மாரநாட்டுக் கருப்பு :
கோவில் அமைந்துள்ள இடம்:
திருப்புவனத்தில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவிலும் திருப்பாச்சேத்தியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஊர் மாரநாடு. கேரளத்தில் இருந்து வந்த கருப்பர் நிலையாகத் தங்கிய இடம் இந்த மாரநாடு ஆகும். மாரநாட்டுக் கருப்பர் என்றாலே சிவகங்கை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.கருப்பர் பாடலில் ”மாரநாட்டுக் கருப்பா” என்ற வரி அடிக்கடி ஒலிக்கப்படுவதை அனைவரும் கேட்கமுடியும்.
வரலாறு
கேரள தேசம் :
கேரள மாநிலத்தில் பொண்டுக மலையாள நாடு என்ற நாடு இருந்தது. அதுதான் கருப்பர் பிறந்த இடம். கருப்பருக்கு அய்யர் ஒருவர் பூசைகள் செய்து வந்தார். அவருக்கு வயது அறுபது இருக்கும். ஆனால் குழந்தையே கிடையாது. கருப்பருக்குத் தன்னுடைய சிறு வயதில் இருந்தே பயபக்தியோடு காலையும் மாலையும் பூசைகள் செய்து வந்தார். ஆனாலும் கருப்பர் அவருக்குக் குழந்தை வரத்தைக் கொடுக்கவேயில்லை. ஒருநாள் இரவு அய்யரின் கனவில் கருப்பர் தோன்றி உனக்குக் குழந்தை வரம் தருகிறேன் என்றார். அய்யரோ, எனக்கோ அறுபது வயதாகி முட்டி செத்துவிட்டது. இப்பொழுது குழந்தை வரம் கொடுத்தால் ஊர் என்னை என்ன சொல்லும்? இருந்தாலும் பரவாயில்லை. கடைசிக் காலத்தில் பேர் சொல்லக் குழந்தை வேண்டுமே. உன் விருப்பப்படியேகுழந்தை வரம் கொடு என்றார். கருப்பர் வரத்தால் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நன்முறையில் வளர்க்கப்பட்டு நடக்கின்ற வயது வந்தது.
ஒரு நாள் மாலை நேரத்தில் பூசை செய்வதற்காகக் கோவிலுக்குச் செல்லும்பொழுது தத்தித்தத்தி நடக்கின்ற தன் மகனையும் அழைத்துச் சென்றார். தன் மகனைக் கருவறைக்குள் உட்கார வைத்துவிட்டுப் பூசைகள் செய்து கொண்டிருந்தார். பூசைகள் செய்து கொண்டிருக்கும்போதே மகன் உறங்கிவிட்டான். அதனால் உறங்கிய மகனைக் கருவறைக்குள் ஓரமாக துண்டை விரித்துப் படுக்க வைத்தார்.கருப்பருக்குப் பூசைகள் முடித்துவிட்டு, பக்தர்களுக்குத் தீபாராதனை காட்டி விபூதி கொடுத்தார். கோவிலைச் சாத்தும் நேரம் வந்ததும் தன் மகன் உள்ளே உறங்கிக் கொண்டிருப்பதை மறந்துவிட்டு எப்பொழுதும் போல வீட்டிற்குச் சென்றுவிட்டார். வீட்டிற்குச் சென்றதும் மனைவி குழந்தை எங்கே? எனக் கேட்க, அப்பொழுதுதான் அவருக்குக் குழந்தையைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றதே நினைவு வந்தது.
