழி முறையில் பிறந்தவர்கள் என்றும் பொருள் கூறலாம். இவை அனைத்தும் கூறும் ஒரு முறைதான் இரத்த உறவு. இவற்றில் ஒரு குலம் என்ற சொல் மட்டும் பரவலாக எல்லா இன மக்களுடைய வாழ்ககையிலும் பின்பற்றப்பட்டுள்ளது. இதை ஒரு குடி என்றும் கூறுவார்கள். ஒரு குடியில் அல்லது ஒரு குலத்தில் இரத்த உறவு கொண்டவர்கள் மட்டும் உள்ளனர்.
குலம் என்பது எவ்வாறு தோன்றியது என்பதற்கு சில விளக்கங்கள் கூறப்படுகின்றது. தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் நாகரிக கயில் கால் வைத்தபோது குலம் என்ற அமைப்பு வாழ்க்கையில் உருவாகியுள்ளது. மிருகங்களின் வாழ்க்கையில் தாய்,தந்தை, மகன், மகள் என்ற பாகுபாடு கிடையாது. இவற்றின் இனவிருத்தி என்பது யாருடன் வேண்டுமானாலும் நடக்கும். இம்முறையைக் கண்ட மனிதன் சித்திக்க முற்பட்ட காலத்தில் மிருகங்களைப் போன்று இருக்கக்கூடாது என்று எண்ணினான். ஒரு குடி என்பது இரத்த உறவு கொண்டது. இக்குடியின் அல்லது குலத்தின் உள்ளே மணம் முடிப்பது மிருகங்களின் செயலைப் போன்றது. எனவே மணம் என்பது மற்ற குடி அல்லது குலங்களுடன் நடைபெற வேண்டும் என்று எண்ணினர். இதனால் ஒரு குடியை மற்றொரு குடியிலிருந்து பிரித்துக் காட்ட முற்பட்டனர். இதனால் ஒவ்வொரு குடிக்கும் ஒரு குலக்குறியை வைத்தார்கள். ஒரு குடியினுள்ளே இரண்டு அல்லது மூன்று குடிகள் உருவாகும்போது இதை சகோதரக் குலம் என்று வகைப்படுத்தினர். ஒரு குடியும், தொடர்புடைய சகோதர குடியும் ஒரு குலத்தின், வழிவந்தவர்கள் என்றும் அக்குலத்திற்கு அவர்களுடைய வாழ்க்கையில் காணப்படும் பொருட்களை குலக்குறியாகவும் அல்லது குலச்சின்னங்களாகவும் வைத்தார்கள்.
ஒரே குலத்தின் உட்பிரிவில் பெண் எடுப்பது சகோதரனை அல்லது சகோதரியை மணம் முடிப்பது போன்றது என்ற கருதினர். இம்முறையால் பிறக்கும் குழந்தைகள் உடல் ஊனமுற்றவர்களாக இருந்தனர். எனவே ஒரு குடியில் பிறந்தவர்கள் பிற குடிகளில் மணம் முடிக்க வேண்டும் என்று எண்ணினர். இதற்கு இந்த குலமுறை பெரிதும் உதவியாக இருந்தது. இதனால் பழங்குடிகளிடையில் சகோதர குலம் என்றும் மாமன், மச்சான் குலம் என்றும் பிரிக்க ஏதுவாக இருந்தது. இந்த குலமுறை அமைப்பு நாகரிக வாழ்க்கையில் நுழையும்போது தங்களுடைய அடையாளங்களாக வைத்துக் கொண்டனர்.
