பதினாறாம் நூற்றாண்டில் அரபு மொழியில் எழுதப்பட்ட இந்த நூல், போர்ச்சுகீசிய குடியேற்றவாதிகளுக்கு எதிரான மலபார் முஸ்லிம்கள் நிகழ்த்திய போராட்டத்தைப் பற்றிப் பேசும் முதல் வரலாற்று ஆவணம், நேரடி அனுபவங்களிலிருந்தும் அசலான தரவுகளிலிருந்தும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவான இந்த நூல், விரிவான திறனாய்வுக் குறிப்புகள், இருநூறுக்கும் மேற்பட்ட குறிப்புகள் ஆகியவற்றைப் பிராந்தியப் பின்னணியில் விளக்குகிறது. மேற்குலகின் ஏகாதிபத்தியப் பேராசைகளுக்கு ஒரே தடைசக்தியாக முஸ்லிம்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இந்த நூலின் வரவு முக்கியத்துவம் வாய்ந்தது எனலாம்.
இந்நூலாசிரியர் ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம் ஏமன் நாட்டு மக்தூம்களின் வம்சாவளியில் வந்தவர். இவரது முன்னோர் கேரளத்தில் இருக்கும் பொன்னானியில் குடியமர்ந்து இஸ்லாம் பரவப் பெரும் பங்காற்றியவர்கள். அவர்கள் இந்தியாவின் மீதான அய்ரோப்பிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர்கள். அவர்களின் நீட்சியாக இவரும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக எகிப்து, குஜராத், பீஜப்பூர், கள்ளிக்கோட்டை ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்கள் அடங்கிய ஒரு கூட்டணியை உருவாக்கினார். கடைசி மூச்சுவரை ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய இவர் ஹிஜ்ரி 970-990இடைப்பட்ட காலத்தில் காலமானார்.