Description
உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனாகிய தில்லைக் கூத்தப் பெருமானின் அருட்கருணையால் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தேவாரமாண்பு அறிய உழைத்ததே இந்நூலாகும். பக்தி, இலக்கியம், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், சிற்பங்கள், செப்புத்திருமேனிகள், பிரதிமங்கள், ஓவியங்கள் எனப் பல துறைகளின் சங்கமாம் மாகடலுள் மூழ்கிக் கிடைத்த முத்துமணிகளைக் குவித்து நோக்கிய போது தேவார மாண்பினையும், ஓதுவார்தம் மரபு வரலாற்றினையும் என்னால் ஓரளவு அறிய இயன்றது. அவைதம் பதிவே இந்நூலாகும்.
இந்நூலினை ஆண்டுகள் பலவாயினும் மீட்டும் மீட்டும் புதிய புதிய தேடல்களில் கண்டவற்றை இணைத்து இணைத்து மெருகேற்றியபோது என்னுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு சற்றும் சலிப்பு கொள்ளாது பங்கேற்றவர்கள் முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரனார், தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் பதிவாளர் திரு இரா.சுப்பராயலு, என் துணைவியார் திருமதி கண்ணம்மா ஆகிய மூவரும் ஆவர்.
இந்நூல் படைப்பதற்காக தேவாரப் பாடல் பெற்ற தலங்களுக்கும், பிற வரலாற்று இடங்களுக்கும் நேரில் சென்று பலதரவுகளை ஒளிப் படங்களோடு பதிவு செய்தபோது பலர் உதவி செய்தனர். எவ்வகை உதவியாயினும் அதனைச் சிரமேற்கொண்டு போற்றுகிறேன். என் நூல்கள் ஒவ்வொன்றினையும் நான் எழுதுங்கால் என்னோடு அந்நூல் பற்றி உரையாடி மகிழ்ந்து ஊக்கப்படுத்துபவர் கெழுதகு நண்பர் சுந்தர் பரத்வாஜ் ஆவார். அவர் தம் ஊக்கமே என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது.







