நல்லூர் ஓர் அறிமுகம் :
நல்லூர் என்ற பெயரில் தமிழகமெங்கும் பல ஊர்கள் உள்ளன. சங்ககாலம் முதல் சில நல்லூர்கள் இருந்து வருகின்றன. சான்றாக இடைக்கழி நாட்டு நல்லூர் என்ற ஊர் சங்ககாலப் புலவர் நத்தத்தனாரை ஈன்றெடுத்த ஊராகும். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் நல்லூர் என்ற பெயரில் ஊர்கள் உள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற நல்லூரை அறியாதவர் உண்டோ? முன்னொட்டுடன் சேர்ந்தும் சில நல்லூர்கள் உள்ளன. சான்றாக விருத்தாசலம் நகருக்கருகே தரும நல்லூர் என்ற ஊர் அமைந்துள்ளது. இறைவாசநல்லூரே எலவானாசூர் என்று வழங்கப்படுகிறது. மதுராந்தகம் அருகேயுள்ள அனந்தமங்கலம் அகத்தீஸ்வரர்கோயில் சாசனம் திருநல்லூர் நாட்டைக் குறிப்பிடுகிறது. பல்லவர், பாண்டியர், சோழர் போன்றோர் நாடாண்டபோது அவரவர் எல்லைக்குள் நல்லூர் என்ற பெயரில் சில ஊர்கள் உருவாக்கப்பட்டன.
பொதுவாகப் பார்ப்பணர்கள் பெருமளவில் வாழ்ந்த ஊர்களாகவே நல்லூர்கள் இருந்தன. சதுர்வேதிமங்கலம், பிரமதேயம், அகரம் அல்லது அக்ரஹாரம்போல் பிராமணர் வாழ்ந்த பதி எனலாம். நல்லூர் நீர்வளம், நிலவளம் மிக்க ஊராகவே இருந்துள்ளது. தற்போதும் உள்ளது.
பிரிக்கப்படாத பழைய தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் வட்டத்தில் இருந்த ஒரு நல்லூர் தற்போது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் உள்ளது. இவ்வூருக்குச் செல்ல விழைபவர் கும்பகோணத்திலிருந்து செல்வது என்றால் சுந்தரப்பெருமாள்கோயில் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து மகிழுந்து அல்லது சிற்றுந்து (ஆட்டோ) மூலம் செல்லலாம்.
நடந்து செல்ல விழைந்தால் நடந்தும் போகலாம். சுந்தரப்பெருமாள்கோயில் இரயில் நிலையத்திலிருந்து 2கி.மீ. தொலைவில் நல்லூர் அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்து வருவது என்றால் பாபநாசத்தில் இறங்கி அங்கிருந்து மகிழுந்துஅல்லது சிற்றுந்து மூலம் செல்லலாம். பாபநாசம் அருகேயுள்ள வாழைப் பழக்கடை என்ற பெயருடைய ஊருக்குத் தெற்கே 1/2 கி.மீ. தூரத்தில் வயல்களுக்கு நடுவே நல்லூர் அமைந்துள்ளது. திருவாரூர் நகரத்தி லிருந்து வருவது என்றாலும் வாழைப்பழக்கடையில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்லலாம்.
நல்லூர் மட்டுமின்றி வலங்கைமான் வட்டத்தில் உள்ள பொது மக்கள் பழையபடி தஞ்சை மாவட்டத்திலேயே தங்கள் வட்டத்தையும் சேர்க்கவேண்டி, கோரிக்கை ஒன்றை அரசிடம் வைத்துள்ளனர்.
நல்லூரில் பாடல் பெற்ற தலமான சிவன்கோயிலும், ஆதிகேசவப் பெருமாள்கோயிலும் தொன்மை வாய்ந்தவையாகும். கல்வெட்டுகளின் மூலம் சில புராதனமான கோயில்களின் பெயர்களைக் காண்கிறோம். கலைவல்லார்கள் போற்றிப் புகழும் ஐம்பொன் சிலைகளின் அழகும் மாடக்கோயிலின் கம்பீரமும் சிற்பங்களின் எழில் நலமும் கல்வெட்டுகளின் சிறப்புகளும் தலத்தின் மகிமைகளும் பலரும் அறிய வேண்டும்.
