நடுகற்கள் பண்பாடு :
செங்கம் வட்டம், தா.வேளூரை சேர்ந்த நடுகல் ஒன்று பெண்ணின் மானத்தைக் காத்த வீரனைப்பற்றிக் கூறுகிறது. முருங்கைச்சேரியை சேர்ந்தவன் காளமன். இவன் தனது அண்ணன் மகளைக் கள்ளர்கள் கடத்திக் கொண்டு போவதை அறிந்தான். உடனே அவன் அந்தக் கள்ளர்களைப் பின் தொடர்ந்து சென்றான். அதன் பின் அந்த கள்ளர்களிடம் போரிட்டான்.
அந்த போரில் அவன் கள்ளர்களிடம் இருந்து அந்தப் பெண்ணை மீட்டான். இதனால் அந்தப் பெண்ணின் மானம் காத்தவன் அந்தக் காளமன். ஆனால் அந்த போரில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தான். இந்த சம்பவம் கம்பவர்ம பல்லவன் காலத்தில் நடந்தது. இந்த சம்பவம் நடந்த இடத்தில் நடப்பட்ட நடுகல்தான் மானம் காத்தான் நடுகல் என்றழைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டம் ஏலகிரி மலை, மங்கலம் என்னும் ஊரில் ஊர் காத்த நடுகல் ஒன்று உள்ளது. இந்தக் கல் இந்தப் பகுதியில் உள்ள வீரனைப்பற்றிக் கூறுகிறது. தாயலூரைச் சேர்ந்த மழப்பையன். இவன் வாழ்ந்த திருப்பத்தூரை எதிரிகள் பிடித்து விட வேண்டும் என்று கடும் போரிட்டனர். அப்போது அவர்களை விரட்டியடிக்க மழப்பையன் கடும் போரிட்டான். அந்தப் போரில் அவன் ஜெயித்து எதிரிகளை விரட்டினான். ஊர்மக்களையும் எதிரிகளிடமிருந்து மீட்க முடிந்தது. ஆனால் அந்தப் போரில் அவன் உயிரிழந்தான். இந்நிகழ்ச்சி கி.பி.8ம் நூற்றாண்டில் நுளம்ப பல்லவன் காலத்தில் நடந்ததாகும். இந்தக் கல் ஊர்காத்தான் கல் என்றழைக்கிறார்கள்.
கி.பி.9ம் நூற்றாண்டில் தகடூப்பகுதியை ஆண்டவன் மாலிவாணராயன். இவரை நுளம்பன் என்பவர் மோசம் செய்து விட்டான். அதோடு மட்டுமல்லாமல் அவரிடமிருந்து நாட்டைக் கைபற்றிக்கொண்டான். அப்போது நடந்த போரில் ராயன் இறந்து விட்டார். அந்த சமயம் அவரின் மனைவி கருவுற்றிருந்தார். இதற்கிடையில் ராயனின் தளபதி சங்கரகுட்டியார். இவர் தன் தலைவன் மீதுள்ள நன்றியுணர்வால் அவன் மனைவியைக் காப்பாற்றினார். அந்தபெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதன் பின் அவர் தன்னுடன் சிறுகுட்டியார் என்பவரையும் கூட்டிக்கொண்டு நுளம்பன் மேல் படையெடுத்துச் சென்றார். மிகப்பெரிய போர் நடந்தது அதில் நுளம்பன் தோற்றகடிக்கப்பட்டான். நாடு மீட்டெடுக்கப்பட்டது. ஆனாலும் கூட இப்போரில் சங்கர குட்டியாருடன் சென்ற சிறுகுட்டியாரும் மாண்டு விட்டனர். மடிந்த அந்த இரு வீரருக்கு நாட்டப்பட்ட கல் அறம் வளர்த்தான் நடுகல். எனப்படுகிறது. நாட்டை இழந்து மாண்ட தன் தலைவன் மேலுள்ள நன்றியுணர்வால் அவருடைய மனைவியைப் பாதுகாத்து, பிள்ளைப்பேறு வரை பேணிக்காத்தார் சங்கர குட்டியார். அது மட்டுமல்லாமல் வஞ்சித்து வாழ்ந்த நுளம்பனைத் தோற்கடித்து அறத்தை நிலைநாட்டினார். ஆகவே இந்த வீரனைப் பற்றிக்கூறும் இந்த நடுகல் அறம் காத்தான் நடுகல் என்றழைக்கப்படுகிறது.
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் முப்பத்து நான்காவது ஆட்சியாண்டில் (கி.பி.624) திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் எடுத்தனூரில் வெட்டப்பட்ட கல்வெட்டு பாண அரசருடைய மருமகன் போரில் வீரமரணம் அடைந்தான்.