உடனே கணவனும் மனைவியும் இணைந்து கோவிலுக்குச் சென்றனர். கோவிலைத் திறந்து பார்த்தனர்; திறக்கமுடியவில்லை. சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தனர். கருப்பர் குழந்தையைத் தொட்டிலில் போட்டுத் தாலாட்டிக் கொண்டிருந்தார். குழந்தையைத் தந்துவிடு என அய்யர் கருப்பரிடம் கேட்டார். கருப்பரோ காலையில் தருகிறேன். இரவு மட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். கணவனும் மனைவியும் பிடிவாதமாக எங்களுக்கு இப்பொழுதே குழந்தை வேண்டுமெனக் கருப்பரிடம் சண்டை போட்டனர். கோபம் அடைந்த கருப்பர் குழந்தையைக் கை தனியாக, கால் தனியாக பிய்த்து சாளரத்தின் வழியாகத் தூக்கிப் போட்டார். கணவனும் மனைவியும் அதிர்ந்து போயினர். கருப்பா நீ கொடுத்தக் குழந்தையை நீயே பிய்த்துப் போடுவதா என்று அழுது
புலம்பினர்.
கல்லாறு மலட்டாறு :
கருப்பரின்மேல் மிகுந்த கோபம் கொண்ட அய்யர் கேரள நம்பூதிரிகளை அழைத்து வந்தார். அவர்கள் மாந்திரீகம் செய்து கருப்பரை ஒரு சிறு மரப்பெட்டிக்குள் அடைத்து அய்யரின் கையில் கொடுத்தனர். அவரோ எப்பொழுதும் தண்ணீரே ஓடாத கல்லாறு, மலட்டாறு சந்திக்கின்ற இடத்தில் குழிதோண்டிப் பெட்டியைப் புதைத்துவிட்டு, உன்னால் இனிமேல் வெளியவே வரமுடியாது. அப்படியே நீ வெளியே வந்தாலும் உனக்குப் பள்ளனும் பறையனும்தான் பூசாரியாக இருப்பான். எந்தவொரு அய்யரும் பூசை செய்ய மாட்டான் எனச் சாபம் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்.
மண்ணுக்குள் புதைந்திருந்த கருப்பர் வருண பகவானை வேண்டினார். வருண பகவான் வெள்ளம் போகும் அளவிற்கு மழையைக் கொட்டினார். மழைத் தண்ணீரில் மண் கரைந்து பெட்டி மேலே வந்தது. கல்லாறு மலட்டாறில் இருந்து பாய்ந்த தண்ணீர் வைகை ஆற்றில் போய்க் கலந்தது.
பெட்டி மதுரை அருகில் உள்ள சோழவந்தானுக்கு வந்தது. அங்கு வைகையாற்றின் கரையில் வண்ணாத்திட் பெண்ணொருத்தி துணி துவைத்துக் கொண்டிருந்தாள். பெட்டி அவள் அருகில் செல்வதும், தள்ளிச் செல்வதுமாக இருந்தது. ஏதோ பணப்பெட்டி என நினைத்த வண்ணாத்திப் பெண் பெட்டியைக் கையில் எடுத்து அடுப்பில் வைக்கப்பட்டிருந்த வெள்ளாவிப் பானைகளுக்கு அருகில் வைத்துவிட்டுத் துணிகளை மீண்டும் துவைக்க ஆரம்பித்தாள். அந்த இடம் பிடிக்காத கருப்பர் கோபம் அடைந்ததால் வெள்ளாவிப் பானைகள் அனைத்தும் வெடித்துச் சிதறின. பயந்து போன வண்ணாத்தி பெட்டியை எடுத்து மீண்டும் ஆற்றிலே விட்டாள். பெட்டி ஆற்றிலே மிதந்து கோச்சடைக்குச் சென்றது. அங்கும் இருக்கப் பிடிக்காமல் மீனாட்சி அம்மன் ஆலயம் சென்றது. அங்கும் கருப்பருக்குத் தகுந்த இடம் இல்லாததால் பெட்டியானது அழகர் கோவிலுக்குக் கிளம்பியது.
