புத்த பகவனால் முன்மொழியப்பட்ட பவுத்தம் உலகில் மூன்றாவது பெரிய மதம்; இன்று கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப்படுகிறது.
வேள்விச் சடங்குகள், வருண வேறுபாடுகள் என கங்கைச் சமவெளியில் வைதிக நம்பிக்கைகள் கோலோச்சிக் கொண்டிருந்த கால கட்டத்தில், அவற்றிற்குப் பதிலாக பஞ்சசீலம், தசசீலம், எண்வழிப் பாதை என அறம் சார்ந்த வாழ்வே இறுதி விடுதலைக்கான ஒரே வழி என ஒரு மாற்று நெறியை முன்வைத்த மாதவர்தான் புத்த பகவன்.
பவுத்தம் அது தோன்றிய மண்ணில் இன்று அழிக்கப்பட்டிருக்கலாம். பக்தியின் இடத்தில் அறத்தை வைத்த பவுத்தத்தை, தமிழ் பக்தி இயக்கம் தமிழகத்தைவிட்டு அகற்றி இருக்கலாம். ஆனால் தமிழ் இலக்கியங்களானாலும் வாழ்வானாலும் எங்கெல்லாம் அறம் போற்றப்படுகிறதோ அங்கெல்லாம் பவுத்தம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
சென்ற நூற்றாண்டில் இந்திய மண்ணில் மீண்டும் பவுத்தம் துளிர்த்தது. புத்தர் ஒளிபெற்ற தலமாகிய புத்தகயா வைதிக நெறியாளர்களிடமிருந்து மீட்கப்பட்டிருக்கிறது; அண்ணல் அம்பேத்கர், தர்மானந்த கொசாம்பி, லட்சுமி நரசு, ரைஸ் டேவிஸ் முதலான எண்ணற்ற அறிஞர்கள் புத்தரின் வாழ்வை ஆராய்ந்து எழுதினர். மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட அறிவுசார்ந்த ஆய்வுகளாக அவை இன்றும் மிளிர்கின்றன.
அவர்களின் வழியில் நின்று அ. மார்க்ஸ் எழுதிய புத்த சரிதம்தான் நீங்கள் கையில் ஏந்தியிருக்கும் இந்த நூல். இது பவுத்தத்தின் அடிப்படைகளை மட்டுமல்ல, அதன் ஆழங்களையும் அது முன்வைத்த தம்ம நெறிகளையும் துல்லியப்படுத்திய வகையில் பவுத்தம் குறித்த ஒரு ஈடு இணையற்ற, அறஞான நூலாக மலர்ந்திருக்கிறது. பவுத்தம் குறித்து அறிமுகமாகப் பயில்வோர் மட்டுமின்றி, ஆழத் துறைபோகியோரும் படிக்க வேண்டிய முக்கியமான நூல்.