தமிழர்களின் கலை, பண்பாட்டை தனக்குள் வைத்து பாதுகாக்கும் பண்பாட்டுப் பெட்டகமாக மதுரை இருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணகர்த்தாக்கள் நாயக்க மன்னர்களே. அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில், அதைச் சார்ந்த சித்திரைத் திருவிழா என காலங்கடந்து நிற்கும் கலாசார சாட்சிகளின் காவலர்களாகவே நாயக்க மன்னர்கள் இருந்துள்ளனர் என்பதை இந்நூல் தெளிவாக காட்டுகிறது.மதுரை நாயக்கர் வரலாற்றுடன், அவர்களின் சமயப் பணியையும், தமிழ்ப்பணியையும், மன்னர்களது திருவுருவப் படங்களையும் நூலில் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது.
நாயக்க மன்னர்களது சிறப்பு, அவர்கள் மேற்கொண்ட ஆட்சிமுறை ஆகியவற்றை மட்டும் நூலில் விளக்காமல், அவர்களது வரவு – செலவு, விதிக்கப்பட்ட வரிகள், அதன் தாக்கம் என விருப்பு வெறுப்பற்ற முறையில் விமர்சன நோக்கில் தகவல்களைத் தொகுத்திருப்பது படிப்போருக்கு விறுவிறுப்பைத் தருவதாக உள்ளது.நாயக்க மன்னர்கள் போருக்கு அடுத்தபடியாக திருப்பணிக்கே அதிகம் செலவு செய்தார்கள் என்பன போன்ற செய்திகள் வியக்க வைக்கின்றன. மதுரையானது 166 ஆண்டுகள் விஜயநகரப் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததும், விசுவநாத நாயக்கரே மதுரையின் நேரடி ஆட்சியைத் தொடங்கினார் என்பதும் யாவரும் அறிந்தது எனினும், அவர் மதுரையைத் தலைநகராக்கி, புதிய ஆட்சியை நிறுவ பட்ட பெரும்பாட்டை கதைப்போக்கில் விளக்கியிருப்பது நூலாசிரியரின் தனிச்சிறப்பையே வெளிப்படுத்தியுள்ளது.தமிழக வரலாற்றை அறிய விரும்பும் அனைவரது கையிலும் இருக்க வேண்டிய அற்புத நூல் இது என்பதில் சந்தேகமில்லை.