அவனுடைய நாய் கோவிவன். அந்த போரில் அதுவும் முக்கிய பங்கு வகித்தது. அந்த நாய் இரு கள்ளர்களைக் கடித்துக் கொன்றது. அதோடு மட்டுமல்லாமல் தானும் இறந்து விடுகிறது. நன்றி மறவாத நாய்க்கு அந்த வீரனுடன் சேர்த்து ஒரு நடுகல் வைத்துள்ளார்கள். நன்றி மறவா நாய்க்கு இது ஒரு கல்வெட்டு. இந்த கல்வெட்டு நமது நாட்டை சேர்ந்த நன்றி மறவாத தமிழர்களின் சிறப்பு பண்பை விவரிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கத்திற்கு அருகிலுள்ள இந்தளுஞர் என்னும் ஊரில் கோழிக்காக நடுகல் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இதில் கோழிப் போரில் வெற்றிபெற்ற “கீழச்சேரிக் கோழி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரசலாபுரம என்னூரில் உள்ள கோழிக்கல், முகையூர் என்ற ஊரின் மேற்சேரி கோழி, கோழிப்போரில் வெற்றி பெற்றது. அதன் பின் அதன் மேல் உள்ள அதிக காயத்தினால் ஏற்பட்ட இரத்த போக்கால் அந்த கோழியும் இறந்து விட்டது.
அந்தக் கோழியை நினைவு கூறும் வண்ணமாக எடுக்கப்பட்ட நடுகல் கோழிகல் என்றழைக்கப்படுகிறது. மக்களுக்கு ஏற்பட்டஆபத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டு அந்த கால வீரர்கள் போரிடுவர். அவர்களைப் புலிக்குத்தி என்றழைப்பர். இதில் தம் உயிர் கொடுத்த வீர மறவர்களுக்குப் “புலிக்குத்திக்கல்” எடுக்கும் வழக்கம். தமிழ்நாட்டில் இருந்து வந்தது. கி.பி.7ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தைச் சேர்ந்தவீரன் ஒருவன் இறந்தற்கு புலிக்குத்திகல் வைக்கப்பட்டுள்ளது.
சேர மன்னனுக்கு உதவியாக சிங்கம்பட்டி ஜமீன் வாரிசு எட்டுவீட்டு பிள்ளைமாருக்கு எதிராக போரிட்டார். அப்போது ஜமீனின் மூத்த வாரிசு இறந்து விட்டார். இறந்தவருக்கு நல்லகுத்தி என்று பெயரிட்டு மேற்குதொடர்ச்சி மலையில் 1000 கணக்கான நிலங்களை சேரன், சிங்கம்பட்டி ஜமீனுக்கு அளித்தான் என்று வரலாறு கூறுகிறது. குதிரையோடு வந்து வடவல்லூரை அழித்த இந்தரையனை எதிர்த்துப் போராடினான் பூங்குடி வடுகன். அவன் இந்தரையனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அக் குதிரையைக் குத்திக் கொன்றான். அதோடு மட்டுமல்லாமல் அந்த போரில் தானும் மடிந்தான்.
இதுபற்றி, கி.பி.9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு குறிப்பிடுகின்றது. வலக்கையில் குறுவாளை ஓங்கிய நிலையில் காணப்படும் வீரனுக்கு முன்புறத்தில் அவன் குதிரையைக் குத்தப்பட்டதற்கு அடையாளமாகக் குதிரை உருவம் நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இதை குதிரைக் குத்திக்கல் என்றழைக் கிறார்கள். மாட்டை அடக்கி பெண்ணை மணந்து கொள்வது அந்தகாலத்தில் மரபாக இருந்துள்ளது. பெரும்பாலுமே முல்லை நிலத்துக்காளையர்கள் தான் இதுபோன்ற செயலை செய்வார்கள்.
இதற்காக பெண் வீட்டில் மணப்பெண் மாடு வளர்த்து வருவார்கள். அந்த மாட்டை அடக்க சுற்றி அலையும் வாலிபர்களைப் பற்றி பல இலக்கிய நூல்களில் நாம் அறிவோம். மாட்டைஅடக்கும் போது மாட்டின் கொம்புகளால் குத்தப்பட்டுக் குடல் சரிந்து ரத்தம் வெளியேறி வாலிபர்கள் மடிவதுண்டு. அப்படி குடல் சரிந்து விழுந்து இறந்த வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் ஒன்று சேலம் மாவட்டத்தில் கருவந்துறை என்னும் ஊரில் கிடைத்துள்ளது. கி.பி.15ம் நூற்றாண்டைச்சேர்ந்த அந்நடுகல்லில்
காளையின் கொம்புகளை தன் கைகளால் பிடித்துப் போரிடும்வீரனின் படைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதை எருது பொருதார் கல் என்றழைக் கிறார்கள். வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் சேம்பள்ளி என்னும் ஊரில் கிடைத்த நடுகல் ஒரு வித்தியாசமாக உள்ளது.