பதினெட்டாம்படி கருப்பர் :
அழகர் கோவிலுக்குச் செல்லும் வழியில் கோனார் ஒருவர் மாட்டுப் பண்ணை வைத்திருந்தார். அவரிடம் கருப்பர் சிறு வயதுப் பையனாக மாறிச் சென்று வேலை கேட்டார். கோனாரோ வயதுக்கு ஏற்ற வேலை கொடுக்காமல் மாடுகளை மேய்க்கும் வேலை கொடுத்தார். கருப்பரோ நாளுக்கு ஒரு மாடு என்ற கணக்கில் மாடுகளைச் சாப்பிட ஆரம்பித்தார். கடைசியில் ஒரே ஒரு மாடு மட்டுமே நின்றது. பண்ணைக்கு வந்த கோனார் ஒரு மாடு மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். கருப்பரைப் பார்த்து, “அட சனியனே என்னைக்கு உன்ன வேலைக்கு வச்சேனோ அன்னைக்கே எனக்கு எல்லாம் விளங்காம போச்சு’ எனத் திட்டினார். கோபம் அடைந்த கருப்பர் தன் முழு உருவத்தையும் காட்டினார். கோனார் பயந்துபோய்க் கருப்பரிடம் மன்னிப்புக் கேட்டுத் தப்பித்து ஓடினார். கருப்பர் அழகர் மலையை அடைந்து பெருமாளைத் தரிசித்துவிட்டுத் தன் தங்கை ராக்காச்சியைப் பார்ப்பதற்கு மலைக்கு மேலே செல்வதாகக் கூறினார். பெருமாள் கருப்பரைப் பார்த்து தங்கை ராக்காச்சியைப் பார்ப்பதற்குச் செல்ல வெண்டும் என்றால் என்னைச் சுற்றி இருக்கும் பதினெட்டு அசுர சக்திகளை அழித்துவிட்டுத் தான் நீ மேலே செல்ல வேண்டும் என்றார்.
கருப்பர் பெருமாளிடம் நான் அசுர சக்திகளை அழித்தால் எனக்கு என்ன வரம் கொடுப்பீர்கள் எனக் கேட்டார். அதற்குப் பெருமாள், நீ வேண்டும் வரத்தைத் தருகிறேன் என்றார். கருப்பர்சொன்னார், நான் பதினெட்டு அசுரர்களையும் அழித்து அவர்களைப் பதினெட்டுப் படிகளாக மாற்றிக் கொண்டு உங்கள் கோவிலின் முன்பு அமர்வேன். நான் அமர்ந்த இடத்தில் எனக்குஉங்கள் கோவிலும் கோபுரமும் மறையும் அளவிற்குக் கோபுரம் கட்ட வேண்டும். உங்களை வணங்க வரும் பக்தர்கள் உங்களுக்கு முன் என்னையே வணங்க வேண்டும் என வரம் கேட்டார். கருப்பரின் வரத்தைப் பெருமாள் வழங்கினார்.கருப்பர் பதினெட்டு அசுர சக்திகளையும் அழித்துத் தனக்குப் படிகளாக மாற்றிக் கொண்டார். கருப்பர் கேட்டவரத்தின்படியே, உயரக் கட்டப்பட்ட கோபுரம் இன்றும் அழகர் கோவிலில் இருக்கிறது.
மாரநாட்டுக்குக் கருப்பர் வருகை :
அசுர சக்திகளை அழித்த பின்பு கருப்பர், பெருமாளிடம் விடைபெற்றுக் கொண்டு தங்கை ராக்காச்சி அம்மனை பார்க்கச் சென்றார். தங்கையைப் பார்த்து விட்டு மீண்டும் வைகை ஆற்றில் மிதந்து சென்றார். மானாமதுரையைத் தாண்டி திருப்புவனம் செல்லும்பொழுது மடப்புரத்துக் காளிக்கு இடம் கொடுக்க முடியாது என அடைக்கலம் காத்த அய்யனார் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார். அங்குச் சென்ற கருப்பர் அய்யனாரை மிரட்டி காளிக்கு அய்யனாரின் குதிரைக் கால்களுக்கு இடையே இடம் வாங்கிக் கொடுத்தார். பின்பு வைகை ஆற்றில் மிதந்து நேரடியாக பரமக்குடி செல்லாமல் வலது புறம் ஒதுங்கி மாராநாட்டுக் கம்மாயில் மிதந்து சென்றார்.
