கான்சாகிப் முதலில் ஆங்கிலேயரின் தளபதியாக இருந்து தென்னாட்டு பாளையக்காரர்களை அடக்கியதை மட்டும் எடுத்துக் கூறி அவர் மீது நாட்டுத் துரோகச் சாயம் பூச விரும்புகின்றனர் ஒருசிலர். கான்சாகிப் ஆங்கிலேயருக்கு நாட்டை காட்டிக் கொடுத்தார் என்று அபாண்டம் சாட்டுகின்றனர். கான்சாகிப் நாட்டைக் கைப்பற்றியதும் சுதந்திரப் பிரகடனம் செய்து நாட்டைச் சீருடன் ஆண்டதையும் அந்நியரை எதிர்த்துப் போரிட்டதையும் விரிவாக விளக்காமல் விட்டு விடுகிறார்கள்.
இச்செயல் மாபெரும் மேதைக்கு இழைக்கப்படும் அநீதியாகும். நம் நாட்டில் பல சமயத்தவரும் பல மொழி பேசுவோரும் வாழ்கின்றனர். அவர்கள் தாய் நாட்டுக்காகச் செய்யும் வீரச் செயல்களையும் தியாகங்களையும் மதிக்கவேண்டும், போற்றவேண்டும். அவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்க வேண்டும். அப்போதுதான் மென்மேலும் தியாகங்கள் செய்ய முன்வருவார்கள். வேற்று சமயத்தினர் என்பதற்காக வேற்றுமை பாராட்டுவது அறிவுடைமை ஆகாது.
கான்சாகிப்பின் இயற்பெயர் யூசுப்கான். ஆற்காடு நவாப் அவர் வீரத்தை மெச்சி வழங்கிய பட்டமே கான்சாகிப் என்பது. கான்சாகிப் என்ற பெயரிலேயே அவர் பிரபலமானார்.தங்களுக்கென ஓர் அங்குல நிலமும் இல்லாதிருந்தும் தோள் வலிமையால் அரசுகளை நிறுவி வரலாற்றில் தங்கள் பெயர்களை பொன் எழுத்துக்களில் பொறித்துச் சென்ற மேதைகளில் கான்சாகிபும் ஒருவர். அவருடைய வரலாறு தான் இந்நூல்.