நான் நினைத்துப் பார்க்கிறேன். இஸ்லாமியக் கூட்டங்களில் பேசும் பலரும் பெருமானார் கூறிய புகழ் பெற்ற ஒரு வாசகத்தைக் கூறுவார்கள். அது தான் ‘சீனாவுக்குச் சென்றேனும் சீர் கல்வி பெறுக’ என்ற வாசகம். கல்வியின் முக்கியத்துவத்தை மட்டும் எடுத்துக்கூறும் வாசகமாக பலரும் கருதும் வகையில் நான் இவ்வாசகத்தைக் கருதவில்லை. நான் எப்போதுமே நாயகத் திருமேனி கூறிய வாக்குகளை அப்படியே பார்ப்பதில்லை. ஏன் இப்படிக் கூறியுள்ளார்? இதற்கு வேறு ஏதேனும் பொருள் இருக்க முடியுமா? எனப் பல கேள்விக் கணைகளை எழுப்பி, அவற்றிற்கு விடை காணும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபடுவேன்.
நல்ல கல்வி என்றால் அதைப் பெற உலகின் நாகரிகத் தொட்டிலாக அன்று புகழ்பெற்று விளங்கிய எகிப்து நாட்டுக்குச் செல்லப் பணித்திருக்கலாமே? தத்துவச் சுரங்கமாக விளங்கிய கிரேக்க நாட்டிற்குப் போகச் சொல்லியிருக்கலாமே? தவ்ஹீதின் பிறப்பிடமாக, ஏகத்துவத்தின் தாயகமாக பெருமானாரால் போற்றிப் புகழப்பட்ட இந்தியாவிற்குச் சென்று கல்வி கற்க அறிவுறுத்தியிருக்கலாமே? இங்கேயெல்லாம் இல்லாத அப்படி என்ன சிறப்புக் கல்வி சீனாவில் இருந்தது?