மாராநாட்டுக்கு அருகில் கச்சநத்தம் என்ற ஊர் உள்ளது. அந்த ஊரின் பண்ணையார் வீட்டில் கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லாத பெண் ஒருவர் வீட்டு வேலையும் காட்டு வேலையும் பார்த்து வந்தார். அந்தப் பெண் ஊர்த் திருவிழாவின்பொழுது மக்கள் சாமி ஆடுவதைப் பார்த்துத் தானும் சில நேரங்களில் தனக்கு சாமி வந்ததுபோல் ஆடிக் கொண்டிருப்பாள்.
அந்தப் பெண் மாரநாட்டுக் கண்மாய்க்கு ஒருமுறை தண்ணீர் எடுக்கத் தனியாகச் சென்றாள். அந்த நேரம் பார்த்துக் கருப்பர் கண்மாயில் மிதந்து வந்தார். தண்ணீர் தூக்கிவிட ஆளில்லாத அந்தப் பெண் யாராவது வருகிறார்களா எனச் சுற்றி முற்றிப் பார்த்தாள். கருப்பர் அந்தப் பெண்ணிடம் வந்து நான் உனக்குத் தண்ணீர் தூக்கி விடுகிறேன். ஆனால் பதிலுக்கு நீ எனக்கு என்ன செய்வாய் எனக் கேட்டார். அந்தப் பெண் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டாள். நான் குடத்திற்குள் குதித்து உட்கார்ந்து கொள்கிறேன். குடத்துடன் என்னையும் சுமந்து செல்வாயா என்றார். அந்தப் பெண் சரி என்றதும்,குடத்தைத் தூக்கி விட்டுவிட்டுக் குதித்துக் குடத்திற்குள் புகுந்து கொண்டார்.
அந்தப் பெண் குடத்திற்குள் தண்ணீரையும் கருப்பரையும் சுமந்து கொண்டு கச்சநந்தம் சென்றார். ஊருக்குள் செல்ல விரும்பாத கருப்பர் ஊரின் எல்லையிலேயே குடத்தை விட்டு வெளியே குதித்துவிட்டார். கம்மாயில் நடந்ததை மறந்த பெண் கருப்பரைத் தேடாமல் அவளின் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். மூன்று வருடம் அந்த ஊரில் இருந்து பார்த்தும் கருப்பருக்கு அந்த ஊரும் இடமும் பிடிக்கவில்லை.
குடத்தில் கருப்பரைத் தூக்கி வந்த அந்தப் பெண் எருமை மாடுகளை மேய்ப்பதற்காக மாரநாடுப் பக்கம் மாடுகளைக் கிளப்பினார். அந்தப் பெண் செல்கையில் கருப்பர் அந்தப் பெண்ணின் உடலில் குடியேறி விட்டார். மாரநாட்டு எல்லைக்குச் செல்கையில் எப்பொழுதும் கிறுக்குபோல சாமி ஆடுபவள், கருப்பர் தன் உடலில் குடியேறியதால் உண்மையிலே சாமி ஆடினாள். மாடுகளை மறந்துவிட்டாள். மாடுகளெல்லாம் மாரநாட்டுப் பருத்தி வயலுக்குள் மேய ஆரம்பித்துவிட்டன.
அந்நேரம் பார்த்து மாரநாடுப் பக்கம் வந்த பண்ணையார், மாடுகள் பருத்தி வயலில் மேய்வதைப் பார்த்துக் கோபம் அடைந்து “எங்க அந்தக் கிறுக்கச்சி” எனத் தேடினார். அந்தப் பெண் சாமி ஆடுவதைப் பார்த்து எப்பொழுதும்போலக் கிறுக்காக ஆடுகிறாள் என நினைத்துத் தான் வந்த மாட்டு வண்டியின் தார்க் குச்சியை எடுத்துக் கொண்டு “அடியே கிறுக்கச்சி என்னடி உனக்கு சாமி வருது” என அடிக்க ஆரம்பித்தார். கோபம் அடைந்த கருப்பர் “என்ன யாருனு நெனச்சடா, நான் கருப்பன்டா, என்னையா நீ அடிச்ச” என ஆங்காரமாகக் கூறினார். பயந்த பண்ணையார் கருப்பரிடம் மன்னிப்புக் கேட்டார். கோபம் தணிந்த கருப்பர் மாரநாட்டு எல்லையிலே நிரந்தரமாக அமர்ந்தார். கருப்பருக்கு அருகிலே தன்னை மாரநாட்டு எல்லைக்கு அழைத்து வந்த மனவளர்ச்சி
குன்றிய பெண்ணையும் தெய்வமாக அமர்த்திக் கொண்டார்.அந்தப் பெண் பத்திரகாளியாக வணங்கப்படுகிறாள். இன்று கோவில் பெரியதாகக் கட்டப்பட்டு உள்ளது.
