இறையும் பறையும் என்ற இந்த நூலின் தலைப்பு சிலருக்கு முரணாகத் தோன்றும். ஏனெனில் இறை புனிதத்துவத்தை உணர்த்துவது. ‘பறை’ தற்கால நிலைப்படி அது தீண்டாமையை உணர்த்துவது என அடையாளமாக்கப்பட்டுவிட்டது. இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருப்பதாக உணரப்படுகின்றது. ஆனால் இரண்டுக்கும் (இறை-பறை) உள்ள இணைபிரியா தொடர்புகளை ஆன்மிகப் பெரியோர்களான ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் வழங்கப்பட்ட இலக்கியப் படைப்புகளைக் கொண்டு விளக்க எடுத்துக் கொண்ட ஒரு சிறு முயற்சியே இந்நூல்.
பறைமகன் வேடமணிந்த சிவபெருமான்
திருவாரூர் கோயில் திருவிழாவில் பார்ப்பனரையும், பறையரையும் தொடர்புபடுத்தும் ஒரு வழக்கம் அண்மைக் காலம்வரை நடைமுறையில் இருந்து வந்துள்ளதை ஆய்வறிஞர் தொ.பரமசிவன் தம் நூலில் (பண்பாட்டு அசைவுகள், ப. 66) குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
திருவாரூர் கோயில் திருவிழாவின்போது பறையர் ஒருவர் யானைமீது அமர்ந்து கொடிபிடித்துச் செல்லும் வழக்கம் அண்மைக் காலம்வரை நடைமுறையில் இருந்திருக்கிறது.
“ஒருநாள் திருவாரூர்க் கோயிலுக்குள் பார்ப்பனர்கள் யாகம் செய்து கொண்டிருந்தனர். அந்த வேள்வியின் பயனாகச் சிவபெருமான் ஒரு பறைமகன் வேடத்தில் செத்த கன்றுகுட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு வேள்விக் கூடத்திற்குள் வந்துவிட்டார். வந்தவர் சிவபெருமான் என்பதை உணராத பார்ப்பனர், ‘பறையன் உள்ளே வந்துவிட்டான். யாகம் தீட்டுப்பட்டுவிட்டது’ என்று கத்திக்கொண்டே வெளியே ஓடிவிட்டனர். சினங்கொண்ட சிவபெருமான், ‘நீங்களும் பறையர் ஆகுங்கள்’ என்று சாபம் கொடுத்துவிட்டார். சாபத்திலிருந்து விமோசனம் தருமாறு பார்ப்பனர்கள் கெஞ்சினர். மனம் இரங்கிய சிவபெருமான் நிரந்தரமாகப் பறையராவதற்குப் பதில், ‘நாள்தோறும் நண்பகல் முதல் ஒரு நாழிகை நேரம் மட்டும் பறையனாய் இருப்பீர்களாக’ என்று சாப விமோசனம் தந்தார். அதன்படியே திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்கள் நண்பகலில் (மத்தியானம்) ஒரு நாழிகை நேரம் பறையர்களாகிவிடுகிறார்கள் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. இதனால் திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்களுக்கு ‘மத்தியானப் பறையர்கள்’ என்ற பெயர் ஏற்பட்டது.
பறையரானவர் மீண்டும் பார்ப்பனராக வேண்டுமென்றால், தீட்டுக் கழிக்கவேண்டும். எனவே திருவாரூர்க் கோயில் பார்ப்பனர்கள் மத்தியானம் ஒருமுறை குளிக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இந்த வழக்கம் அண்மைக் காலம்வரை நீடித்திருந்தது.”67
இப்படியான சில நடைமுறைகள் இறைவனோடு தொடர்பு உடையதாகக் குறிப்பிடப்படுகிறது. எப்படியிருப்பினும் பார்ப்பனர்களுக்குப் பறையர் இனமக்கள் தீட்டுக்குரியவர்களாக, தீண்டாமைக்குரியவர்களாகக் காணும் வழக்கம் இருந்து வந்தது. அத்துடன் நில்லாமல், பார்ப்பனரல்லாத மக்களிடமும் மிகத் தீவிரமாக இத்தீண்டாமை நோய் பற்றிக்கொண்டதுதான் இன்றுவரை தொடரும் ஒரு சமூக அவலம்.
இறையும் பறையும் – முனைவர் மு. வளர்மதி