தன்வரலாறு ஒரு நூல் என்பதைக் காட்டிலும் ஒருவருடைய வாழ்வின் ஒப்புதல் வாக்குமூலமாக விளங்குகிறது.
இந்த நூலில் வெரியர் எல்வின் தம்மைப் பற்றி மட்டுமல்ல, தம்டைய வாழ்வாக இருந்த பழங்குடி மக்களின் பண்பாட்டைப் பற்றியும் பேசுகிறார். இதை எல்வின் தாம் பிறந்த இங்கிலாந்தில் தொடங்கி, ஒரு திருச்சபை ஊழியராக இந்தியாவுக்கு வந்து, மகான்களின் தொடர்புகளுக்கும் நிறுவனங்களின் பயமுறுத்தல்களுக்கும் இடையே, தாம் கண்டடைந்த இந்தியப் பழங்குடிகளின் வாழ்க்கையினூடாக, தாம் எவ்வாறு இந்தியரானார் எனும் கதை மூலம் விவரிக்கிறார். மேலும் நாகரிக சமுதாயத்தின் சுயநல மதிப்பீடுகளைவிட பழங்குடிகளின் மதிப்பீடுகள் எந்தளவிற்கு மனிதத்தன்மை மிக்கவையாகவும் அறவியல் ரீதியாக உயர்ந்தவையாகவும் இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இதன்மூலம் இந்நூல் இந்தியப் பண்பாட்டு வரலாற்றின் தொடக்கமாக இருக்கும் பழங்குடிகளின் வாழ்க்கைமுறையை நாம் தெரிந்துகொள்ள உதவுகிறது. அத்துடன் மத்திய இந்தியாவிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் உள்ள அடர்ந்த காடுகளில் வாழ்ந்த பல ஆதிவாசிகள் எவ்வாறு சுதந்திர இந்தியாவின் குடிமக்களாக ஆனார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் அதிக வாய்பை வழங்குகிறது.
இவையே வெரியர் எல்வினை ஓர் உலகப் புகழ்பெற்ற மானிடவியலராக ஆக்கியிருக்கின்றன. இந்திய அரசு தனது உயந்த விருதான பத்மபூஷண் விருதையும் இந்நூலின் ஆங்கிலப் பதிப்புக்குச் சாகித்திய அகாடெமி விருதையும் வழங்கி இருக்கின்றது.
புராதனப் பொதுவுடைமைச் சமூகத்தின் கூறுகளையும் தற்கால சமூகத்தின் இருப்பையும் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.