இங்கு காளைக்கு நடுகல் எடுத்ததைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். இதில் காளையும், புலியும் சண்டை யிடும் காட்சி புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. தச்சன் புதூரைச் சேர்ந்த காளை, புலியுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்ததை இந்நடுகல் காட்டுகின்றது. இதைக் காளைக்கல் என்றழைக்கிறார்கள்.
போரில் இறந்த வீரர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்கள் வீரர்களின் தியாக உணர்வையும் பெருமையையும் பேசுவதோடு மட்டுமில்லாமல், பண்டைத் தமிழரின் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு, அரசியல், போர், கொடை முதலியவற்றைப் பற்றியும் பேசுகின்றன. என்று அந்த கட்டுரையில் அவர் கூறியுள்ளார். குழந்தைகள் இதைக் கேட்டுக் கொண்டே இருந்தனர். அந்த காலத்தில் உள்ள பல விசயங்களை நீங்கள் சொல்லி கொண்டே இருக்கிறீர்கள். இது எல்லாம் ஆதித்த நல்லூரை விட்டு கொஞ் சம் விலகி சென்றது போல அல்லவா உள்ளது. என்றாள் துர்க்கா.
இல்லை. ஆதிச்ச நல்லூருக்கும் இந்த நடுகல்லுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. நாம் ஏற்கனவே கூறியது போல ஆதிச்சநல்லூர் நாகரீகம் கூறித்து நமது ஆராய்ச்சியாளர் களிடம் உள்ள வரைபடத்தில் நாட்டார்குளம் குறிப்பிடப் படுகிறது. அது பற்றி நான் ஏற்கனவே உங்களிடம் பேசியுள்ளேன்.
புதிய கல்லூழியில், தென்இந்தியாவில் கலன்கள் ஆக்கும் கலை எழுந்துள்ளது. தமிழகத்தில் இரும்புக்கால ஊழியின் கலன்கள் ஆக்கும் கலை, அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சிந்துசமவெளியில் வாழ்ந்த திராவிட மக்கள் உருவாக்கிய கலன்களை விட, தமிழ்நாட்டுக்கலன்கள் தொன்மையானவை. திண்மையானவை, சிறப்பானவை. அவை தமிழர்நாகரிகத்திற்கு ஏற்ற எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. என்பது மறுக்க முடியாது. ஆனாலும் அதற்குப் பிறகு வந்த தமிழர்களும் சளைத்தவர்கள் அல்ல. ஆகவே தான் கல் நட்டு வைத்து தங்களது மனநிலையை வெளியே
தெரியவைத்துள்ளனர்.ஆனாலும் கூட மண்பாண்டம் மூலம் நாகரீகம் வளர்த்தது மிக மிக விசேஷமாக கருதப்படுகிறது.தமிழ்நாட்டு மண்பாண்டக்கலை வளரத் தொடங்கியது. வடிவநிலை, வண்ணப்பொலிவு, எழிற்செழிவு என்ற முப்பெரும் பணிகளும் உயர்ந்து ஒளிரத் தொடங்கியது. கண்களுக்கு கவி உருவம் காண்பதில் இந்தியர்கள் இணையற்றவர்கள் என்று அரப்பன் பண்பாட்டில் உருவாகிய அழகு வாய்ந்த மண்பாண்டங்கள் சான்று தருகின்றன.
அழகும், வண்ணமும் உறுதியும் வாய்ந்த மண்கலன்கள் என்பதற்கு கொற்கையில் அகழ்ந்து கண்ட மண்கலன்கள் நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. ஆதித்தநல்லூர் பெரும்பாயூர், கோவை முதலிய ஊர்களில் கிடைத்த பானை சட்டிகளும், சாடிகளும் வண்ணமும், திண்ணமும் வனப்பும் வாய்ந்தவைகளாகவும் உள்ளத்தைக் கவர்வதாகவும் உள்ளது.
எப்படி நடுகல்கள் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளதோ… அதுபோல மண்பாண்டத்தில் புதைக்கும் வழக்கமும் பரவி கிடக்கிறது. ஆதித்தநல்லூர், பெரும்பாயூர், கோவை, செங்கற்பட்டு, பல்லாவரம் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்து கண்ட கலன்களும், தாழிகளும், உடைந்த மண்பாண்ட ஓடுகளும் சிறப்புமிக்கவை. அவற்றின் தொன்மை, திண்மை, வடிவழகு, வண்ணப்பொலிவு, செயற்செறிவு, முதலியன போற்றப்பட்டது.
