பலாப்பழம்
‘செங்கால் பலவின் தீம்பழ மிசையும்
எனக்கூறி நற்றிணை பலாவின் இனிப்புச் சுவை பற்றி நவில் கிறது. பலாவின் பலவகைகளில் வருகைப் பலா மிகச் சிறந்த சுவையையுடையது. இன்றும் குற்றாலம் செல்வோர் வருக்கைப் பலாவின் சுவைக்காக அதனை விரும்பி வாங்கி உண்கின்றனர்.
சங்கஇலக்கியங்களில் பலா ‘பசள்’ என்று அழைக்கப்பட்டது.” ஆசினி எனவும் ஈரப்பலா எனவும் இது அழைக்கப்பட்டது. மதுர மான இன்சுவைக் கனிகளை வருக்கை என்றும்,இன்சுவை தராத சாதாரண பலாப்பழத்தை ஊழை என்றும் பெயரிட்டு அழைத் தனர். பலாச்சுளையைச் சுற்றி வைக்கோல் சடைசடையாய் இருக்கிறது. பலாச்சுளை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கண்ணறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பலாப்பழத்தைத் தொட்டால் தொட்டகைக்கு சொரசொரப்பு வந்துவிடும். ஆனால் சுளையோ தேன் மயமாக நின்று தித்திக்கிறது. அதனால்‘அப்பன் சடையன் ஆத்தாள் சடைச்சி பிள்ளையோ சருக்கரைக்கட்டி’ என்று பலாவின் இனிப்புச்சுவை பற்றி பழமொழி வழங்குகிறது.
‘வருக்கை ஏறும் கனிசிதறிச் செந்தேன் பொங்கி’
என்ற சம்பந்தரின் வாக்கும் பலாவின் சுவைபற்றி திறம்பட இயம்புகிறது.