மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பணி செய்யும் பூசாரிகளைப் பற்றிய ஆவணம். ஃசி.ஜே புல்லர் செய்திருக்கும் ஆய்வுப் பணி இது. இவர் லண்டன் ஸ்கூல் ஆக்ப் எகனாமிக்ஸில் மானுடவியல் பேராசிரியர். தமிழில் சி. நாகராஜ பிள்ளை மொழிபெயர்த்திருக்கிறார்.
மீனாட்சியம்மன் கோயிலின் திருவிழாக்கள், சாமி புறப்பாட்டின்போது நடக்கும் சடங்குகள் இவற்றைப் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் பல பகுதிகள் என்னை ஈர்த்திருந்தன. இந்தக் கோயிலுக்கு ஒரே குலத்தைச் சேர்ந்த இரண்டு விதமான கிளைகளைச் சேர்ந்த பூசகர்கள் இருக்கிறார்கள். ஒருவர் குலசேகரர் கிளை. மற்றொருவர் விக்கிர பாண்டியன் கிளை. 1310ல் மதுரைக்கு படையெடுத்து வந்த மாலிக் கப்பூருக்கு பயந்து சொக்கநாதர் மற்றும் மீனாட்சி சிலைகள் கோயிலில் இருந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படுகின்றன.. அதற்குப் பிறகு 1378ஆம் ஆண்டு மீண்டும் சிலையை அங்கே நிறுவுவதற்காக சன்னதி திறக்கப்படுகிறது. இப்போது மதுரை விசயநகர ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கிறது. சொக்கநாதர் சன்னதியைத் திறந்தவர் குலசேகர பெருமாள் என்பவர். அவரையே சொக்கநாதர் மீனாட்சிக்கு பூசை செய்ய நியமிக்கிறார் குமார கம்பணன். இவர் அப்போதைய விசயநகரத்தின் பிரதிநிதி. சில வருடங்களுக்குப் பின் குலசேகரரின் வழிவந்தவர்கள் மீது இருந்த ஏதோ கோபத்தால் குமார கம்பனின் வாரிசில் ஒருவர் சதாசிவர் என்பவரை தலைமை பூசகராக நியமிக்கிறார். சதாசிவர் முறைப்படி சிவ தீட்சை பெற்று விக்கிரம பாண்டியன் என்ற பெயர் பெறுகிறார். இவருக்குப் பின் வந்தவர்கள் இவருடைய கிளையில் வந்தவர்கள் ஆகிறார்கள். அன்றில் இருந்து இன்று வரை இந்த இரண்டு கிளைகளும் தான் தலைமை பூசகர்களாக இருக்கிறார்கள். இவர்களில் விக்கிரம பாண்டியன் கிளைக்குத் தான் மீனாட்சி, சொக்கநாதரைத் தொட்டு வழிபாடு செய்யும் உரிமை உண்டு என்கிறது புத்தகம்.
இவர்களைப் பற்றிய வரலாற்று, சமூக , நியதிகள் பற்றியெல்லாம் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. மற்றொரு ஈர்த்த விஷயம் என்பது, சிவ தீட்சை பெற்றவர்கள் நிச்சயம் திருமணம் செய்திருக்க வேண்டும் என்பதும், ஒருவேளை ஒட்டுமொத்தமாக ஆண் பூசகர்களுக்கு ஏதேனும் ஆபத்தோ, பூசை செய்ய முடியாத நிலை வந்தாளோ அவர்களின் மனைவிகளுக்கு அந்த உரிமை உண்டு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் முத்து மீனாட்சி என்கிற பூசகரின் மனைவி ஒருவர் உரிமைகேட்டு வழக்குத் தொடுத்து மேல்கொர்ட்டில் ஜெயித்ததையும் விரிவாக எடுத்துச் சொல்கிறது. ஆனால முத்து மீனாட்சி, உரிமை பெற்றுக்கொண்டாலும் தன் சார்பாக ஒரு ஆணையே பூசகராக நியமிக்கிறார்.
இதோடு, காஞ்சி மடாதிபதிகள் கோயிலுக்கு வருகையில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதும், சைவ மடத்தைச் சேர்ந்த ஆதினங்களுக்குண்டான உரிமை மற்றும் வழக்கங்கள் பற்றியும் விவரிக்கிறது.
ஃபுல்லர் இந்தப் புத்தகத்தில் எழுதியவற்றில் தகவலாளி சொல்லும் அத்தனையையும் சேர்க்கவில்லை. தனக்கு தெளிவில்லாத, சந்தேகத்திற்கிடமான பகுதியை வெளிப்படையாக இது தனக்கு புரிந்துகொள்ளமுடியாத ஒன்றாக இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறார்.
இந்தப் புத்தகம் எதனால் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், கோயில்கள் என்றால் தல வரலாறு, அதைக் கட்டிய விதம், திருவிழாக்கள் போன்றவற்றைக் கடந்து அங்கு பணி செய்பவர்கள் வழியாக ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது. பல நூறாண்டுகளாக தீர்க்கப்படாத சிக்கல்கள், ஒரு சாராரின் வாழ்க்கை முறை, கலாசார பின்னணி போன்றவற்றோடு, ஒரு கோயில் என்பது நிர்வாக ரீதியாக மாறும்போது ஏற்படக்கூடிய மாற்றங்களையும் சொல்கிறது.
-Deepa Janakiraman