நட்டாரியம் – வேங்கடசாமி நாட்டாரின் நற்றமிழ் ஆய்வுத்தளங்கள்
நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் (ஏப்ரல் 2, 1884 – மார்ச் 28, 1944) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழிலக்கிய வானில் ஒளி வீசிய ஒரு பேரறிஞர் ஆவார். சிறந்த சொற்பொழிவாளராகவும், கூரிய ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய இவர், “நாவலர்” என்ற பட்டத்தால் சிறப்பிக்கப்பட்டார்.
தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டத்தில் உள்ள நடுக்காவேரி எனும் சிற்றூரில் முத்துச்சாமி நாட்டார் – தையலம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய இவர், பின்னர் சுயமாகவே தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரவேசப் பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய தேர்வுகளில் முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்று, வள்ளல் பாண்டித்துரைத் தேவரின் கரங்களால் தங்கத் தோடா பெற்றார்.
தனது இருபத்து நான்காம் வயதில் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கிய நாட்டார், பின்னர் கோயம்புத்தூர் தூய மைக்கேல் மேல்நிலைப்பள்ளி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எனப் பல்வேறு கல்வி நிறுவனங்களில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, தமிழ்ப் பணியில் முத்திரை பதித்தார். கரந்தைப் புரவர் கல்லூரியில் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகவும் சேவையாற்றிய பெருமைக்குரியவர்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் போன்ற தமிழறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். சிலப்பதிகாரம், தொல்காப்பியம் ஆகியவற்றில் பாரதியாருக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தீர்த்து வைத்த பெருமை இவருக்கு உண்டு. பெரும்புலவர் மு. இராகவய்யங்காரின் “வேளிர் வரலாறு” நூலில் இருந்த பிழைகளைச் சுட்டிக்காட்டி, தமிழறிஞர்களை ஏற்கச் செய்த இவரது ஆய்வுத் திறம் குறிப்பிடத்தக்கது.
“வேளிர் வரலாறு”, “நக்கீரர்”, “கபிலர்”, “கள்ளர் சரித்திரம்”, “சோழர் சரித்திரம்”, “கண்ணகி வரலாறும் – கற்பும் மாண்பும்” போன்ற பல அரிய ஆய்வு நூல்களையும், கட்டுரைகளையும் படைத்துள்ளார். இவரது “நக்கீரர்” நூல் லண்டன், காசி, சென்னைப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டது. தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களால் பாராட்டப்பட்ட “கள்ளர் சரித்திரம்”, ஒரு சமூக வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது போன்ற எண்ணற்ற செவ்வியல் இலக்கியங்களுக்குத் தெளிவான உரைகளையும் எழுதியுள்ளார். குறிப்பாக, அதிவீரராம பாண்டியனின் வெற்றிவேற்கை, ஔவையாரின் கொன்றை வேந்தன், மூதுரை, ஆத்திசூடி, நல்வழி போன்றவற்றிற்கு இவர் எழுதிய பதவுரையும் பொழிப்புரையும் மிகவும் புகழ்பெற்றவை.
இவரது சொற்பொழிவாற்றலைக் கண்டு வியந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், 1940-ஆம் ஆண்டு இவருக்கு “நாவலர்” எனும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. தமிழுக்கெனத் தனியாகப் ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்று எண்பது ஆண்டுகளுக்கு முன்னரே கனவு கண்ட தொலைநோக்குப் பார்வையாளர் இவர். அவரது நினைவாகத் தஞ்சாவூரில் 1992-இல் “நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி” நிறுவப்பட்டது. தமிழக அரசு அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கிப் பெருமைப்படுத்தியுள்ளது. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், தமிழாய்ந்த அறிஞராக, உரையாசிரியராக, சொற்பொழிவாளராகத் தமிழுக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை.