தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்
₹240.00
ஆசிரியர்:புலவர் செ.இராசு, எம்.கே.ஜமால் முஹம்மது
தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் என்னும் இந்நூலில் உள்ள ஆவணங்களை நான்குவகையாகப் பிரிக்கலாம்.
முதலாவது இஸ்லாமிய அரசர்களும், ஆட்சியாளர்களும், பிற அலுவலர்களும், வணிகர்களும், பொதுமக்களும் சைவ-வைணவக் கோயில்கட்கும், மடங்களுக்கும் செய்த அறப்பணிகள், கொடுத்த கொடைகள், நிலம், தோப்பு, இறை படிமங்கள் அளித்தமை, கோயிலை விட்டுச் சென்ற இறைபடிமங்களை மீண்டும் கோயிலில் எழுந்தருளச் செய்தமை போன்ற பல அறப்பணிகளைச் செய்து உதவியுள்ளனர்.
இவையன்றிப் பொதுப்பணிகளாக ஏரி, குளம், வாய்க்கால், மடை, மதகு, கலிங்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள இஸ்லாமியப் பெருமக்கள் பலர். சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே வாழும் அக்கிரகாரத்திற்குக் கிணறு வெட்டிக் குடிநீர் வசதி செய்து கொடுத்தவர் ஷேக் அலாவுதீன் மகன் முசாரியார் என்பவர். தான் கொடையாகக் கிணறு வெட்டிய இடத்தை அதே பார்ப்பனர்களிடம் விலைகொடுத்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அரிய செயலாகும்.
இரண்டாவதாக இத்தொகுப்பில் இடம் வெறுவது இந்துக்கள் இஸ்லாமியப் பள்ளிவாசல், தர்காக்களுக்கும், இஸ்லாம் சமயப் பெரியவர்கட்கும் கொடுத்த பற்பல கொடைகளாகும். பாண்டியர், நாஞ்சில் நாட்டு அரசர், தஞ்சை நாயக்கர், மதுரை நாயக்கர், இராமநாதபுரம் சேதுபதிகள், புதுக்கோட்டை தொண்டைமான்கள், மராட்டியர், சிவகங்கை அரசர்கள், பாளையக்கரார்கள், வணிகர்கள், பொதுமக்கள் ஆகிய பல இந்துப் பெருமக்கள் இவ்வாறான கொடை பல தந்துள்ளனர்.
சீதக்காதி போன்ற பெருமக்களும், ஜவ்வாதுப் புலவர் போன்ற அறிஞர்;களும் சேதுபதி அவையில் சிறப்புப் பெற்றுள்ளனர். பள்ளிவாசல், தர்காக்களில் விளக்கேற்ற, விழா நடத்த, ஏழைகட்கு அன்னமிட, ஆடை வழங்க, பள்ளிவாசல், தர்காக்களைப் புதுப்பிக்கக் கொடைகள் இந்துக்களால் வழங்கப்பட்டுள்ளன.
இஸ்லாமியப் பெருமக்கள் தங்கள் நிறுவனங்கட்கு அளித்த கொடைகள் இத்தொகுப்பில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளன. காயல்பட்டினம் கல்வெட்டுக்களில் இஸ்லாமியப் பெருமக்களின் ஏழு தலைமுறைப் பெயர்கள் அளிக்கப்பட்டிருப்பது வேறு எங்கும் இல்லாத செய்தியாகும். இந்துக்களின் அரசிகளையும், தெய்வப் பெண்களையும் நாச்சியார் என்று அழைப்பதுபோல (குந்தவை நாச்சியார், சூடிக்கொடுத்த நாச்சியார்) இஸ்லாமியப் பெண்களும் நாச்சியார் என்று அழைக்கப்பட்டுள்ளனர். அரசர்களிடம் பல்வேறு பட்டப் பெர்களை இஸ்லாமியப் பெரியவர்கள் பலர் பெற்றுள்ளனர்.
நான்காவது பகுதியில் சிறப்புமிக்க பொதுச் செய்திகள் பல இடம் பெற்றுள்ளன. சில பதக்கங்களும், காயல்பட்டினத்தில் ‘அஸர்’ என்ற மாலைநேரத் தொழுகை நேரத்தைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் முக்கியமானவை. (இவற்றை அன்புடன் வழங்கியவர் புதுக்கோட்டை டாக்டர் ஜெ. ராஜா முகம்மது அவர்கள்). அரசு ஆவணங்கள் பற்றியும், இஸ்லாமிய அரசர்கள் வெளியிட்ட நாணயங்களும் இறுதியாக இடம் பெற்றுள்ளன. ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் ஆட்சிக் காலத்தில் பாளையக்காரர் நிலை என்ற ஆய்வுக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.
மேற்கண்ட ஆவணங்கள் அனைத்திலும் ஒலிக்கின்ற ஒரே குரல் ‘மத நல்லிணக்கம்’ என்பதேயாகும். இன்றுஇந்திய நாட்டுக்குத் தேவையான ஒருமைப்பாட்டு உணர்வுகளை மிக ஆழமாகவே இந்த ஆவணங்கள் நமக்குப் பாடம் புகட்டுகின்றன.