அத்யாத்ம ராமாயணத்தில் இறக்கும் தறுவாயில் மாரீசனாகிய மாயமான் விடுத்த அபயக்குரலைக் கேட்ட சீதை இலக்குவனை நோக்கி, ‘இலக்கு வனே, இராமனின் அபயக் குரல் உனக்குக் கேட்கவில்லையா? உடனே அவனுடைய உதவிக்கு விரைந்து செல்’ என்று கூறினாள். அதைக் கேட்ட இலக்குவன், ‘அது இராமன் குரல் அல்ல; இறக்கும் நிலையில் கதறிய யாரோ ஒரு அரக்கன் குரல். இராமனை ஒருவராலும் வெல்ல முடியாது. வருந்தாதிரு’ என்று சீதைக்குப் பதில் அளித்தான்.
இதைக் கேட்டதும் பெருங்கோபமுற்ற சீதை அழுத வாறே இலக்குவனைப் பார்த்து, ‘தீய எண்ணம் உடைய வனே, இராமன் இறந்துபட வேண்டும் என்று நீ விரும்புகிறாய் என்று நினைக்கிறேன். இராமன் கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிற பரதனால் நீ எங்களுடன் அனுப்பப் பட்டாய். இராமன் இறந்ததும் என்னை அடைய நீ திட்ட மிட்டே வந்துள்ளாய். உன் விருப்பம் நிறைவேறாது. தன் மனைவியை அபகரிக்க நீ வந்துள்ளாய் என்பதை இராமன் அறியான். இராமனைத் தவிர வேறு எந்த ஆடவனையும், நீயானாலும் சரி, பரதனாயினும் சரி, நான் தொடவும் மாட்டேன். இப்போதே நான் இறந்து படுவேன் என்று கூறித் தன் கைகளால் புடைத்துக் கொண்டு அலறி அழுதாள்.
சீதையின் கொடுஞ்சொற்களைக் கேட்ட இலக்குவன் தன் கைகளால் காதுகள் இரண்டையும் பொத்திக் கொண்டு துயரம் மேலிட அவளைப் பார்த்துக் கூறலானான்: ‘ஓ, ஆங்காரியே, இவ்வாறு பேசாதே. உன்னுடைய அநாகரிகமான சொற்கள் உன்னையே பாதிக்கும். உன்னுடைய அழிவுகாலம் நெருங்கி விட்டது.” இவ்வாறு கூறிய பின்னர், ‘வனதேவதைகள் இவளைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறிவிட்டு விருப்பமில்லாமல், மிக்க மனவேதனையோடு, இராமனைத் தேடி இலக்குவன் புறப்பட்டான் (III. 7 : 26-37).
நூல்: இராம காதையும் இராமாயணங்களும்
இராமகாதையும் இராமாயணங்களும் என்னும் இந்நூல் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு நாடுகளிலும் வழங்கிவரும் இராமாயண இலக்கியங்களின் மூல பாடங்களை ஒப்பாய்வு செய்கின்றது. ஒப்பாய்வு என்பது கற்பனையிலோ, கனவிலோ நிகழ்வதன்று.
நம்பகத்தன்மை மிக்க அடிப்படை ஆவணங்களே இதற்குச் சான்றாதாரங்களாகப் பயன்படுகின்றன. பேராசிரியர் மணவாளன் அவர்கள் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம், இந்தி, ஓரியா, வங்காளி, அசாமி என்னும் இந்திய மொழிகளிலும், ஜாவா, பாரசீகம், ஜப்பான், மலாய், பர்மா, தாய்லாந்து, லாவோஸ், பிலிப்பைன்ஸ் போன்ற பிற நாட்டு மொழிகளிலும் பல்வேறு காலகட்டங்களில் எழுந்த இராமாயணங்களை ஒப்பாய்வு செய்து, அவற்றின் அணுகுமுறைகள், கட்டமைப்பு, பாத்திரப்படைப்பு போன்ற காப்பியக் கூறுகளில் அவை தம்முள் எவ்வாறு ஒன்றுபட்டும் வேறுபட்டும் நிற்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறார். ஒரு பேரிதிகாசத்தைப் பாந்து, விரிந்து ஆய்வு செய்வது இதுவே தமிழ் மொழியில் முதல் முயற்சியாகும்.
Buy: https://heritager.in/product/rama-kaathaiyum-raamayanangalum/