செட்டிநாட்டுப் பெண்களின் பிரச்னைகளை ஆவணப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட 14 சிறுகதைகளின் தொகுப்பு. தமிழில் குறிப்பிட்ட சமுதாயம் அல்லது வட்டாரம் சார்ந்த எழுத்துகள்
எப்போதும் தனி கவனத்தைப் பெறுகின்றன. இந்த நூலிலும் தனிச்சிறப்பாக செட்டிநாட்டுப் பெண்களைப் பற்றி பேசப்படுகிறது.
செட்டிநாட்டில் காலங்காலமாகக் கேட்கப்பட்டு வருகிற சில குடும்பங்களின் கதைதான் ஒப்பிலாள். இங்கொரு குடும்பம், அங்கொரு குடும்பம், இரு நாடுகளிலும் குழந்தைகள். ஒரு காலத்தில் நிறைய ஒப்பிலாள்கள். நல்லவேளையாக இப்போது அருகிப்போய்விட்டது.
செட்டிநாட்டின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது யுவைடிஸ் சிறுகதை. நிறைய பெரிய குடும்பங்கள் தொழில், வேலை காரணமாக ஊரைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில், சோமண்ணன் போலவே இப்போதும்கூட பலரைப் பார்க்க முடியும்.
இவர்களைப் போன்ற பல கதை மாந்தர்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்; இந்தக் கதைகளின்வழி அன்றும் இன்றும் செட்டிநாட்டுப் பெண்களின் பிரச்னைகள் பேசப்படுகின்றன. பெண்களுடைய பிரச்னையை ஒரு பெண்ணாக மிகச் சிறப்பாகச் சிறுகதைகளாக்கியுள்ளார்.
செட்டிநாட்டு வாழ்வியலை ஆவணப்படுத்தியுள்ள இந்தச் சிறுகதைகளில் உரையாடல்களைப் புரிந்துகொள்வது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், அவை உயிர்ப்புள்ளவை என்பது கவனத்துக்குரியது. ஒவ்வொரு கதையும் ஒருவிதம். அவசியம் படிக்க வேண்டிய கதைகள்.