இவற்றினை எடுத்துக்காட்டி, லண்டன் மாநகரில் 1858ம் ஆண்டில் வெளிவந்த இந்தியக்கலைத் தொழில்துறை இதழ் என்ற வெளியீட்டில் சென்னை ஓவியக்கல்லூரி கண்காணிப்பாளர் எட்வின் ஹோல்டர் சென்னை மாநில மண்பாண்டங்கள் என்ற தலைப்பில் ஒரு சிறப்புக்கட்டுரை எழுதியுள்ளார். இதில் தென்இந்திய மக்களின் மண்பாண்டக் கலைகளின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியது. புதிய கற்கால மக்கள் எங்குள்ளவராயிருந்தாலும் அவர்கள் தம் வாழ்க்கையில் ஒரு புதிய தொழிலைக் கண்டுபிடித்தார்கள்.
அந்த தொழில் கலன் செய்யும் கைப்பணி. தமிழ்நாட்டில் வாழ்ந்த புதிய கற்கால மக்களே முதல் வரிசையில், முதல் கைத்தொழிலைக்கண்ட மனித இனமாக மதிக்கப்படுவர். தென் இந்தியாவே நினைவுக் கெட்டாத காலத்திலிருந்து கைத்தொழில்களிலும் கலை வளர்ச்சியிலும் தனிச்சிறப்பு பெற்றுவிளங்குகின்றது. தற்போதும் கூட உயிரோட்டாமாக உள்ள ஒரே ஒரு தொழில் பானை சட்டி செய்யும் தொழில்தான்.
புதிய கற்காலத்தில் செய்யப்பட்ட பல்வேறு விதமான வடிவமும், வண்ணமும் வாய்த மண்கலங்கள், அனந்தப்பூர், செங்கற்பட்டு, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் செய்யப்பட்டவைளாகக் கருதப்படுகின்றன. அறிஞர் “புருஷ் புட்” பழங்காலக் குடிமக்கள் வாழ்ந்த இந்தப்பகுதிகளில் ஆய்வு நடத்தி முதன் முதலாகப் பழங்கால மண்பாண்டங்களைக் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த மண்பாண்டங்கள் சில சூளையில் இடப்படாதவை. அவை அடுப்பிலேற்றிச் சோறு, குழம்பு சமைப்பதற்று ஏற்றனவாக இல்லை காரணம் அது பச்சை மண்ணாற் செய்யப் பட்டிருந்தது. பல கறுப்பான மண்பாண்டங்கள் சிறப்பாக மேற்பகுதி வேகாதவைகளாகக் காணப்பட்டன. சில பானை சட்டிகள் வெந்தும் வேகாமலும் இருந்தன.
அப்பானை சட்டிகளில் சிவப்பான பகுதி வெந்து இருந்தது. புதிய கற்கால மக்கள் தொடக்க காலத்தில் செய்த மண்பாண்டங்கள் கரடு, முரடாகவும், வெந்தும் வேகாமலும் இருந்தன. அவற்றின் வண்ணங்களும், வடிவங்களும் முழுநிறைவாகக் காணப் படவில்லை. அது மட்டுமல்லாமல் அவை கவர்ச்சியான தோற்றமும் அளிக்கவில்லை. ஆதித்தநல்லூர் அகழாய்வில் கண்டெடுத்த மண்பாண்டங்கள் கல் புதிய ஊழியின் தொடக்கத்தில் செய்யப்பட்டவை. ஆனாலும் கூட அவை நல்ல அழகுடையனவாக இருந்தது. நன்றாக வெந்தனவாகவும், முற்றிலும் சிவப்பு வண்ணம் வாய்ந்தவையாகவும் உள்ளது.
ஆதித்தநல்லூர் மண் பாண்டங்கள், நன்றாக வெந்து சிவப்பு, கறுப்பு வண்ணங்களில் அழகும், உறுதியும் உடையவனாவாய் இருந்ததற்குக் காரணம், அவை இரும்பு ஊழியிலே எழுந்தவை என்பதேயாகும். அந்த மண்பாண்டங்களை வனைந்த மண்ணீட்டாளர், நல்ல கருவிகளைப் பெற்றவர்களாயும், பட்டறிவு வாய்ந்தவர் களாகவும் இருந்ததேயாகும். என்று அவர் விளக்கமாக சொல்லியிருந்தார்.
ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் – முத்தாலங்குறிச்சி காமராசு
வெளியீடு : காவ்யா பதிப்பகம்
விலை: 350/-
Buy this book online: https://www.heritager.in/product/aathichchanallur-ayvukal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/Jq4WbvrezuyCvlLgb8igza
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/