பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரியும் நூலாசிரியர் , தனது சொந்த ஊரைப் பற்றி கரோனா காலத்தில் எழுதி முடித்த நல்லதொரு வரலாற்று நூல் இது. சேலம் மாவட்டத்தை அறிந்திடும் வகையிலே இருக்கும் வகையில், இடைப்பாடியின் சுற்றுப்புறப் பகுதிகளைப் பற்றியும் நூல் எடுத்துரைக்கிறது.
வரலாற்றில் இடம்பெற்றிராத இந்த ஊர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபோது வட்டத் தலைநகராகிறது என்றும் தற்போது முக்கிய நகரமாக விளங்கிவருகிறது என்பதை தக்கத் தரவுகளுடன் நூலாசிரியர் விவரிக்கிறார்.
இடைப்பாடியின் பெயர்க் காரணம், ஊர் அமைப்பு, இந்தப் பகுதியை ஆண்ட மன்னர்கள், 17-ஆம் நூற்றாண்டில் இங்கு தோன்றிய மாதா ஆலயங்கள் தரும் செய்திகள், கெட்டி முதலான அரசர்கள், 17,18-ஆம் நூறாண்டுகளில் மைசூரு மன்னர்கள் அளித்த கொடைகளும் நன்கொடைகளும், ஜமீன்தார்கள் ஆட்சி, மூன்றாம் மைசூர் போர், இடைப்பாடியில் நீதிமன்றமும் சுங்கச்சாவடியும், கிழக்கிந்திய கம்பெனியும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியிலும் இடைப்பாடி பெற்ற முக்கியத்துவம்… என்று அந்த நகரின் சுதந்திரம் அடைந்தவரையில், “ஏ டூ இசட்’ தகவல்களைத் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.
நூலுக்கு துணை நின்ற நூல்களின் பட்டியலும் இருப்பதால், கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோருக்கு வழிகாட்டுதலாகவேஇருக்கிறது. இந்த நூல் முதல் பாகம் என்று முடித்துள்ளார். படித்து முடிக்கும்போது, அடுத்த பாகத்தையும் படிக்க வேண்டும் என்ற விறுவிறுப்பையும் ஏற்படுத்திவிடுகிறார். ஒவ்வொரு ஊரைப் பற்றியும் வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்பதை இந்த நூல் கோடிட்டு காட்டாத செய்தி.