நமது இந்து மதத்தின் இணையிலாத் தத்துவங்களை அடங்கிய வேதாகமங்கள் வடமொழியில் இருப்பதாலும், சாத்திரங்கள் பல செய்யுள் வடிவில் எல்லோரும் இனிது அறிந்து கொள்ள முடியாத முறையில் அமைந்திருப்பதாலும், அத்தத்துவங்களை யாவரும் நன்குணருமாறு எளிய இனிய தமிழில் ஓர் இந்துமத நூல் வெளியிட வேண்டுவது இன்றியமையாததாயிற்று.
இந்து மதத்தில் உள்ள அநேக கிளை மதங்களின் அடிப்படைக் கருத்து ஒன்றேயாயினும், அவை வேறுபட்டன போலப் பிரிந்து ஒன்றோடொன்று மாறுபட்டு ஒற்றுமை இல்லாதிருப்பது இந்து மதத்தின் பொதுவளர்ச்சிக்கு இடையூற்றினை விளைத்து வருகின்றது. ஆதலின், அக்கிளைகள் அனைத்தையும் இணைத்துப் பொதுக் கொள்கைகளை மேற்கொண்டு இந்து மதத்தை உருப்படுத்தி வளர்க்க வேண்டுவது அவசியமாகும். அது கருதியே இந்துமத இணைப்பு விளக்கம் எனும் இந்நூல் வெளியிடப் படுகின்றது.