கருப்பர் சென்ற இடங்களான சோழவந்தான், கோச்சடை, அழகர்கோவில் ஆகிய இடங்களில் அவர் தங்கிச் சென்ற இடங்கள் என்பதற்குச் சாட்சியாகக் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அழகர்கோவிலில் இருக்கும் பதினெட்டாம்படி கருப்பரும் மாரநாட்டில் இருக்கும் மாரநாட்டுக் கருப்பருமே மிகவும் பிரசித்தி பெற்றவர்கள்.
மாரநாட்டுச் சீமை :
மாரநாட்டைச் சுற்றியுள்ள பன்னிரெண்டு ஊர்கள் சேர்த்து மொத்தமாக மாரநாட்டுச் சீமை எனச் சிவகங்கை மன்னர் காலத்தில் அழைக்கப்பட்டது. சிவகங்கை மன்னர் மாரநாட்டுக் கருப்பர் கோவிலுக்கு என்று பதினாறு ஏக்கர் நிலத்தையும் ஒரு வெண்கலத் தவிலையும் பரிசாகக் கொடுத்தார். அந்தத் தவில் இன்று வரை பாதுகாக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் பெரிய மழை பொழிந்து வெள்ளம் வந்து மாரநாட்டுக் கண்மாய் உடைந்தது என்றால் இந்த வெண்கலத் தவில் அடிக்கப்படுமாம். மாரநாட்டில் அடிக்கப்படுகின்ற தவில் சத்தம் சிவகங்கையில் இருக்கின்ற ராஜாவுக்குக் கேட்குமாம். சத்தம் கேட்டதும் ராஜா மாரநாட்டுக் கண்மாய் உடைந்துவிட்டதை அறிந்து உதவி செய்ய பணியாட்களை உடனே அனுப்பி வைப்பாராம். அதே போல் திருவிழாக் காலங்களிலும் தவில் அடிக்கப்படும்.
லாலா கோடாங்கி :
மாரநாட்டுக் கோடாங்கிகள் என்றால் மிகவும் புகழ் பெற்றவர்கள். இதுவரை பதினாறு கோடாங்கிகள் ஒருவர்பின் ஒருவராகப் பரம்பரையாக வந்துள்ளனர். இந்தக் கோடாங்கிகளில் மிகவும் புகழ் பெற்றவர் லாலா கோடாங்கி ஆவார். அவரே முதல் கோடாங்கி ஆவார்.
