தலித் மக்களின் உணர்விலும் வாழ்க்கையிலும் மஹத் ஈடிணையற்ற தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமையை நிலைநாட்டுவதற்காக தலித்துகள் மற்றத்தில் நடத்தியதும் டாக்டர் அம்பேத்கரின் காவியத்தன்மை வாய்ந்த ஆளுமையுடன் இணைந்திருந்ததுமான அந்தப் போராட்டம் வரலாற்றில் குடிமை உரிமைக்காக நடத்தப்பட்ட முதல் போராட்டங்களிலொன்று எனக் கூறமுடியும். அவப்பேறாக, இது நாட்டார் வழக்காற்றியல் பதிவுகளுக்குள் முடங்கிப் போயிற்று. அதைப் பற்றிய விரிவான விவரணை, துண்டு துண்டாய்ச் சிதறிக் கிடக்கின்றது. அந்தச் சிதறல்களும் பெரும்பாலும் மராத்தி மொழிபிலேயே உள்ளன. பாபாசாகேப் அம்பேத்கரின் தலைமையிலான தலித் இயக்கத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்படியாக மஹத்தில் 1927ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டு மாநாடுகள் பற்றிய ஆவணக் காப்பகத் தரவுகள் உள்ளிட்ட பல மூலாதாரங்களைப் பயன்படுத்தி, அந்தப் போராட்டத்தைப் பற்றிய முழுச் சித்திரம் பரந்த அளவிலான வாசகர்களை அடையச் செய்யும் வகையில் இந்த நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மஹத் போராட்டத் தினுடைய வரலாற்று முக்கியத்துவத்தை வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு உதவியாக, அதை அதனுடைய வரலாற்றுச் சூழமைவில் வைத்து விளக்குவதற்கு இந்நூல் முயலுகின்றது. அந்துடன், இந்தப் போராட்டத்தின் வரலாற்றிலிருந்து, தலித் இயக்கத்தின் எதிர்காலத் திசை வழியைத் தீர்மானிப்பதற்கான சில படிப்பினைகளைப் பெறவும் முயல்கிறது.
மஹத்தில் முதல் மாநாட்டை முன்னின்று அமைத்து நடத்தியவரான தோழர் ஆர்.பி. மொரெவின் மூல விவரணைகள் இப்புத்தகத்தில் கூடுதல் உள்ளடக்கமாக அமைகின்றன.