Description
வரலாற்றாய்வாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், கல்வெட்டு அறிஞர், கோயிற்கலை நிபுணர் எனப் பல திறக்குகளில் இயங்குகிறவர். இவரது ஆய்வு முடிவுகள் மிக முக்கியமானவை. இவர் எழுதிய ‘குடவாயிற்கோட்டம்’, ‘கருணாகரத் தொண்டைமான்’, ‘நந்திபுரம்’, ‘கோனேரி ராயன்’, ‘கோயிற்கலை மரபு’, ‘தமிழக கோபுரக்கலை மரபு’, ‘தஞ்சாவூர்’, ‘தஞ்சை நாயக்கர் வரலாறு’, ‘இராஜராஜேச்சரம்’, ‘தாராசுரம்’ போன்ற நூல்கள் வரலாற்றாய்வில் பல புதிய கதவுகளைத் திறந்தவை. அகில இந்திய அளவில் பல கருத்தரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறார். கோலாலம்பூர் மற்றும் தஞ்சையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாடுகளிலும், கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும் சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கிறார். கம்போடியா, ஜாவா, பாலி பகுதிகளில் கள ஆய்வு செய்து பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது, சேக்கிழார் விருது, திருக்கோயில் கலைச்செல்வர் விருது, இராஜராஜ சோழன் விருது, உ.வே.சா. விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சாஸ்த்ரா பல்கலையின் முதுமுனைவர் விருது உட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர்.