சிவகங்கை மன்னர் தன்னுடைய ஆஸ்தியைக் காட்ட கையில் வைர மோதிரத்தையும் ஆசையாய் வயிறுகுருவியையும் வளர்த்து வந்தார். ஒரு நாள் காலை வயிறு குருவி எங்கேயோ பறந்துவிட்டது. அதே நாள் மன்னர் குளிக்கையில் வைர மோதிரமும் விரலில் இருந்து உருவி தூப்புக் குழியில் விழுந்துவிட்டது. ஆஸ்தியும் ஆசையும் ஒரே நேரத்தில் காணாமல் போகவும் மன்னர் வேலையாட்களின் மேல் சந்தேகப்பட்டு அவர்களை அடித்துத் துன்புறுத்த ஆணையிட்டார். எவ்வளவு அடித்தும் வேலையாட்களிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
மன்னர் கோடாங்கிகளை அழைத்து குறி பார்க்கச் சொன்னார்.வரிசையாக ஒன்பது கோடாங்கிகள் வந்தும் யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அனைவரையும் பிடித்துச் சிறையில் அடைக்கச் சொன்னார். கடைசியாக மாரநாட்டு லாலா கோடாங்கியைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னர் அவரை அழைத்து வரப் பணியாட்களை அனுப்பினார். கோடாங்கி நான் வரமுடியாது; நான் வரவேண்டும் என்றால் கூடவே என் கருப்பனும் வரவேண்டும். என் கருப்பன் வரவேண்டும் என்றால் அவனை அழைத்துச் செல்லமச்சமில்லாத குதிரை (ஒரு துளிக்கூட கருப்பு இல்லாத சுத்த வெள்ளைக் குதிரை) வரவேண்டும் என்றார்.
மச்சமில்லாத குதிரை மன்னரிடம் மட்டுமே இருந்தது. அதனால் மன்னர் தன் குதிரையை அனுப்பி வைத்தார். கோடாங்கி கருப்பரைக் குதிரையில் ஏற்றி விட்டுவிட்டுக் கையில் கலயத்தையும் கக்கத்தில் வைக்கோலையும் வைத்துக்கொண்டு நடந்து சென்றார். கருப்பரை ஏற்றிச் சென்ற குதிரை பாரம் தாங்கமுடியாமல் அரண்மனை செல்வதற்குள் நுரைதள்ளி இறந்துவிட்டது. குதிரை இறந்ததும் மன்னருக்குக் கோடாங்கியின்மேல் கோபம் அதிகமாகி இவர் பொய்க் கோடாங்கி; இவரையும் பிடித்துச் சிறையில் போட வேண்டும் என முடிவு எடுத்தார்.
கோடாங்கி மன்னரின் முன்னிலையில் வைக்கோலைப்
பரப்பி அமர்ந்தார். மன்னர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.கோபம் அடைந்த கோடாங்கி “என்னடா கருப்பா உன் முன்னாடிமரியாதையில்லாம்” என்றார். நாற்காலின் நான்கு கால்களும் உடைந்து மன்னர் கீழே விழுந்தார். அதிர்ந்து போன மன்னர் பயந்து தரையிலே அமர்ந்தார். கோடாங்கி நறுக்கு புகையிலையைக் கையில் எடுத்தார். அதன்மேலே வெற்றிலையைச் சுற்றி வாயில் வைத்து நெருப்பைப் பற்ற வைத்து ஒரு இழுப்புப் புகையை விட்டார். மன்னரைப் பார்த்து உன் வைர மோதிரமும் வயிறு குருவியும் காணோமா? என்றார். மன்னர், ஆமாம்! என்று தலையாட்டினார். தூப்புக் குழியில் போய் உன் வைர மோதிரத்தைத் தேடச் சொல். வடக்குத் திசையில் மூன்று மைல் தொலைவில் சென்று வயிறு குருவியை உன் சேவகனைப் பார்க்கச் சொல் என்றார். கோடாங்கி சொன்னபடியே சென்று பார்த்தனர்.
தூப்புக் குழியில் வைர மோதிரமும் வடக்குத் திசையில் வயிறு குருவியும் கிடைத்தன. மகிழ்ச்சியடைந்த மன்னர் கோடாங்கியிடம், உங்களுக்கு நாடு வேண்டுமா? நகரம் வேண்டுமா? என்றார். எனக்கு எதுவும் வேண்டாம், நீ சிறை பிடித்து வைத்திருக்கும் கோடாங்கிகளையும் அப்பாவி மக்களையும் வெளியே விடு என்றார். மன்னர் அவர்களை விடுவித்துவிட்டு வேறு என்ன வேண்டும் என்றார். கருப்பனுக்கு எப்போது திருவிழா நடந்தாலும் முதல் மாலை மன்னர் மாலையாக இருக்க வேண்டுமெனக் கூறிவிட்டு கருப்பரோடு கிளம்பிவிட்டார். லாலா கோடாங்கியை இன்றும் மக்கள் “குடி விலக்கி கோடாங்கி சொன்னவர்” என்று அவரின் பெருமையைப் பாட்டாகப் பாடுவர்.
