இந்தியச் சமூக அமைப்பில் பாரம்பரியமாக மூன்று வகையான ஆதிக்கங்கள் நிலை பெற்றுள்ளன. அவை, அரசியல் ஆதிக்கம், பொருளியல் ஆதிக்கம், பண்பாட்டு ஆதிக்கம். இந்த மூன்று வகை ஆதிக்கங்களுள் மூன்றாவதாக அமையும் பண்பாட்டு ஆதிக்கம், சாதி வேறுபாடுகளை ஆழமாகக் கொண்ட இந்தியச் சமூகத்தில் வலுவாக வேரூன்றி உள்ளது.
இந்திய மற்றும் தமிழ்நாட்டு வரலாற்றைக் கற்கும்போது, ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர்கள் குறித்தும் – அவர்கள் வருவாய் ஈட்டிய முறை குறித்தும் அறிந்து கொள்ளும் அளவுக்கு, பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின்மீது திணிக்கப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்தையும் ஒடுக்கு முறைகளையும் நாம் அறிந்து கொள்வதில்லை. அவற்றை மிக எளிதாக ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், உண்மையான சமூக வரலாறு என்பது, பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் – அவற்றுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்களையும் உள்ளடக்கிய தாகும். எனவே, இத்தகைய போராட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்வது சமூக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
தமிழர்களுக்கும் ஆரியர்களுக்குமான முதல் பகையும் முரணும் வேளாண்மைத் தொழில் விரிவாக்கத்திலிருந்தே தொடங்கி இருக்கின்றது. வேளாண்மைச் சமூகத்திற்கும் கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்குமான தொழில் பகையே இனப்பகைமையாகப் பரிணமித்திருக்கிறது. குறிப்பாக, வேளாண் மரபினருக்கும் ஆரியருக்குமான மோதலே தொழில் பகையாக – பண்பாட்டுப் பகையாக வந்திருக்கிறது,