போலீஸ்காரர்கள் களத்தில் இறங்கினார்கள். இப்போது வேட்டையாடுவது அவர்களுடைய முறை, வீடு புகுந்து அடித்தார்கள்.
காலம் அனைத்தையும் மறக்கச் செய்யும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. வலியும் ரணமும் அப்போதைக்கு மறைந்து போனாலும் அவை விட்டுச் செல்லும் தடங்கள் என்றென்றும் அழிவதில்லை.
‘சாம்பார் என்று சொல்லப்பட்ட அந்த திரவத்தை படி சோறில் ஊற்றிக் கொண்டு, சாப்பிட வாயில் வைத்தேன். சாப்பிட முடியவில்லை. எந்த ருசியும் இல்லாமல், மண்ணைத் தின்றதைப் போல இருந்தது’.
நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தனியொரு உலகம் அது. சிறைச்சாலைகள் பற்றி திரைப்படங்கள் பதிவு செய்திருக்கும் பிம்பங்கள் அனைத்தும் போலியானவை. நிஜ சிறைச்சாலை நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது.
‘சிறைக்குள் இருக்கிற தண்டனைகூட பெரிதில்லை. ஆனால் உறவினரை நேர்காணலில் சந்திப்பதுதான் மிகப்பெரிய தண்டனை’.
இயந்திரத்தனமான வாழ்க்கை. ஒரு நாளைப்போலவே மற்றொரு நாள். ஒரே மாதிரியான அனுபவங்கள். வாட்டி வதைக்கும் வீட்டு நினைவுகள். தீராத வலி, ஆறாத ரணம். கொடூரம், மிருகத்தனம், அடாவடித்தனம், மனிதத்தன்மை, ஈரம், அனைத்தும் உண்டு அங்கே.
”தங்களுடைய வளர்ச்சிக்காக சில அரசியல் வாதிகள் குற்றவாளிகளை உருவாக்குகிறார்கள். வளர்ந்தவுடன் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி என்கவுண்டர் செய்துவிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ரவுடிகள் என்பவர்கள் ஒரு ” யூஸ் அண்ட் த்ரோ” பொருள்.”