திருவிழா :
ஒவ்வொரு வருடமும் மாசிக் களரி முடிந்த வெள்ளிக் கிழமை அன்று காப்புக் கட்டப்படும். அதனையடுத்து தொடர்ந்து வருகின்ற பெளர்ணமியை ஒட்டிய வெள்ளியன்று திருவிழா நடக்கும்.
திருவிழாவின்பொழுது மொத்தம் இருபத்தியொரு பேர்
கருப்பர் வேடம் போடுவார்கள். இதில் கோடாங்கி மாரநாட்டுக்கருப்பராகவும் அவருடைய அம்மா அல்லது மனைவி பத்திரகாளியாகவும் வேடம் போடுவார்கள். மாரநாட்டுக் கருப்பர் கோவிலில் பத்திரகாளியைத் தவிர்த்து மொத்தம் இருபத்தியொரு ஆண் தெய்வங்கள் இருக்கின்றன. அதனாலேயே இருபத்தியொரு பேர் கருப்பர் வேடம் போடுகிறார்கள். திருவிழா அன்று மாலை ஐந்து மணிக்குப் பெரியக் கருப்பரும் பத்திரகாளியும் இணைந்து பொங்கல் வைப்பதற்குச் சிறு குழி தோண்டுவதற்கு அரிவாளால் ஒவ்வொரு தெய்வத்தின் முன்னும் கோடு போடுவார்கள். அதன் பின்பு ஊரிலுள்ள பெண்கள் பொங்கல் வைப்பார்கள்.
பொங்கல் வைத்து முடிந்ததும் இரவு பதினோரு மணிக்குக் கருப்பர் வேடம் போட்ட அனைவரும் கோவில் முன்பாக உள்ள பொட்டலில் சென்று சாமி ஆடுவார்கள். அவர்கள் சாமி ஆடும் பொழுது கருப்பர் மலையாள தேசத்தில் இருந்து மாரநாடு வந்தது வரை உள்ள வரலாற்றைப் பாட்டாகப் பாடிக் கதை சொல்வார்கள். கதை சொல்லும் போது பெரிய கருப்பர்
அரிவாளின் வெட்டும் பகுதியின்மேல் ஏறி நிற்பார். இவ்வாறு காலை ஐந்து மணி வரை சாமி ஆடுவார்கள்.
ஐந்து மணிக்குக் கிடாய்கள் வெட்டப்படும். முதல் ஐந்து கிடாய்களின் இரத்தத்தைப் பெரிய கருப்பர் வேடம் போட்ட கோடாங்கி வாய் வைத்துக் குடிப்பார். ஏறக்குறைய ஐந்நூறு கிடாய்களுக்கு மேல் வெட்டப்படும். அன்று மதியம் கிடாய்கள் சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.
திருவிழா நடந்து முடிந்த மூன்றாம் நாள் அன்று பொங்கல் வைப்பதற்காக வெட்டப்பட்ட குழிகளை மண்ணைத் தள்ளி மூடுவதை, ‘ அடுப்பு மூடுதல்’ விழாவாகக் கொண்டாடுவார்கள். அன்று ஒரு கிடாய் கருப்பருக்குப் பலி கொடுக்கப்படும். ஆண்டு தோறும் திருவிழா நடக்கின்றபொழுது மன்னர் குடும்பத்தில் இருந்து கருப்பருக்கான “மரியாதை மாலை” தவறாமல் வந்துவிடும்.
சிவகங்கை நாட்டுப்புறத் தெய்வங்கள் – இரா.சுசில்குமார்
விலை: 140/-
Buy this book online: https://www.heritager.in/product/sivkankai-naattuppurath-deyvankal/
WhatsApp to Order: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Website: www.heritager.in
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/