காவிரி பாயும் வளமான நல்லூரைச் சுற்றி ஆவூர், அவளிவ நல்லூர், திருக்கருகாவூர், திருப்பாலைத்துறை, திருவலஞ்சுழி, சுவாமிமலை, திருச்சத்திமுற்றம், பட்டீச்சுரம் ஆகிய பாடல்பெற்ற தலங்கள் உள்ளன. தாராசுரம், பழையாறை, பாபநாசம், சுந்தரப்பெருமாள் கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்புடைய ஊர்களும் உள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள ஊர்களில் சுவாமிமலை முருகனுடைய அறுபடை வீடு களில் ஒன்றாகும்.
பட்டீச்சுரம், துர்க்கைக்கோயில் காரணமாகப் புகழ்பெற்ற ஊராக விளங்குகிறது. பழையாறை, இடைக்காலச் சோழர்களின் தலைநகரமாக இருந்த சிறப்புடையது. இராஜராஜபுரம் என அழைக்கப்பட்டுத் தற்போது தாராசுரம் என வழங்கப்படும் பழம் பதியில் ஐராவதேஸ்வரர் என்று அழைக்கப்படும் கட்டிட, சிற்பக்கலை மிக்க சிவன்கோயில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை எய்தியுள்ள மேற்படி ஊர்களில் வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுகள் மிகுதியாக உள்ளன. பல ஊர்களுக்குத் தலபுராணங்களும் உள்ளன.
“மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கிடுவோர்க்கு
வார்த்தைசொல சற்குருவும் வாய்க்கும் பராபரமே”
என்ற தாயுமானவர் வாக்கிற்கினங்க மூர்த்தி, தலம், தீர்த்தம் எனமூன்றினாலும் மேலே கூறப்பட்ட ஊர்கள் சிறப்பெய்துகின்றன. இச் சிறப்புகளுடன் மாடக்கோயில் அமைந்த ஊராக நல்லூர் விளங்கி வருகிறது.
காவிரியின் தென்கரையில் இருபதாவது தலமாக விளங்கும் நல்லூர், கல்வெட்டுகளில் திருநல்லூர் எனக் கூறப்பட்டுள்ளது. சம்பந்தர் நல்லூர் என்ற பெயருடன் திருநல்லூர் என்ற பெயரையும் தம் பாடல் களில் குறிப்பிட்டுள்ளார். எனவே நாயன்மார் காலத்திலேயே செல்வச் செழிப்புள்ள ஊராக இந்த நல்லூர் இருந்துள்ளது. திரு என்பது செல்வம் என்று பொருளாகும்.
‘தென்னவனாய் உலகாண்ட செங்கனார்’ என்றும் ‘எண்டோள் ஈசற்கு எழிற்மாடம்
எழுபது செய்துலகாண்ட திருக்குலத்து வளச்சோழன்’
என்றும் போற்றப்படும், கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில் களில் திருநல்லூர் மாடக்கோயிலும் ஒன்றாகும். ஞானசம்பந்தரின் ஒரு பாடலில் நல்லூர் மாடக்கோயில்
‘நெடுமாடம் வளரும் திருநலூரே’
எனச் சுட்டப்படுகிறது. மேலும் திருநல்லூர்
‘மலைமல்கு கோயிலே கோயில்’
எனவும் அவருடைய மற்றோர் பாடலில் கூறப்பட்டுள்ளது.
அப்பர்பெருமானின் நான்காம் திருமுறையில்
‘நீள்கொடி மாடம் மலிமறையோர்கள் நல்லூர்’
என்று ஒரு பாடலில் வருகிறது.
ஐந்தாம் திருமுறையின் ஒரு பாடலில்
‘செல்லேர் கொடியன் சிவன் பெருங்கோயில்’
என்று நல்லூர் மாடக்கோயில் சிறப்பிக்கப்படுகிறது.
(நூலிலிருந்து)
நல்லூர் மாடக் கோவில் – ச.கிருஷ்ணமூர்த்தி, கி.மான்விழி
விலை: 100 /-
வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/nallur-maadak-kovil/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers