தமிழ்மொழி தொடர்பாக பலருக்கும் எழுந்த பல்வேறு சந்தேகங்கள் “சிஃபி’, “வல்லமை’ ஆகிய ஆன்லைன் இதழ்களில் கேள்விகளாகக் கேட்கப்பட்டு, அதற்குத்தக்க விடைகளும் நூலாசிரியரால் அளிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய வினா-விடைகளின் தொகுப்பே இந்நூல். எழுத்து, எழுத்துச் சீர்திருத்தம், சந்தி, கிரந்த எழுத்து, பிறமொழிச் சொற்கள், பேச்சுத்தமிழ், சொல், கலைச்சொல், இலக்கணம், செம்மொழி, தொன்மை, வளர்ச்சி, நடைவேறுபாடுகள் ஆகிய பதின்மூன்று தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக நூலாசிரியர் விடையளித்துள்ளார். இந்த விளக்கங்கள் அனைத்தும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவக் கூடியவை.
தமிழ் எழுத்தை சீர்மைப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கான விடை என்ன? பிறமொழிச் சொற்கள் கலப்பினால் தமிழின் தூய்மை கெட்டுவிட்டது என்று கூறி, நல்ல ஆராய்ச்சி அறிஞர்கள் ஏன் இப்படித் தடம் புரள்கிறார்கள்? தமிழகத்தின் சமய வரலாறு ஆசீவகத்திலிருந்து தொடங்குகிறதா? பெண்வழிச் சேறல் என்பதன் உண்மையான பொருள் என்ன? தமிழகப் பல்கலைக்கழகங்களில் நிகழும் தமிழியல் ஆய்வுகளையும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நிகழும் தமிழியல் ஆய்வுகளையும் ஒப்பிட முடியுமா? கல்வெட்டுகளில் பயின்று வரும் மொழி, இலக்கிய மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதன் காரணம் என்ன? தமிழில் உருவாக்க வேண்டிய புதிய ஆய்வுக் களங்கள் யாவை? கிரந்த எழுத்துகளை ஒருங்குறியில் (யுனிகோட்) சேர்ப்பது பற்றி அரசு தலையிடும் அளவுக்குச் சர்ச்சை எழுந்துள்ளதே, இதைப் பற்றிய கருத்தென்ன? நினைவு கூரினார் என்று கூறுதல் சரியன்று தானே? இவை போன்ற பல கேள்விகளுக்குக்கான விடைகளை அதற்கான காரணங்களை முன்வைத்துக் கூறியிருப்பதுதான் இந்நூலின் சிறப்பு. மாறுபட்ட சிந்தனையுடன் கூடிய ஆசிரியரின் பதில்களை இந்நூலை முழுமையாகப் படித்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.