இதைப்போன்று ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு குலதெய்வமும் வழக்கிற்கு வந்தது. இந்த அமைப்பு முறை பெரும்பாலும் மறையத் தொடங்கிவிட்டது. ஆனால் திருமணம் மற்றும் இறப்பு சடங்கின்போது மட்டும் இன்று எல்லா சமுதாயத்திலும் இம்முறை கடைப்பிடிக்கப்படுகின்றது. சாவுச் சடங்கின்போது சகோதர குலத்தைத் தவிர மற்றவர்கள் சடங்கு செய்ய அனுமதிப்பதில்லை. திருமணங்களின்போது எந்த குலம் என்று கேட்காமல் பெண் கொடுப்பதில்லை. குறுமன்ஸ் பழங்குடி மக்களிடம் இது முக்கியமான சடங்காகக் கருதுகின்றது. பெண்ணை கொடுக்கும்போதும் பெண்ணை எடுக்கும்போதும் மாப்பிள்ளை எந்த குலம் என்று தெரியாமல் கொடுப்பதில்லை, எடுப்பதில்லை.மாமன் உறவு முறை உள்ள குலமாக இருந்தால் மட்டும் திருமணம் நடைபெறும். மணமகனின் குலம் எத்தகையது என்று தெரியவில்லை என்றால் பெண் கொடுப்பதில்லை. இதனால் இவர்கள் கர்நாடகத்- திலிருந்து குடிபெயர்ந்தவர்களாக இருந்தாலும் கூட கர்நாடகாவில் பெண் கொடுப்பதில்லை, பெண் எடுப்பதில்லை. அங்கு உறவு முறை தெரியாததால் வெளியிலுள்ள மற்ற குலங்களுடன்கூட தொடர்பு கொள்வதில்லை. இதனால் இவர்கள் மற்ற பண்பாடுகளுடன் இணைந்து போகாமல் ஒதுக்கப்பட்ட மக்களாகவே வாழ்ந்துள்ளனர். குல முறையை அடிப்படையாகக் கொண்டதால், இவர்களுடைய வழிபாட்டு முறை, சமுதாய அமைப்பு, வாழ்க்கைமுறை ஆகியன பழங்குடிகளின் வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகின்றனர்.
குலங்கள் என்பது மரங்கள், உணவுப்பொருட்கள், செடிகள் போன்று பலவகையான பொருட்களுடன் தொடர்புடையது. உதாரணமாக ஆனைகுலம் என்பது யானை குலம் என்று பொருள். இக்குலத்தைச் சார்ந்தவர்கள் யானை தன்னுடைய மூதாதையர்களின் வழித்தோன்றல் என்று எண்ணி யானையை புனிதமாகக் கருதுவார்கள். இதைப் போன்று ‘பில்லுபான குலம்’ என்றால் வில் அம்பு குலம் என்று பொருள். இவர்கள் வில் அம்பை கடவுளாக வழிபடுகின்றனர். இந்த குலக்குறி மூதாதையர் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது என்றும்இவர்களுடைய வழிவருபவர்கள் இதை பின்தொடர வேண்டும் என்றும் குலக்குறி மரபுகளின் கதைகள் கூறுகின்றன.
குலக்குறி அமைப்பு முறை குறுமன்ஸ் இன மக்களிடம் மட்டுமின்றிஉலகிலுள்ள பல பழங்குடி மக்களிடையிலும் உள்ளது. மற்ற இன மக்கள் இவர்களுடன் இணைவதால் இந்த முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது. பெரும்பாலும் எல்லா மக்களும் பழங்குடி மக்களாக இருந்து நாகரிக வாழ்க்கை முறைக்குப் படிப்படியாக வளர்ந்தவர்கள். இதனால் குல மரபு பல இனங்களில் மறந்துவிட்டனர். இருப்பினும் இதனுடைய மிச்சங்கள் சில இடங்களில் காணப்படுகின்றன.
ஒரு குலத்திற்கு ஒரு குலத்தலைவன் இருப்பார். குலத்தலைவர் அக்குலத்தில் நடைபெறும் எல்லா செயல்களிலும் முதன்மை வகிப்பார். திருமணம், விழாக்காலங்கள், சமுதாயத்தின் அமைப்பு முறை ஆகியவற்றில் இவர் சொல்லின்படி நடக்கும். இதைப்போன்று ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு குலத்தலைவன் இருப்பான். இவர்கள் பழங்குடி மக்களால் அதாவது குலத்தின் முதன்மையானவர்களால் உருவாக்கப்படுகின்றனர்.
தொல்லியல் நோக்கில் குறுமன்ஸ் பழங்குடி- முனைவர் தி. சுப்பிரமணியன்
விலை: 200/-
வெளியீடு: சிந்தன் புக்ஸ்
Buy this book online:
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers