மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை வெளியிட்டார்.
இந்தியாவில் மக்கள் களத்திலும், அறிவுசார் துறைகளிலும் அரசு சார்ந்த அமைப்புக்களின் மூலமாகவும், மக்களாட்சியைக் காக்க இருபதாம் நூற்றாண்டில் இடையறாத போராட்டம் நிகழ்த்திய அறிவாளுமை அண்ணல் அம்பேத்கர், சமூகத்தைப் பீடித்துள்ள முடைநாற்றம் என அறியப்பட்ட சாதீயக் கட்டமைப்புக்கும், தீண்டாமை என்னும் பஞ்ச மாபாதகச் செயலுக்கும் எதிராகச் சமரசமற்ற தாக்குதல் தொடுத்து, அவை பற்றிய தமது ஆழமான, கூர்மையான, தெளிந்த ஆய்வுகளையும் முடிபுகளையும் அறிவாக்கங்களாகப் படைத்தார். சாதி என்னும் முடைநாற்றம் நீக்க வந்த கற்பூரப் பெட்டகமாகத் திகழ்பவை அண்ணலின் படைப்பாக்கங்களாகும்.
சிக்கலைக் களையாமல், சிக்கலை அதன் வேரோடும், வேரடி மண்ணோடும் களையும் உத்திகளைத் தம் படைப்புக்களில் வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர், இந்தியா சமூக விடுதலையை அடைவதற்கானப் பாதையாக அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவதில் பெரும் பங்காற்றினார். அரசு என்ற கட்டமைப்பின் துணை கொண்டே, தீண்டத்தகாதவர் எனச் சிலரால் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், பெண்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் உரிமைகளுக்காகவும், தன்மானத்திற்காகவும் தனது சட்டப்புலமையைப் பயன்படுத்தி அல்லும் பகலும் அயராது உழைத்த பல்துறை வல்லுநரான அண்ணல் அம்பேத்கர் இந்திய ரூபாய், வங்கித்துறை வரலாறு முதலான இந்தியப் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்தும், மாநில உரிமைகள் குறித்தும், பாகிஸ்தான் பிரிவினை போன்ற சிக்கல்கள் குறித்தும் தம் படைப்பாக்கங்களில் அறிவார்ந்த கருத்தாக்கங்களை முன்வைத்துள்ளார்.
ண்ணலின் படைப்பாக்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலும், மராத்தி மொழியிலும் எழுதப்பட்டவை. அவற்றுள் பல அவர் வாழும் காலத்திலேயே வெளிவந்தவை. சில அவரது கையெழுத்துப் படிகளில் இருந்து பின்னர் வெளியிடப்பட்டவை. இன்னும் சில, மும்பை சட்டமன்றத்திலும், ஆங்கில ஆட்சியாளர் அவையிலும், அரசியல் நிர்ணய அவையிலும், இந்திய நாடாளுமன்றத்திலும் அண்ணலின் உரைகளாகவும், வினாக்களுக்கு அவர் ஈந்த விடைகளாகவும் அரசுப் பதிவேடுகளிலேயே புதைந்து கிடந்தன. இவற்றோடு அவர் எழுதி வெளிவந்த பத்திரிக்கைக் கட்டுரைகளையும் மொத்தமாகத் திரட்டித் தொகுத்து 1979இல் மராட்டிய மாநில அரசு ஆங்கிலத்தில் 37 தொகுதிகளாக வெளியிட்டது.
இந்த 37 தொகுதிகளையும் தமிழ்நாட்டின் நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் தமிழாக்கம் செய்து அதே போன்றே 37 தொகுதிகளாக வெளியிடப்பட்டாலும் அந்நூல்கள் முழுமையான மொழிபெயர்ப்பாக அமையவில்லை என்பதைக் கருத்திற்கொண்டு தற்போது தமிழ்நாடு அரசு, அண்ணல் அம்பேத்கரின் அனைத்துப் படைப்பாக்கங்களையும் இக்காலச் சூழலுக்கு ஏற்ப பொருள்வாரியான தலைப்பில் எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பிறமொழிக்கலப்பின்றி உலக மக்களை சென்றடையும் வகையில் வெளியிட அறிவுறுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணலின் ஆக்கங்களுக்கு முன்னர் வெளிவந்த தமிழ்ப் பதிப்பில் இடம்பெற்றுள்ள மணிப்பிரவாள மொழிநடையை இக்காலத் தமிழுக்கு ஏற்ற செழுந்தமிழாக மாற்றியும், அண்ணலின் படைப்புக்களைப் பொருளடைவு மற்றும் கால முறையில் புதிதாக வகை தொகை செய்தும், ‘அண்ணல் அம்பேத்கரின் அறிவுக் கருவூலங்கள்’ எனும் புதிய தலைப்பில் 60 தொகுதிகளாக தமிழ் வளர்ச்சித் துறையோடு நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வெளியிட முனைந்துள்ளன.