இலிங்காயத்துகளின் வாழ்வியல் :
தனித்த பண்பாட்டுச் சடங்குகளோடு வாழ்க்கை நடத்தும் இலிங்காயத்துக்கள் உழைக்கும் உழைப்பாளிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெளி உலகிற்குத் தெரியாமல் வாழும் இலிங்காயத்து இன மக்களிடம் இனப்பற்று, நிலவுடைமை, சொத்தின் அடிப்படையிலான இரத்த உறவுகள், திருமண குடும்ப உறவுச் சடங்குகள், உள்ளூர் சிறப்புப் பேசுதல் எனக் கட்டுக்கோப்பான நிலைகள் காணப்படுகின்றன.
முந்தைய சமூக அமைப்பின் நிலை கொண்டு அதையே வாழ்வுக்கு நிலையாகக் கருதும் இவ்வின மக்கள் சிலர் இன்றும் உள்ளனர். மாறி வரும் மக்கள் பண்பாட்டு நாகரிகம், இவர்களையும் வீழ்த்தி, சமமான ஆண் பெண் குடும்ப உறவு, நாட்டுப்பற்று,முற்போக்குக் கருத்துகள் போன்ற புதுமை கூறுகளுக்கு உயிரூட்டும் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
‘இலிங்காயத்துகளின் வாழ்வியல்’ எனும் தலைப்பில் பண்டுதொட்டு இலிங்காயத்து இனமக்கள் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரும்; வீடும் புழங்கு பொருட்களும், உணவு, தொழில்கள்,
கலைகள்,கல்வி,இறையுணர்வும் திருவிழாக்களும், இல்லறவாழ்க்கை மற்றும் நம்பிக்கைகளும் சடங்குகளும் போன்றவை வாழ்வியல் நோக்கில் கீழ் கண்டவாறு ஆராயப்படுகின்றன.
வீடும் புழங்கு பொருட்களும் :
நம் உணர்வுகள் வாழும் களமாக இப்புழங்கு பொருட்கள் உள்ளன. பண்டுதொட்டு காலத்திற்கேற்ப பல மாறுதல்களுடன் இப்புழங்கு பொருட்களைச் செய்து வருகிறோம். புழங்கு பொருட்களைக் கொண்டு அப்பொருள் சார்ந்த காலக்கட்டத்தின் பண்பாட்டையும், அக்கால கட்டத்தின் மக்களின் வாழ்வியல் முறைகளை மும் அறிய இயலும்.இலிங்காயத்துக்கள் சிக்கனமான வாழ்க்கையை உடையவர்கள். அவர்கள், வீடும், புழங்கு பொருட்களும் மிகவும் எளிமையானவை. தேவையானவை. இம்மலையில் உள்ள வீடுகள் பெரும்பாலும் கூரை வீடுகள்; ஓடு வீடுகள், அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகள்; 50 முதல் 100க்கும் மேற்பட்ட வீடுகளை உடைய ஊர்களும், 50க்கும் கீழ் உள்ள வீடுகளை உடைய ஊர்களும் இம்மலையில் காணலாம்.
புழங்கு பொருட்கள்:
இவர்களின் புழங்கு பொருட்களில் களி செய்வதற்காகப் பயன்படும் மண்பானை, கவைக்கோல், தேங்காய் மூடியில் செய்த அகப்பை, பரண், இராகிக்கல்,அடுப்பு, மரஉரல், உலக்கை, தானியக்குதிர், வேளாண்மைப் புழங்கு பொருட்கள் முதலியன வாகும்.
பரண் :
வீட்டிற்குள் பரண் அமைக்கப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டிலும் பரண் அமைக்கப்பட்டிருக்கம். இதனை இவர்கள் ‘அட்டாலிகள்’ என்கின்றனர். இப்பரண் 5 அடி உயரத்திற்கு மேலும் பரணை இரவில் படுத்துக்கொள்ளவும், விறகு, தானிய மூட்டைகளை வைக்கவும் பயன்படுத்துகின்றனர். பரண் மீது ஏறி இறங்க மூங்கில் ஏணியைப் பயன்படுத்துகின்றனர்.