தாயக மண்ணைக் காப்பாற்ற தரணியில் இதுவரை கேட்டிராத ஊழிக்கூத்து இந்தியாவில் நிகழ்த்தியவர் திப்புசுல்தான்.
ஐரோப்பாக் கண்டத்திலன் யுத்தகளப் புலி நெப்போலியன் என்றால் இந்திய துணைக்கண்டத்தின் கொடுவாய்ப் புலியாக திப்புசுல்தான் யுத்த பேரிகை கொட்டி முழக்கி வந்தார் . திப்பு சுல்தானின் வீர காவியத்தை கறை படுத்தும் கருத்தாதிக்கம் காலந்தோறும் புதிய புதிய அரிதாரப் பூச்சுக்களைச் சுமந்து மேடையேறினாலும் களங்கமற நிமிர்ந்து பார்ப்பவர்களின் கண்களுக்கு மட்டுமே வானத்தில் ஒளிரும் வெண்மதியாக திப்புவின் வரலாறு சுடர்வீசும் உண்மை புலப்படும் . ‘அன்பே நிலையானது, இறைவனை நேசி, சண்டை செய்ய விரும்பாத மன்னிக்கும் மனம் பெறு….’ என்று சிறுவயதில் தினமும் அறிவுறுத்தப்பட்டவர் திப்பு சுல்தான் .
மனித நேயமும் மத நல்லிணக்கமும் உடைய தந்தை ஹைதர் அலி ஆங்கிலேய ஆதிக்கம் இந்தியாவில் காலூன்ற விடாமல் தடுப்பதே தன் முதன்மை இலக்காகக் கொண்டிருந்ததால் திப்புவின் இறை வழிப் பாதை திசை திரும்ப வேண்டியதாயிற்று.
உலகம் வெப்பமயமாதல் பற்றியும் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் 250 ஆண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தானின் சிந்தனை கூர்மை பெற்றிருப்பது அவரது உத்தரவு மொழிகளில் பொறிக்கப்பட்டிருக்கிறது .
‘உங்கள் பகுதியில் குற்றம் புரியும் விவசாயிகளுக்கு தண்டனையாக அபராதம் விதிப்பதற்குப் பதிலாக குற்றம் புரிபவர்களுக்கு தண்டப் பணம் வசூலிப்பதைக் கைவிட்டு அதற்கு பதில் இரண்டு மா
மரங்களையும் , இரண்டு பலா மரங்களையும்
நட்டு 3 அடி உயரம் வளரும் வரை தண்ணீர் ஊற்றி வளர்க்கும்படி தண்டனை அளியுங்கள்’ என்று உத்தரவிட்டார்.
நீர் சேமிப்பிற்கு முதல் முயற்சி எடுத்த மைசூர் மன்னன் திப்பு சுல்தான். கிருஷ்ணராஜசாகர் அணைக்கு அடிக்கல் நாட்டியவர் இவர்.
இரும்புக் குழாய்களில் வெடி மருந்து நிரப்பி 3000 அடி தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரித்து ஆங்கிலேயரை ஸஎதிர்த்த போராளி திப்பு.
இந்திய விடுதலைப் போருக்காக உயிர் நீத்த திப்பு சுல்தானின் வீர வரலாற்றை இந்நூல் கூறுகிறது.