அடையாறு, கூவம் போன்ற அழகிய நதிகளைச் சாக்கடைகளாக்கி வேடிக்கை பார்த்தது சென்னை. வடிகால்களை எல்லாம் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரப்பி, குப்பைத்தொட்டிகள் ஆக்கினார்கள் மக்கள். பொங்கிய பெருவெள்ளத்தில் நகரமே தவித்ததை வேடிக்கை பார்த்தன நதிகள். குப்பைகளோடு சேற்றையும் கொண்டு வந்து வீடுகளுக்குள் போட்டுச் சென்றது மழைநீர். இயற்கையைச் சிதைக்காமல் வாழ வேண்டிய அவசியத்தை இதைவிட மோசமாக யாரும் கற்றுக்கொள்ள முடியாது.
நவீன வாழ்க்கை முறை ஏகப்பட்ட குப்பைகளை இந்த பூமியில் சேர்ப்பதாக இருக்கிறது. பிளாஸ்டிக் குப்பை முதல் எலெக்ட்ரானிக் குப்பை வரை குற்ற உணர்வே இல்லாமல் வீதிகளில் வீசுகிறார்கள் பலரும்! இந்த பூமியின் நுரையீரலில் குப்பைகளை அடைப்பது, புகை பிடிப்பதைவிட மோசமான புற்றுநோயைத் தரும். அதன் வலி தாங்காமல் மனித இனமே தவிக்க நேரும்.
குப்பை என்பது ஏதோ மாநகராட்சி, நகராட்சி என உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்னை அல்ல! எந்த வகையிலும் சூழலை மாசுபடுத்தாத வாழ்க்கை வாழ வேண்டியது இப்போதைய தேவை என உணர்த்தும் நூல் இது. நம் சந்ததிகளுக்கு அழகிய உலகத்தை உருவாக்கிக் கொடுக்க நினைக்கும் ஒவ்வொருவரும் இதைப் படிக்க வேண்டும்!
‘தினகரன்’ வசந்தம் இணைப்பிதழில் தொடராக வெளிவந்து, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்று, இப்போது நூல் வடிவில் வெளிவருகிறது.