1921 நவம்பர் 21 இல் பிரிட்டிஷாருக்கு எதிராக புரட்சி செய்த நூற்றுக்கணக்கான மாப்ளாக்களை சரக்கு ரயிலில் உணவு, தண்ணீர், காற்று எதுவுமின்றி அடைத்து பூட்டிப் போட்டு பின்னர் கோயம்புத்தூரில் பிணக்குவியல்களாக திறந்து கொட்டிய வரலாற்றுச் சோகம் தெற்கின் “ஜாலியன் வாலாபாக் படுகொலை” என்று வர்ணிக்கப்பட்டது.
தென்னிந்தியாவின் முதல் தேசியவாத எழுச்சிகளில் ஒன்றாக மாப்ளா புரட்சி வரலாற்று ஆசிரியர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 2339 கிளர்ச்சியாளர்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள் என்பது வரலாற்று கணக்கு. 1960களில் கேரள அரசு புரட்சியில் பங்கேற்ற மாப்ளாக்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்டியலில் சேர்த்தது.
ஆனால் தற்போதைய இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ICHR – Indian Council of Historical Research) இந்தியாவின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பட்டியலில் இருந்து இவர்களின் பெயர்களை நீக்க பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புரட்சியும் தியாகமும் அவ்வப்போதைய ஆட்சியாளர்களின் பரிசோதனைச் சாலையில் மாற்றமடைவது மர்மப் புதிராக உள்ளது.