சமுத்திரத்தில் வானரங்களும் மனிதர்களும் அணை கட்டிய இராமாயண நிகழ்வையே நம்ப மறுத்துக் கொண்டு நாமிருக்க கி.பி பதினேழாம் நூற்றாண்டில் சேது நாட்டில் நிகழ்ந்த கடல் யுத்த நிஜங்களை மெய்சிலிர்க்க காட்சிப்படுத்தும் சேது நாட்டின் வீர காவியமாக இராமப்பய்யன் அம்மானை விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் இருந்த கடைக்கண் சேதுபதியை வெல்வதற்கு பூலோக இராமன் என்று வரலாறு புகழப்பட்ட திருமலை நாயக்கரின் தளபதி இராமப்பய்யன் சமுத்திரத்தில் அணைகட்டி பீரங்கியுடன் கூடிய கடற்போர் செய்த சுவாரசியம் மிக்க நிகழ்வுகளின் பதிவாக இந்நூல் அமைந்துள்ளது.
திருமலை நாயக்க மன்னரின் சரித்திர நிகழ்வுகளும் எவருக்கும் அடங்காத வல்லமை மிகுந்த சேதுபதியின் வீரமும் பற்றி நாட்டுப்புறங்களில் உடுக்கை அடித்துக் கொண்டு பாடும் முறையில் அற்புதமாக எழுதப்பட்ட வட்டார இலக்கியமாக விளங்கும் இராமப்பய்யன் அம்மானை இலக்கிய வரலாற்றில் மிகச் சிறந்த ஆவணம் எனில் அதில் மாற்றுக்கருத்தில்லை.